வெள்ளி, செப்டம்பர் 05, 2014

என் பள்ளி ஆசிரியர்கள்


         
ள்ளி பருவ நினைவலைகள் என் மனத்திரையில் எபபோதெல்லாம் சித்திரமாக வருகிறதோ அப்போதெல்லாம் என்னை மறந்து குதூகலித்து விடுகிறது உள்ளம். புத்தக படிப்போடு விளையாட்டு, வெகுளித்தனம் மற்றும் வேடிக்கைகளால் அறிவை ஆக்கப்பூர்வமாக வளர்த்துக் கொண்ட நாட்களவை. தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் இருக்கும் St.Charles English Medium Schoolலில் LKG முதல் ஐந்தாம் வகுப்பு வரையானஆரம்பப் பள்ளி நாட்கள் பெரும்பாலும் விளையாட்டோடு கலந்த நாட்களாகவே அமைந்தது. 

அதன் பின் தூத்துக்குடி மில்லர்புரத்தில் இருக்கும் St.Mary's Boys Hr.Sec.Schoolலில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான பள்ளி நாட்கள் இன்னமும் பசுமை மாறாமல் என் மனதில் நிறைந்துள்ளது. துள்ளித் திரியும் பயமறியா இளங்கன்றுகளுக்கு அறிவூட்டி அவை செல்ல வேண்டிய பாதைகளில் கரடுமுரடான கற்களை லாவகமாக கடந்து செல்வதெப்படி என்று புரிய வைப்பது போன்ற கடினமாக பணியை தான் எங்கள் பள்ளிஆசிரியர்கள் நற்கடமையென செய்து வந்திருக்கிறார்கள். அறிவுரைகளாகவும், அனுபவங்களை பகிர்ந்தும், மாணவர்களின் மனவோட்டத்தை அறிந்து கொண்டு அவர்கள் வழியிலேயே சென்று புரிந்து கொள்ள வைத்தும், நிறைய கண்டிப்புகளாளும், சில சமயம் தண்டனைகளாளும் எங்களை ஒரு வழிக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர்கள் எங்கள் பள்ளி ஆசிரியர்கள். ஆசிரியர் தினமான இன்று St.Mary's Boys Hr.Sec.Schoolலில் எனக்கு பாடங்கள் சொல்லி தந்து அறிவூட்டிய ஆசிரியர்களை நினைத்து பார்த்து மரியாதை செய்யும் விதமாக இப்பதிவை எழுதுகிறேன்.

VI - A பிரிவு - 1987 - 88 :-
ஆங்கிலம் மற்றும் கணிதம் (வகுப்பாசிரியர்) - திரு.பிச்சையா அவர்கள்
தமிழ் - திரு.ட்ருமேன் அவர்கள்
அறிவியல் - நாங்கள் இவரை சயின்ஸ் சார் என்று அழைத்து பழக்கப் பட்டதனால் பெயர் ஞாபகம் இல்லை.
சமூக அறிவியல் - திரு. ரெக்ஸ் அமர்தராஜ் அவர்கள்


VII - A பிரிவு - 1988 - 89:-
ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் (வகுப்பாசிரியர்) - திரு. ரெக்ஸ் அமர்தராஜ் அவர்கள்
தமிழ் - திரு. ஜார்ஜ் அவர்கள்
கணிதம் - திரு.ஜெயராஜ் அவர்கள்
அறிவியல் - திரு.சேவியர் இம்மானுவேல் அவர்கள்

VIII - A பிரிவு - 1989 - 90:-
ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் (வகுப்பாசிரியர்) - திரு. ரெக்ஸ் அமர்தராஜ் அவர்கள்
தமிழ் - திரு. ஜார்ஜ் பீட்டர் அவர்கள்
கணிதம் - திரு.செபஸ்டின் அவர்கள்
அறிவியல் - திரு. அந்தோனி பிச்சை அவர்கள்

IX - A பிரிவு - 1990 - 91:-
ஆங்கிலம் (வகுப்பாசிரியர்) - திரு. அருள் பிரகாசம் அவர்கள் (தலைமை ஆசிரியர்)
தமிழ் - புலவர் ராமச்சந்திரன் அவர்கள்
கணிதம் - திரு.ஜோசப் ராஜ் அவர்கள்
அறிவியல் - திரு. சின்னதுரை அவர்கள்
சமூக அறிவியல் - ஞாபகம் இல்லை

X - A பிரிவு - 1991 - 92:-
ஆங்கிலம் மற்றும் கணிதம்(வகுப்பாசிரியர்) - திரு.ஜோசப் ராஜ் அவர்கள்
தமிழ் - திரு. அல்போன்ஸ் வணக்கம் அவர்கள்
அறிவியல் - திரு. சின்னதுரை அவர்கள்
சமூக அறிவியல் - திரு.தியாகராஜன் அவர்கள்

