நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 02, 2024

உன் பிரிவு என்ன செய்திடும்?



உன் பிரிவு என்ன செய்திடும்?
நீரில் விழுந்த எறும்பாய்
நிதமும் தத்தளித்தே தவித்து நிற்கும் !
நீந்தி வர நினைத்தாலும் 
மனமெங்கும் மனஸ்தாபம் மல்லுக்கட்டும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
பேசிய வார்த்தைகளை ஒவ்வொன்றாய் 
யோசிக்க தூண்டும்!
பழகிய நாட்களெல்லாம் 
சிந்தையில் பரிதவிக்கும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
 பசியுணர்வை மறக்கச் செய்யும்,
தூங்கும் நேரம் சுருங்கிச் செல்லும் !
நடுநிசியில் விழிக்கச் செய்து
விடியல் வரை விசும்பச் செய்யும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
கா
ணும் யாவையும் 
கனவெனவே கருதச் செய்யும்,
கனவென வந்ததையெல்லாம
நிஜமென  நினைக்கத் தோன்றும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
தொலைவில் கேட்கும் பாடல்களில்
தொலைத்தவை எல்லாம் காற்றாய் வந்து,
உலையில் கொதிக்கும் நீராய்,
நினைவில் உயிரை தகிக்கும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
காரணமின்றி கோபம் வரும்,
தன்னை தானே வெறுக்கத் தோன்றும் !
ஏன் இந்த பிரிவென்று
ஏக்கங்கள் சேர்ந்து கொண்டு,
எள்ளி நகையாடும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
உண்மை பிரியத்தை, 
உறவின் உன்னதத்தை,
மௌனமாய் உணர்ந்திட செய்யும் !

கோபம் கொஞ்சம் தணிந்தபோது,
தனிமை எங்கும் நிறைந்திருக்கும் !
சேர்ந்திட மனமும் ஏங்கித் தவிக்கும்,
இதயமும் இதைத் தான் துடித்துச் சொல்லும் !!

                          -  மே. இசக்கிமுத்து


திங்கள், செப்டம்பர் 30, 2024

தூங்க வைத்த கதைகள் !!

நிலவில்லா நேரங்களில் 
நிசப்தமாக நகரும் அந்த கதைகள் !
மாயாஜால காட்சிகள் 
மனத்திரையில் வந்து செல்லும்,
மறு நொடியே மாயமென மறைந்து கொள்ளும் !

காற்றில் அசையும் தென்ங்கீற்றில்
கரிய உருவம் கையசைக்கும்!
பனை மரத்தின் காவோலை
படபடவென கைதட்டும்,
பயத்தோடு கதையும் பாதியில் நிற்கும் !

அப்பாவை அணைத்துக் கொண்டு 
அப்படியே தூக்கம் வரும்!
ஆனாலும்,
கதைகளின் நீட்சி 
கனவிலும் தொடர்ந்து வரும் !

இறக்கை முளைத்த ஒற்றை குதிரையில் 
இளவரசியை தேடி,
மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி,
மாவீரனின் சாகச கதைகள் !

அரசனின் சேனைகளும்,
அரண்மனை கோபுரங்களும்,
அரங்கேற்ற மண்டபமும்,
அப்பா சொல்ல சொல்ல,
அத்தனையும் வானில் 
நட்சத்திரங்களின் நடுவே,
அற்புதமாய் காட்சி தரும் !

தாத்தா அப்பாவிற்கும்,
பாட்டி அம்மாவிற்கும்,
அதன்பின் அப்பா எனக்கும்,
அக்கறையாய் அன்போடு,
வழி வழியாய் சொல்லி வந்த
வாய்மொழி கதைகள் !

அப்பா சொன்ன கதைகளை
நான் பிள்ளைகளுக்கு 
சொல்லும் போது,
கயிற்றுக் கட்டிலின் கதகதப்பும்,
முழு நிலா உலாவும் வான வீதியும்,
அப்பாவின் ஸ்பரிசமும்,
மனமெங்கும் நிறைந்து 
மெய்சிலிர்க்க வைத்துவிடும் !

இப்போது கூட,
தூக்கமில்லா இரவுகளில் - என் 
தலை கோதி தாலாட்டி,
தூங்க வைக்கும் கதைகள் அது !!

                             -  மே. இசக்கிமுத்து

வெள்ளி, டிசம்பர் 01, 2023

மழையென மாயம் !!


 ஒன்றாய் இரண்டாய்
ஒவ்வொரு துளியாய்
பூமியை தழுவிடும் மழைத் துளி!
புது மழையின் மண் வாசம்
புத்துணர்வாய் ஒரு பரவசம்!

