வெள்ளி, பிப்ரவரி 29, 2008

பள்ளி நாட்களில் - 1

ள்ளி பருவம் துள்ளல்கள் நிறைந்த பருவம். கவலைகள் மனதில் ஏதுமின்றி கவிதை வரிகளாய் அங்குமிங்கும் அழகாய் தெரியும் விபரம் அறியாத சிறுவயதில் வீட்டை நினைத்து பள்ளிக்கு செல்வதை பயமாய் பார்த்திருப்போம். வளர வளர பள்ளி வாழ்க்கை இனியதாய் அமைந்துவிடும். வார இறுதி நாட்கள் கூட ஆசிரியர் இல்லாமல் அசைய மறுத்துவிடும், பள்ளி நண்பர்கள் இல்லாமல் நீண்டு நின்றுவிடும். பள்ளி பருவம் கடந்து பல வருடங்கள் சென்றாலும் நினைத்த நேரத்தில் பள்ளி நினைவுகள் மனமெங்கும் பசுமையாய் படர்ந்துவிடும். பாடம் படித்த வகுப்பறைகள், ஓடி களைத்த விளையாட்டுத் திடல், வேப்பமரத்தடி பாடங்கள், உண்டு களித்த மதிய வேளை, கைகோர்த்த நண்பர்கள், அரவணைத்த/அடி‍‍கொடுத்த ஆசிரியர்கள் அத்தனைபேரும் அருகிலிருப்பதாய் ஆனந்தித்திடுவோம்.
அடிக்கடி நம் மனம் பள்ளி நாட்களை அசைபோட்டாலும், இயந்திரமாய் இயங்கும் இந்த அவசர காலத்தில் அந்த பசுமை நினைவுகளில் சில மறந்து போய்விடுமோ என்ற உணர்வு என்னுள் பலவேளை எழுவதுண்டு. அதனால் தான் என்னுடைய மனக்கடலில் எழும் நினைவலைகளை வலைதளத்தில் பதிவு செய்ய தீர்மானித்து இந்த அறிமுக பதிவோடு தொடரயிருக்கிறேன். என்னுள் எழும் நினைவலைகள் உங்களையும் உங்கள் பள்ளி நாட்களுக்கு ‍அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையோடு அடுத்த பதிவில் தொடர்கிறேன்..(தொடரும்..)