வியாழன், ஜனவரி 11, 2024

ஈரம்!

ரண்டு நாட்கள் 
கனமழை என்றார்கள்,
இடியுடன் தொடங்கிய தூறல் மழை
இரவெல்லாம் கொட்டித் தீர்த்தது !

ஓடுகளின் இடையிலிருந்து ஒவ்வொரு துளியாய்
பரப்பி வைத்த பாத்திரத்தில் நிரம்பி வழிந்தது !
ஓவென்ற பேய் மழையும் ஓய்ந்தபாடில்லை !

விடிந்து வந்து பார்க்கும் போது
வீதியெங்கும் வெள்ளக் காடு !
நடை வரை வந்த மழைநீர்
நடுவீட்டினுள் வந்துவிட்டால் ?
'அதெல்லாம் வராது போய் உட்காரு'
அம்மாவின் அதட்டலுக்கு அமைதியானேன் !

தாமிரபரணியில் வெள்ளமாம்,
குளங்கள் உடைந்துவிட்டதாம்,
மழை இன்னும் விடவில்லை,
அப்பா வந்து சொன்னார்கள் !
கொஞ்சம் யோசனை செய்வதற்குள்
குளங்களை உடைத்து வந்த வெள்ளநீர்
கொடூர முகத்தோடு கடகடவென
வீதியின் வழியே வீட்டினுள் நுழைந்தது !
வீட்டினுள் நுழைந்த வெள்ளம்
விறுவிறுவென முட்டளவை தொட்டது !

என்ன செய்ய எங்கே செல்ல
முடிவெடுக்கும் முன்னால்,
எதிர் வீட்டு சுந்தரியின்
அப்பாவும் அம்மாவும்
ஓடோடி வந்தார்கள் !
ஒரு கையில் தம்பியையும்
மறு கையில் என்னையும்
இழுத்துக் கொண்டு சென்றார்கள் !

அம்மாவும் அப்பாவும் 
அப்படியே நின்றார்கள் !
'வெள்ளம் வேகமா வருது
வெரசலா மாடிக்கு வாங்க'
குரல் வந்த திசை நோக்கி 
கொஞ்சம் தயங்கி தான் வந்தார்கள் !

வாசல் பெருக்குவதில் ஏற்பட்ட
வாய் தகராறில்
வருடக்கணக்கில் பேசாமல் இருந்தவர்கள்
ஆபத்து நேரத்தில் அத்தனையும் மறந்து
அழைத்துக் கொண்டு சென்றதில்
ஆனந்த கண்ணீர் அம்மாவின் கண்களில் !

மாற்று உடை தந்தார்கள்,
மழை பற்றி பேசினார்கள் !
நெடுநாள் சங்கதிகளை
நெஞ்சார பகிர்ந்தார்கள்!
உள்ளார்ந்த அன்போடு
உணவு சமைத்து தந்தார்கள் !

நானும் சுந்தரியும்
நாளெல்லாம் பேசிக்கொண்டோம் !
சிணுங்கி நின்ற தம்பிக்கு
சிரிக்க வைக்க கதைகள் சொன்னாள் !
செல்லமென்று முத்தமிட்டு
சோறும் அவளே ஊட்டி விட்டாள் !

மறுநாள் காலையில்
மழை கொஞ்சம் நின்றது,
வெள்ளம் வடிய தொடங்கியதும் -எங்கள்
வீட்டிற்கு வந்து பார்த்த போது
வெள்ளம் வேட்டையாடிய சுவடுகள்
உள்ளம் கனக்கச் செய்தது !
பொருட்கள் எல்லாம் பொதுமிக் கிடந்தது !
அப்பாவின் கையைப் பிடித்தபடி
அம்மா அழுகையை அடக்கிக் கொண்டாள் !

என்னை பார்த்த செல்ல பூனை
என் காலைச் சுற்றி வந்தது,
ஆசையோடு தடவிக் கொடுத்தேன்,
அதன் உடம்பெல்லாம் ஈரம் !
பேரிடர் நேரத்திலும் 
மானிட மனங்களில் 
மறையாமல் இருக்கும் ஈரம் போல !!