குடை பிடித்து நடக்கும் போதும்
கொஞ்சம் நனைந்திடவே மனந்துடிக்கும்!
குளமென தேங்கும் நீரில்
கும்மாளமிட ஓடிடும் கால்கள்!
அங்குமிங்கும் பார்த்துவிட்டு
ஆசையாய் கால் நனைத்திட
ஆவலும் வந்திடுமே!

வருடம் முழுவதும்
வறண்டிருந்த வரப்போரம்
முதல் மழையின் மோகத்தில்
முகங்காட்டும் புது புற்களாய்,
மழைக்கால நினைவுகளெல்லாம் 
மனதை கொஞ்சம் வருடிச் செல்லும்!

துவளச் செய்திடும் துயரங்களை,
கலங்கச் செய்திடும் கவலைகளை,
மழையென மாயம்
மறக்கச் செய்திடும்!
மழலையாய் மகிழ்ச்சியில்
மனம் துள்ளிக் குதித்திடும்!!

                       - மே. இசக்கிமுத்து

வியாழன், நவம்பர் 09, 2023

ஒரு தோழியின் தேடல்!!




அடிக்கடி பார்த்த முகமாய் இருந்த நீ
அறிமுகம் ஆனபோது சிரித்த முகமானாய்!
நட்பெனும் வானில் நகர்வலம் வரும்
நிலவு தோழன் நீ!

கண்ணியமான நட்பிது தான் 
காமம் இல்லா உறவிது தான் !
காணத் துடிக்கும் போது,
காதலின் வலி கொடுத்தாய்!
காணும் போது கண்ணால் பேசி
கலவரம் செய்தாய்!
நீ பேசா நாட்களில்
இரவுகளை நீளச் செய்தாய்!
நினைவுகளில் மூழ்கச் செய்தாய்!

அடுக்கடுக்காய் பேசும்போது
அக்கறையாய் கேட்டுக் கொண்டாய்!
மனக்குழப்பம் மறக்கச் செய்தாய்
மனங் குளிர மாயம் செய்தாய்!
வார்த்தைகளற்று நிற்கும் போது,
வாஞ்சையோடு புன்னகை செய்தாய்!

மணிக்கணக்கில் பேசும்போது
மனதில் மலரும் மகிழ்ச்சி!
சொல்ல மறந்ததையெல்லாம்
செல்பேசியில் பகிர்ந்து கொண்டோம்!

மௌனத்தை மொழி பெயர்த்தாய்,
மெல்லிசையாய் தலையசைத்தாய்!
என் குரலில் மயக்கம் என்றாய்,
ஜில்லென்று கிறங்கச் செய்தாய்!
பொக்கிஷம் நீ என்றேன்
பொத்தி வைத்துக்கொள் என்றாய்!

தாகத்தின் போது தண்ணீரானாய்,
துன்பத்தின் போது கண்ணீரானாய்!
தவித்திடும் போது தாயின் மடியானாய்!
துவண்டிடும் போது 
தந்தையாய் தைரியம் தந்தாய்!

குழம்பிய மனதிற்கு
குறி சொல்லி தெளிய வைத்து,
சரியென பட்டதை சட்டென சொல்லிடுவாய்,
தவறென தெரிந்ததை,
தக்க சமயத்தில் உணர்த்திடுவாய்!

எங்கே நீ இருக்கின்றாயோ,
என்னை நீ நினைக்கின்றாயோ!
நிழலென உன் நினைவுகள்,
நிதமும் என்னை தொடர்கிறதே!

இருக்குமிடம் தூரமங்கே,
இரவெல்லாம் பாரமிங்கே!
தொலைத்து விடவில்லை,
தொலைவில் தான் இருக்கின்றாய்!
இருப்பிடம் தெரிந்தாலும்,
இங்கே நான் தேடுகின்றேன்!

- மே. இசக்கிமுத்து

திங்கள், ஆகஸ்ட் 07, 2023

கல்லூரி காலங்கள் !!



 (நான் படித்த தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், 06/8/2023 அன்று எங்கள் B.Sc இயற்பியல் (1994-97) மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் வெள்ளி விழா சந்திப்பின் போது நான் எழுதி, வாசித்த கவிதை)



கால் நூற்றாண்டு கடந்து  நம்
கல்லூரியில் சந்திக்கின்றோம் !
நாம் பழகிய நாட்களும்,
மாறாத நட்பும்,
மறவாத நினைவுகளும்,  
புவியீர்ப்பு விசையாய் நம்மையெல்லாம்
இங்கு ஈர்த்து வந்தது !
எல்லாவற்றிற்கும் மேலாக,
புவியீர்ப்பு மையமாய்
பெருமை கொண்ட நம் கல்லூரி !!

