அன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள்
எத்தனை நாழிகைதான் வீட்டுக்குள்ளே விழுந்துகிடப்பது
எதைஎதையயோ நினைத்துக்கொண்டு!
கடற்கரையயோரம் காலார நடந்தால்
கவலைகள் காணாமல் போய்விடுமாம்,
கவலைகளை மறக்க, கற்பனையில் மிதக்க
கடற்கரையை நோக்கி நானும் சென்றேன்!!
மாலை இதவேளை கடற்கரை மனலில்
மனம் பதித்து, புல்வெளியில் தலைசாய்த்து
இதமான தென்றலுடன் இன்புற்றிருந்த என்னை
அழைத்ததொரு குரல்!
யாரடா அதுவென்று யோசிக்கும் வேளையில்
"நான் தான் மெரீனா" என்றாள் மெதுவாக என் காதினில்!
ஆச்சரியமாய் அதிசயித்துப் போனேன்!!
"கனிவான உன் முகம் கலையிழந்து காண்கிறதே
கவலைகொண்ட கன்னிபோல"
"ஆமென்றாள்" அக்கறையுடன்!!
"வேளைக்கு வேளை அழகுற மின்னும்
பருவப்பெண்ணாய் ெஜாலிக்கின்றேன் நானும்,
இருப்பினும் நெருஞ்சிமுள்ளாய் நெஞ்சிலோர் நெருடல்,
சொல்வதற்குத் துடிக்கின்றேன், கேட்பதற்கு யாருமில்லை,
நெடுநாளாய் தேடுகிறேன் நீயாவது கேட்பாயா?"
நேசத்துடன் நெருங்கினாள்!!
"பருவப்பெண்ணின் பைந்தமிழ் மொழியை
கேட்பதற்கு மறுப்புக்கூறும் மானிடருண்டோ?
மனிடருக்கு மட்டும்தான் மனக்கவலை உண்டென்று
மனதில் நினைத்திருந்தேன், மனந்திறந்து சொல் பெண்ணே
உன் மனக்கவலை தீரமட்டும் "
சற்றே எழுந்து நானும் அமர்ந்துகொண்டேன்!!
நேர்எதிரே அமர்ந்துகொண்டாள்
காற்றில் கலைந்த கருங்கூந்தலை சரிசெய்தபடி!!
என்னை நம்பித்தான் எத்தனையோேபரின் வாழ்க்கை
ஏததோ செல்கிறது ஏரியில் ஏறிய ஓடம் போல!
சுண்டல் விற்கும் சுட்டிப்பையன்,
பெட்டியிலிருக்கும் சுண்டல் தீர்ந்தால்தான்
ஒட்டியிருக்கும் வயிற்றுக்கு ஒருவேளை உணவுண்டு!
வெயிலென்றும் சுடுமணலென்றும் பாராமல்
வெறுந்தலையில் அவன் சுமப்பது சுண்டல் மட்டுமல்ல,
விடைதெரியா வாழ்க்கையையும் சேர்த்துதான்!!
மூன்றை வீட்டில் விட்டுவிட்டு
நான்காவதை இடுப்பில் இடுக்கிக்கொண்டு
இங்குமங்கும் கூடையுடன் கூடும் கூட்டத்தினுடே
பூ விற்கும் ராமக்கா!!
சைக்கிளிலிருக்கும் "டீ"யை தீருமட்டும் விற்காமல்
வீடுபோய் சேர்வதில்லை வீராப்பாய் சுற்றிவரும் வெள்ளையன்!
இவர்கள் மட்டுமல்ல,
கூட்டத்ததோடு கூட்டமாய் மறந்திருக்கும்போது
மறக்காமல் பணம் பறிக்கும் பாதகர்களுக்கும் நானே அடைக்கலம்!!
உணவிற்கே வழியில்லை உடைகளை பற்றிய கவலை எதற்கென்று
கையேந்திய களைப்பில் பிச்சைக்காரர்கள்
நேற்றுண்ட ரொட்டியின் நினைப்பில் நித்திரையில்!!
கவலைக்கு மருந்தென்றும்
ஆறுநாள் உழைப்பின் அலுப்பிற்கு ஆறுதலென்றும்,
சொர்க்கத்திற்கு வாயிலென்றும்
மதுவுண்டு தன்நிலை மறந்து மயங்கிக் கிடக்கும் மனிதர்கள்!!
ஆயிரம் பிரச்சனைகளால் அல்லாடித்திரிந்து
மன அமைதியை தேடி, மனக்கவலை மறந்து மனலில் அமர்ந்து
ஏக்கத்துடன் எதைஎதையோ நினைத்து
பெருமூச்சிவிடுவர் சிலர்!!
நேரம் கிடைக்கவில்லை என
நிதமும் புலம்பும் மனிதர்களிடையே
அலுவல்கள் பல இருந்தும் நேரம் போகவில்லை என்று
சோம்பலுக்கு புதிய அர்த்தம் கூறும் சிலர்!!
