திங்கள், மார்ச் 26, 2007

மனிதாபிமானம்!!!

சென்ற வாரம் நான் பெங்களுர் இந்திராநகர் காவல் நிலையம் அருகில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது பின்னால் வந்த ஸ்கூட்டர் லேசாக இடித்துவிட்டது. இரண்டு வாகனங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதன் பின் நடந்த நிகழ்ச்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கா‍ரை ஓட்டி வந்த நன்றாக உடையணிந்த நடுத்தர வயது மனிதர் உடனே இறங்கி வந்து ஸ்கூட்டரில் இருந்த இளைஞரை "பளார் " என்று கன்னத்தில் அடித்துவிட்டு வாயில்வந்தவாறு திட்டுகிறார். அந்த இளைஞருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எல்லோரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இளைஞரது முகத்தை பார்க்கவே பரிதாபமாகயிருந்தது. எதுவும் பேசாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்.

காரில் வந்தவருக்கு கோபம் வருவது தப்பில்லை ஏனென்றால் தன்னுடைய புதிய காரை இடித்துவிட்டான். தவறு யார்மேல் இருந்தாலும் அதனால் ஏற்படும் கோபத்தை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தியிருக்கலாம். அந்த
இளைஞன் திருப்பி அடித்திருந்தால் அந்த நிகழ்ச்சி கொஞ்சம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் அவன் என்ன நினைத்திருந்தானோ ‍தெரியவில்லை அமைதியாக சென்றுவிட்டான்.

பெங்களுர் போன்ற தகவல்தொழிலநுட்ப நவீன நகரத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி எங்கோ செல்கிறது. எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும் மக்களின் மனங்கள் மட்டும் தன்னலத்தைவிட்டுவிட மறுக்கின்றன. பெங்களுர் நகர வீதிகளில் வளர்ந்துவரும்
தகவல்தொழிலநுட்பத்தோடு வசதி வாய்ப்பிற்கு ஏற்றாற்போல் மக்களும் தங்களின் நடை உடை தோற்றங்களை மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். ஆகட்டும் அதை நான் இப்பொழுது குற்றம் கூறுவதற்கில்லை, ஆனால் அவர்களின் வெளிதோற்றத்திற்கு ஏற்றாற்போல் உள்மனங்களை ஏன் மாற்ற மறந்துவிடுகிறார்கள். இன்றைய மக்களின் மனங்களில் மனிதாபிமானம் என்ற உணர்வு மங்கிபோய்விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.

செவ்வாய், மார்ச் 20, 2007

நிலாச்சோறு!!!


நிலாச்சோறு என்றவுடன் நம் எல்லோருக்கும் சிறுவயது ஞாபகம் வருவது இயற்க்கை. நாம் சோறு சாப்பிட மறுக்கும் ‍ஒவ்வொரு முறையும் அம்மா நமக்கு நிலவை காட்டி அதில் ஓளவை பாட்டி கம்பு வைத்துக்கொண்டு ‍வெற்றிலை சாப்பிட்டு கொண்டு இருப்பதாக கதை சொல்லி நமக்கு சோறு ஊட்டுவாள். பிறகு அமாவாசை நாட்களில் கூட நிலவை காட்டினால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து அழுத நாட்கள்...

கொஞ்சம் வளர்ந்த பின்பு நாம் நம் நண்பர்களோடு சேர்ந்து வீட்டு முற்றத்தில் கூட்டாஞ்சோறு சாப்பிட்ட பிறகு ஆளுக்கொரு கதை சொல்லி விளையாண்ட நாட்கள், மறுநாள் புதிதாக கதை சொல்வதற்காக அப்பாவிடம் கதை சொல்ல சொல்லி அடம்பிடித்த நாட்கள், நிலவொளியில் பக்கத்து வீட்டு பசங்களோடு சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடி பள்ளிக்கூட வீட்டுப்பாடத்தை செய்ய மறந்து கணக்கு வாத்தியாரிடம் பிரம்படிபட்ட பசுமையான நாட்கள், பிறகு வீட்டின முற்றத்தில் கட்டிலில் தம்பிகளோடு சேர்ந்து நிலவை ரசித்தபடி ஏதேதோ பேசி மகிழ்ந்து அப்படியே தூங்கிபோன நாட்கள்.. முழுநிலா காலங்களில் நிலவொளியில் படுத்தபடி நெல்லை வானொலியின் நிலா பாடல்களில் நி‍ைனவை மறந்த நாட்கள்...

‍அப்பப்பா..நிலவோடு இணைந்த நினைவுகள் இன்னும் ஏராளம்.. நிலவே சிறுவயது நினைவுகளை என் சிந்தைக்கு கொண்டு வந்து செல்லும் ‍உன்னோடு பயணிக்கையில் இந்த உலகத்தையே மறக்கின்றேன்!!!