XI (1992 - 93) மற்றும் XII (1993 - 94) - A பிரிவு :-
இயற்பியல் (வகுப்பாசிரியர்)- திரு. பாலசுப்ரமணியன் அவர்கள்
வேதியியல் - திரு. ஸ்டிபன் அவர்கள்
கணிதம் - திரு. ஜெயபாலன் அவர்கள்
உயிரியல் - திரு.சேவியர் இக்னேசியஸ் அவர்கள்
தமிழ் - திரு. அல்போன்ஸ் வணக்கம் அவர்கள்
ஆங்கிலம் - ஞாபகம் இல்லை

சில வகுப்பு ஆசிரியர்களின் பெயர்கள் ஞாபத்தில் இல்லை, என்னோடு இந்த வகுப்புகளில் படித்த நண்பர்கள் யாருக்காவது அந்த ஆசிரியர்களின் பெயர்கள் ஞாபகத்தில் இருந்தால் தெரியப்படுத்தவும். 

6 முதல் 12ஆம் வகுப்பு வரை வெவ்வேறான ஆசிரியர்கள்களிடம் பயின்றிருந்தாலும், சில ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை மற்றும் அவர்களின் குணாதியங்கள் காரணமாக அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தின் மேல் நமக்கு அதிக ஈர்ப்பு மற்றும் ஆர்வம் ஏற்படுவதுண்டும். சில சமயங்களில் அந்த தாக்கம் நம்முள் எப்போதுமே இருப்பதுண்டு. அந்த வகையில் நான் சொல்ல வேண்டுமானால், இரண்டு ஆசிரியர்களை சொல்வேன். எனக்கும் 9 ஆம் வகுப்பில் தமிழ் வகுப்பெடுத்த புலவர் ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் 10 ஆம் வகுப்பில் கணித வகுப்பெடுத்த திரு.ஜோசப் ராஜ் அவர்கள்.

புலவர் ராமச்சந்திரன் அவர்களின் கணீரென்ற குரலும், பாடங்களுக்கு இலக்கிய தேன் கலந்து சொல்லும் விளக்க உரையும் எங்களின் கவனம் வேறெங்கும் சிதராமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும். அவர் பாடம் நடத்துகிறார் என்றால் அமைதியாக கவனிப்போம். இலக்கிய கருத்துகளை எங்களின் ரசனைக்கேற்றவாறு சொல்லும் போது மேசையை தட்டி உற்சாகப்பட்டுக் கொள்வதுண்டு. எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, ஒரு முறை சிலப்பதிகாரம் பாடம் நடத்தும் போது அவரின் கணீரென்ற குரலால் " தேரா மன்னா செப்புவ துடையேன் " என்று சொன்ன போது பக்கத்து வகுப்பு கூட அமைதியானது. அவர் வகுப்பில் படித்ததனால் தான் எனக்கு இன்றும் தமிழ் இலக்கியத்தின் மேல் ஆர்வம் குறையாமல் இருக்கிறது.

ஒன்பதாம் வகுப்பு வரை கணிதம் என்றால் கடினமாகத் தான் இருக்கும் என்ற எனது நிலைப்பாட்டை மாற்றியவர், பத்தாம் வகுப்பில் கணித வகுப்பெடுத்த திரு.ஜோசப் ராஜ் அவர்கள். ஒரு பாடம் நடத்தினால் அந்த பாடம் எல்லா மாணவருக்கும் புரிகிறது என்று தெரிந்த பின்னர் தான் அடுத்த பாடத்திற்கு செல்வார். ஒவ்வொருவரையும் போர்டில் வந்து கணக்கு போட வைப்பார். வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் ஒவ்வொரு செல்ல பெயர் வைத்து விடுவார். வாரந்தோறும் வகுப்பு தேர்வு நடத்துவார். தவறாக செய்துவிட்டால் செல்லப் பெயர் சொல்லி திட்டி விடுவார், பின்பு மற்றொரு முறை சொல்லிக் கொடுப்பார். நானும் அவரிடம் திட்டு வாங்கி திட்டு வாங்கியே தான் என்னுடைய கணித அறிவை வளர்த்துக் கொண்டேன். 9ம் வகுப்பு வரை கணிதத்தில் 50 மதிப்பெண்னை தாண்டாத என்னையும் அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 94 மதிப்பெண் எடுக்க வைத்த பெருமை அவரையே சேரும். மேலும், என் வகுப்பு தோழன் வாஞ்சீஸ்வரன் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து எங்கள் மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கள் வகுப்பாசிரியர் திரு.ஜோசப் ராஜ் அவர்களுக்கும் எங்கள் பள்ளிக்கும் பெருமை சேர்த்த விஷயமாக அமைந்தது.

இந்த ஆசிரியர் தினத்தில் எனக்கு அறிவமுதூட்டிய ஆசான்களை நினைத்து பார்த்து மரியாதை செய்கிறேன்.

                                                                                                 - மே.இசக்கிமுத்து..