செவ்வாய், ஜூலை 15, 2014

காக்கை


வாடாச்சி மர உச்சியில்
கூட்டிலிருந்த குஞ்சுகள்
காற்றடி காலத்து கிளையசைவில்
கலவரப்பட்டு கரைந்தபோது
சென்றிருந்த தாய் காகம் 
படபடத்து மூச்சிரைக்க
முட்டி மோதி முன்னே 
வந்து நிறகும்!

துணிவு கொண்ட பிஞ்சு ரெண்டும்
தத்தித் தாவி தனியே 
இறக்கையடித்து பறந்து பழகி
கிளையினில் மீண்டும் 
வந்துமரும்!

கருவேல முற்கள் கூடு
காற்று கொண்டு சென்றதன்று,
கூடிருந்த கொப்பை மட்டும்
வளர்ந்து விட்ட காக்கை ரெண்டும்
வந்து வந்து பார்த்துச் செல்லும்!

உயிர் காக்க இரை தேடி
ஊர் முழுக்க பறந்து சென்று
உறவுவென்ற மற்றொன்றை
மறந்து சென்றதொரு காக்கை!
தணியாத கடலலையாய்
தவிப்பாய் திரிந்தது மற்றொன்று!

இன்றும் கூட,
மொட்டை மர உச்சியில்
தன் கூடிருந்த கொப்பில் 
கொஞ்ச நேரம் வந்தமர்ந்து
கரையாத நினைவுகளில்
நிதமும் கரைந்து விட்டு போகும்
அந்த காக்கை!

                                  - மே.இசக்கிமுத்து..

புதன், ஜூலை 09, 2014

பார்த்திபன் கனவு


ரண்டு வாரத்திற்கு முன்னால் படிக்க அரம்பித்த கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு, வரலாற்று புதினத்தை நேற்று இரவு தான் படித்து முடித்தேன். 

பொதுவாகவே ஒரு புதினத்தை வாசிக்கும் போது கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கற்பனை உருவம் கொடுத்து என் மனதினில் நிறுத்தி கதை களத்தினூடே அவர்களுடன் பயணிப்பேன். வாசித்து முடித்த பின்பு அந்த கதையின் தாக்கம் கொஞ்சம் நேரம் என் மனதினில் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் பார்த்திபன் கனவு புதினத்தை வாசிக்கும் போது என்னை அறியாமலேயே கதை மாந்தர்களுடன் உணர்ச்சிமிகுந்த ஒரு உறவாடல் ஏற்பட்டிருப்பதை வாசித்து முடிக்கும் போது தான் தெரிந்தது. வாசகர்களை வசியப்படுத்தும் கல்கி அவர்களின் எழுத்தின் ஆற்றலும் சரித்திரத்தில் உள்ள பாத்திரங்களையும் சம்பவங்களையும் நேர்த்தியாக புதினத்தில் புகுத்தியிருக்கும் விதமும் தான் இதற்கு முக்கிய காரணங்கள். 

பள்ளியில் வரலாற்றுப் புத்தகத்தில் நான் படித்த சோழர்கள், நரசிம்மவர்ம பல்லவர், புலிகேசி, பரஞ்சோதியார் மற்றும் சீன யாத்திரிகர் யுவான் சுவாங் போன்றோர் கதை மாந்தர்களாகவும் அவர்களை பற்றிய வரலாற்று குறிப்புகளுடன் சம்பவங்களும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. தன் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசராகிய பார்த்திப சோழன் போரில் இறக்கும் போது அவருக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற சிவனடியாராகவும் பல்லவ நாட்டு தலைமை ஒற்றனாகவும் வேடமிட்டு சோழ இளவரசர் விக்கிரமன் சுதந்திர சோழ நாட்டு அரசனாக உருவாக உதவிகள் செய்யும் போது, பாரத தேசத்தின் பெரும் பகுதிக்கு பேரரசனாக இருந்த நரசிம்மவர்ம பல்லவனின் உயர்நத குணம் யாருக்கு தான் வரும். 

சோழ அரசின் நம்பிக்கைக்குறிய விசுவாசியாக வரும் படகோட்டி பொன்னனும் அவன் மனைவி வள்ளியும் கதை முழுக்க வருகிறார்கள். இளவரசர் விக்கிரமனை பல இடங்களில் காப்பாத்தும் போதும், சோழ மகாராணி அருள்மொழி தேவியின் பொறுப்பு பற்றி எடுத்துரைக்கும் போதும், சோழ இளவரசர் விக்கிரமனை பல்லவ இளவரசி குந்தவியிடன் சேர்க்க மேற்கொள்ளும் காரியங்களிலும் படகோட்டி பொன்னன் நெஞ்சில் நிற்கிறான். 

இரண்டு வார காலம் சோழ நாட்டு பிரஜையாக உறையூரிலும், பல்லவ சக்ரவர்த்தியின் மாமல்லபுரத்திலும் சுற்றி வந்த உணர்வு இன்னமும் என்னுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

                                                                                                            - மே.இசக்கிமுத்து..