                                     - மே. இசக்கிமுத்து

வெள்ளி, டிசம்பர் 01, 2023

மழையென மாயம் !!


 ன்றாய் இரண்டாய்
ஒவ்வொரு துளியாய்
பூமியை தழுவிடும் மழைத் துளி!
புது மழையின் மண் வாசம்
புத்துணர்வாய் ஒரு பரவசம்!

குடை பிடித்து நடக்கும் போதும்
கொஞ்சம் நனைந்திடவே மனந்துடிக்கும்!
குளமென தேங்கும் நீரில்
கும்மாளமிட ஓடிடும் கால்கள்!
அங்குமிங்கும் பார்த்துவிட்டு
ஆசையாய் கால் நனைத்திட
ஆவலும் வந்திடுமே!

வருடம் முழுவதும்
வறண்டிருந்த வரப்போரம்
முதல் மழையின் மோகத்தில்
முகங்காட்டும் புது புற்களாய்,
மழைக்கால நினைவுகளெல்லாம் 
மனதை கொஞ்சம் வருடிச் செல்லும்!

துவளச் செய்திடும் துயரங்களை,
கலங்கச் செய்திடும் கவலைகளை,
மழையென மாயம்
மறக்கச் செய்திடும்!
மழலையாய் மகிழ்ச்சியில்
மனம் துள்ளிக் குதித்திடும்!!

                       - மே. இசக்கிமுத்து

வியாழன், நவம்பர் 09, 2023

ஒரு தோழியின் தேடல்!!




டிக்கடி பார்த்த முகமாய் இருந்த நீ
அறிமுகம் ஆனபோது சிரித்த முகமானாய்!
நட்பெனும் வானில் நகர்வலம் வரும்
நிலவு தோழன் நீ!

கண்ணியமான நட்பிது தான் 
காமம் இல்லா உறவிது தான் !
காணத் துடிக்கும் போது,
காதலின் வலி கொடுத்தாய்!
காணும் போது கண்ணால் பேசி
கலவரம் செய்தாய்!
நீ பேசா நாட்களில்
இரவுகளை நீளச் செய்தாய்!
நினைவுகளில் மூழ்கச் செய்தாய்!

அடுக்கடுக்காய் பேசும்போது
அக்கறையாய் கேட்டுக் கொண்டாய்!
மனக்குழப்பம் மறக்கச் செய்தாய்
மனங் குளிர மாயம் செய்தாய்!
வார்த்தைகளற்று நிற்கும் போது,
வாஞ்சையோடு புன்னகை செய்தாய்!

மணிக்கணக்கில் பேசும்போது
மனதில் மலரும் மகிழ்ச்சி!
சொல்ல மறந்ததையெல்லாம்
செல்பேசியில் பகிர்ந்து கொண்டோம்!

மௌனத்தை மொழி பெயர்த்தாய்,
மெல்லிசையாய் தலையசைத்தாய்!
என் குரலில் மயக்கம் என்றாய்,
ஜில்லென்று கிறங்கச் செய்தாய்!
பொக்கிஷம் நீ என்றேன்
பொத்தி வைத்துக்கொள் என்றாய்!

தாகத்தின் போது தண்ணீரானாய்,
துன்பத்தின் போது கண்ணீரானாய்!
தவித்திடும் போது தாயின் மடியானாய்!
துவண்டிடும் போது 
தந்தையாய் தைரியம் தந்தாய்!

குழம்பிய மனதிற்கு
குறி சொல்லி தெளிய வைத்து,
சரியென பட்டதை சட்டென சொல்லிடுவாய்,
தவறென தெரிந்ததை,
தக்க சமயத்தில் உணர்த்திடுவாய்!

எங்கே நீ இருக்கின்றாயோ,
என்னை நீ நினைக்கின்றாயோ!
நிழலென உன் நினைவுகள்,
நிதமும் என்னை தொடர்கிறதே!

இருக்குமிடம் தூரமங்கே,
இரவெல்லாம் பாரமிங்கே!
தொலைத்து விடவில்லை,
தொலைவில் தான் இருக்கின்றாய்!
இருப்பிடம் தெரிந்தாலும்,
இங்கே நான் தேடுகின்றேன்!

- மே. இசக்கிமுத்து