திங்கள், டிசம்பர் 31, 2012

நாட்குறிப்பு 2012 (டையரி)

ன்று நீஆனந்தமாய்
வந்தாய் என் கையில்,
ஆசையோடு எழுதி வைத்தேன் என் பெயரை
அழகிய உன் முகப்பில்!

புத்தாண்டு தீர்மானங்கள் இன்னதானென்று
புதிதாய் கிடைத்த உன்னில் எழுதிகொண்டேன்!

முதலொரு வாரம் இதன்படி செய்யென்று
முத்து முத்தாய் எழுதி வைத்தேன்.
பின்னொரு வாரம் கடமையென
முன்னும் பின்னும்,
கிறுக்கலானது கையெழுத்து...

நாளை நாளையென்று நழுவி சென்றேன்,
பின் அலமாரியில் ஓர் அங்கமானாய்.
அவ்வப்போது தூசி தட்டி
அடுக்கி வைக்கும் பொருளானாய்..

இன்று,
அடுக்கி வைத்த புத்தகங்களை
சுத்தம் செய்த போது,
ஏளனமாய் சிரித்தாய் நீ
உன் கேள்விகள் எனக்கு புரிகிறது,
விடை தெரியாமல் இன்று நீ
விடை பெறுகின்றாய்..

நாளைக்கு புதிதாய் ஒன்று
மறுபடியும் புத்தாண்டு தீர்மானங்கள்..

                                      -  மே.இசக்கிமுத்து..

திங்கள், டிசம்பர் 24, 2012

காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு...

 
            பள்ளி பருவத்தில் நாம் படித்து, ரசித்து, பாடிய பாடல்களை இப்போது நாம் நினைவுபடுத்தி பார்க்கும் போது அதில் கிடைக்கும் சுகமே தனி தான். நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்றுவிடும், ஒரு வித ஏக்கம் நம் மனதில் வந்து குடியேறிவிடும். அந்த வகையில் நான் முதல் வகுப்பில் படித்த போது தமிழ் பாட புத்தகத்தில் கடைசி பக்கத்தில் இந்த தாத்தா பாட்டு இருந்தது என்று நினைக்கிறேன். கடைசி வரியில் தாத்தா தும்முவதாக வரும் போது ஆசிரியை முக பாவத்தோடு தும்மல் போட்டு சொல்லி தந்ததும், நாங்களும் தும்மி தும்மி விளையாடியதும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இந்த பாட்டு உங்களுக்கும் ஞாபகம் வருமானால் வாருங்கள் நாம் நம் பள்ளி பருவத்திற்கே சென்றுவிட்டு வருவோம்....
 
 
காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு
காடு போல தாடியாம்
மாடி மேல நிக்கும் போது
தாடி மண்ணில் புரளுமாம்
 
ஆந்தை ரெண்டு கோழி மைனா
அண்டங்காக்கா குருவிகள்
பாந்தமாக தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டு நின்றன
 
உச்சி மேல நின்ற தாத்தா
உடல் குலுங்க தும்மினார்
அச்சும் அச்சும் என்றபோது
அவை அனைத்தும் பறந்தன...

திங்கள், டிசம்பர் 17, 2012

அழியப் போகிறதாம்...

உலகம் அழியப் போகிறதாம்,
உறக்கத்தின் உலறல்களாய்
உலகெங்கும் இவ்வாண்டே இறுதியென்று
இங்கும் எங்கும் ஒரே பேச்சு!


பிறர் மேல் பழி போட்டு
பழகிவிட்ட மனதனே, உன்னால் தான்
பூமியாகிய நான் கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து கொண்டிருப்பதை
அறியாதது ஏனோ?


மரம் நின்ற இடத்திலெல்லாம்
வானுயர்ந்த மனைகள் செய்தாய்,
வானம் பொய்த்த பின்னர்
வாடிய முகத்தோடு மழை வேண்டி
ஆடு கோழி படையலிட்டு
அக்கறையாய் பூஜை செய்தாய்!


அன்பெனும் மந்திரம் இருக்கும் போது
ஆயுதத்தால் தந்திரம் செய்தாய்!
அடக்கி ஆளும் போர் குணத்தால்
அனு ஆயுத சோதனை பல முறை..
ஐயோவென்று அழுதிருக்கிறேன்
வலியினால் அல்ல,
வளங்களெல்லாம் அழிய போகிறதே - மக்கள்
வாழ்வு மாயப்போகிறதேயென்று!


நிதம் நிதம்
நேரமில்லை நேரமில்லையென்று
துரித உணவிற்கு மாறிவிட்டாய்,
தூக்கி வீசப்பட்ட காகிதங்களை
ஜீரணிக்க இயலாமல்
மக்காத குப்பைகளாலும்
இரசாயன கழிவுகளாலும்
ரணமாகி விட்டதடா என்னுடல்!


உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணத்தால் தவிக்கிறேனே,
சில நேரம்
தாங்க முடியாமல் தள்ளாடியிருக்கிறேன்.
கொஞ்சம் கொஞசமாய் காயப்படுத்துகின்றாய்,
தஞ்சமென வந்த உயிர்களை மறந்து
கோபத்தால் குலுங்கியிருக்கிறேன்,
கண்ணில் நீர்குளம் வழிந்தோட!


பூமித் தாய் என்கிறாய்,
பொறுமைக்கு இலக்கணமென்கிறாய்,
மாய வார்த்தைகளால்
என் காயங்கள் ஆறவில்லை!


பருவம் வந்த குமரிப் பெண்ணாய்
கும்மாலமிட்ட நதிகளெல்லாம் - உன்
சுயநல சிந்தனையால்
கூனி குறுகி மழை தேங்கும்
குட்டைகளானதடா!


செவ்வாயில் வாழ்ந்திட
ஆராய்ந்து பார்க்கிறாய்,
நிலவிலும் உன் ஆதிக்கம் வேண்டுமென்கிறாய்,
நீ வாழும் பூமியை மட்டும்
ஏன் மறந்து போகிறாய்??


உலகம் அழியப் போகிறதாம்,
உறக்கத்தின் உலறல்களாய்
உலகெங்கும் இவ்வாண்டே இறுதியென்று
இங்கும் எங்கும் ஒரே பேச்சு!

                                - மே. இசக்கிமுத்து..