வளமான வாழ்வுக்கு வாயில்
சென்னையில் உள்ளதென எண்ணி
அஞ்சரை பெட்டியில் அப்பாவுக்கு தெரியாமல்
ஐந்தைந்தாய் சேர்த்து வைத்த அம்மாவின் பணத்தை
அப்படியே எடுத்துக்கொண்டு
ஆயிரம் கனவுகளோடு ஓடி வந்தவர்கள்
வேலை தேடி தேடி வியர்வைதான் மிச்சமென உணர்ந்தவர்கள்
சொந்த ஊர்போய் சேரலாமா, போராடி வாழலாமா?
முடிவெடுக்கும் முயற்சியில் முழுவதுமாய் மறந்தவர்கள்!!
வீட்டில் நிறுத்திய சண்டைகளை தொடர
தோதான இடமாக நான் சிலருக்கு!
குழந்தைகளை ஏமாற்றிவிட்டு
குதுகலமாய் சுதந்திரகாற்று வாங்க,
குழந்தைகளை கூட்டிவந்து விளையாட விட்டுவிட்டு
வீட்டுப்பிரச்சணையை விவாதிக்க
தம்பதிகள் இங்கு வருவதுண்டு!!
காதலென்று கூறிக்கொண்டு கைகோர்த்து
எதைஎதையோ பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும்,
சின்னதாய் சினுங்கிக்கொண்டும்,
இவர்கள் பள்ளியில் பயில்பவர்களா இல்லை கல்லூரி செல்பவர்களா?
குழம்பியிருக்கிறேன் அடிக்கடி!!
இளசுகளின் இளமைதுள்ளும் இந்த காட்சிக்காக
கூடுமொரு கூட்டம் அந்திப்பொழுதினில்
சிறியதாய் உள்ள சுவர்களின்மேல் கையில் சுண்டலலோடு!!
உண்டுவிட்டு உதறிய உறைகளையும்
கண்ணாடி காகிதங்களையும் ஜீரணிக்க முடியாமல் எத்தனைமுறை
கண்கலங்கியிருக்கிறேன் தெரியுமா?
பாசங்கொண்ட கடலன்னை
அலைக்கரத்தால் நொடிக்கொருமுறை என்னை
சுத்தப்படுத்திய போதிலும்
சுயநல மனிதர்களால் அசிங்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறேன்!!
அரசியல் அறிக்கைகளும்
ஆன்மீக வேதங்களும் அத்துப்பிடி எனக்கு, ஆம்
அரசியல் கூட்டமா? ஆன்மீக ஆராதனையா?
அத்தனைக்கும் அடைக்கலம் நானே!!
கூட்டணி உதயமென்று கட்டியணைத்து கையசைத்து
கற்கண்டு சொற்களால் ஒருவரையொருவர் புகழ்ந்துகொள்வர்,
அடுத்த நாளே, கூடிக்களித்த நண்பர்கள்
குற்றங்கள் குறைவின்றி அள்ளி வீசுவர் குப்பை வார்த்தைகளால்
கூட்டணி முறிந்ததாம்!!
தேர்தல் திருவிழா என்றால் தொலைந்தது என் நிம்மதி!!
கடவுள் கடவுளென்று கண்விழித்து
கைதட்டி நடக்குமாரு கூட்டம்,
எங்கடா கடவுளென்றும், எல்லாம் கற்பனையென்றும்
எக்காளமாய் கூடும் மற்றொரு கூட்டம்
இரண்டிற்கும் கைதட்டி ஆர்பரிக்கும் மக்களுண்டு!
சிந்திக்க மறந்த மனிதர்களின் மீது
மலையென கவலை என் மனதிலுண்டு!!
மலையென்றாலும் வெயிலென்றாலும்
மலைக்காமல் சிலைகளாய்
வரிசையாய் அணிவகுக்கும் தலைவர்கள்!
சுதந்திர தினத்தன்றும் பிறந்தநாளன்றும் தான்
சுயநலவாதிகளால் சுத்தப்படுத்தப்படுகிறார்கள்!!
சுனாமி வந்துபோன சுவடுகளை
அழிக்க முடியாமல் அழுது புலம்புகின்றேன் பலநாள்!
அந்த கருப்பு ஞாயிறின் கண்ணீர் கதறல்களை
மறக்கத்தான் முடியுமா?
"இன்னும் சொல்வதென்றால்
இருக்கிறது ஆயிரம் கவலைகள்
இருட்டாகிவிட்டதால் போதும் இன்றைக்கு"
கண்களை துடைத்துக்கொண்டாள் கலக்கத்தோடு!
"வருகிறேன்" என்றேன் பிரியா மனதுடன்!
"கடைசியாக ஒரு கேள்வி,
என் கவலைகள் தீர வழி ஒன்று சொல்" என்றாள்
"பேரூந்து வந்துவிட்டது நாளை சொல்கிறேன், வருகிறேன் இப்பொழுது"
நைசாக நழுவிக்கொண்டேன், நடைமுறை இதுதானே!!
இன்றும்கூட சென்னை சென்றால்
மெரீனா என்றால் கொஞ்சம் பயம் தான்!!