இன்று கல்லூரி படிக்கட்டுகளில்
நாம் முன்னோக்கி நடந்தபோது,
பின்னோக்கி சென்றதே 
நம் நினைவுகளெல்லாம் !!

நந்தவனமாம் நம் கல்லூரியில்
நாளும் மலர்ந்திடும்
நறுமண மலர்களாய்
நடைபோட்ட நாட்கள் !!

முதல் வருடம்,
 முன்பின் தெரியாத முகங்கள்
முரன்கள் சில வந்த போதும்,
நாட்கள் செல்ல செல்ல
நம்பிக்கையும் மலர்ந்ததனால் 
நண்பர்கள் ஆனோம் நாம் !!
மூன்றாம் வருட முடிவில்
முழுவதுமாய் பக்குவப்பட்டோம்!!

இருபாலர் வகுப்புகளின்
இனிதான தொடக்கம் நாம் !
ஏனைய மாணவர்களின் ஏக்கப் பார்வை 
எப்போதும் நம் மீது தான்!
ஆணும் பெண்ணும் சமமென
அன்போடு அமர்க்களம் செய்தோம் !
இயற்பியல் துறை நாமென்று
இனிதாய் பெருமை கொண்டோம் !!

வகுப்பில்லா நேரங்களில்
வாவென்று அழைத்திடுமே
வகுப்பறையின் பின்புறமுள்ள வேப்பமரம் !
வாஞ்சையோடு அதன் நிழலில்
பாடங்களை பகிர்ந்து கொண்டோம் !
சுற்றுலா விவாதங்களும்
அதற்கான பாடல்களின் தேடல்களில்
கேலிகள் பல செய்து - பொய்
கோபம் கொண்டு கலைந்திடுவோம்!!

நாமில்லா நேரங்களில்,
நாம் பயின்ற பாடங்களோடு
பாடல் வரிகளையும் பாடிக்கொண்டு
ஆடிக் காற்றில் இசைந்தாடி
அங்குமிங்கும் நம்மையெல்லாம் 
நாளும் தேடியிருக்கும்
நிழல் தந்த வேப்பமரம் !!

கல்வியோடு நம் கனவுகளையும்
கண்முன்னே நிறுத்தி,
கற்றுணர்ந்த சான்றோராய்
நம்மையெல்லாம் மாற்றிய
நல்மனங் கொண்ட பேராசிரியர்கள் !!

நாம் தயங்கிய போதெல்லாம்,
நம்பிக்கை விதைகளை
நம் மனதினில் தூவி,
தந்தைக்கு நிகராய்
தன்னம்பிக்கை தந்த பேராசிரியர்கள் !!

நம்பிக்கை வைத்து
நண்பர்கள் போல் 
அனைவரின் கருத்திற்கும் 
பேராசிரியர்கள் ஆமோதிக்கும் போதெல்லாம்
ஆனந்தமாய் வருமந்த ஆரவாரம் !!

அழகிய நாட்களின் நினைவலைகள்
அவ்வப்போது ஆசையாய்
ஆழ்மனதை வருடிச்செல்லும் போதெல்லாம்,
அம்மாவின் தாலாட்டில்,
அப்பாவின் பேரன்பில்,
சத்தமின்றி சிரித்து மகிழும்
சிறுபிள்ளை ஆனோம் நாம் !!

நாம் பயின்ற வகுப்பறையில் 
மீண்டும் நாம் நுழையும் போது,
நம்மை நாமே நலம் விசாரித்து கொள்வது போல்,
நினைவுகளோடு நிஜத்தையும்
நம்மோடு கைகோர்த்து வைக்கும் 
கால இயந்திரமாய் நம் கல்லூரி !!

நாம் அமர்ந்த இருக்கைகள்,
நாளும் பேசிய கதைககள்,
பேச தயங்கிய எண்ணங்கள்,
ஏக்கப் பெருமூச்சில் 
மின்காந்த அலையொன்று
மின்னலென வந்து போகும் !!

இன்று வரை,
நம் எண்ணக்கடலிலே,
கல்லூரி நாட்களின் நினைவலையில் 
நிதமும் கால் நனைத்து சிறு பிள்ளையாய் 
மனதிற்குள் மகிழ்ந்திருந்தோம் !

இனி வரும் நாட்களில்,
இனிமை நிறைந்த
இந்த வெள்ளி விழா நினைவுகளும் 
அழியா ஓவியமாய் 
அனைவரின் உள்ளங்களில் 
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும் !!


                     - மே. இசக்கிமுத்து 



செவ்வாய், ஏப்ரல் 21, 2015

நிழலாடும் நினைவுகள்...

அடைமழை இரவின்
ஆனந்த உறக்கம்!

நிலவில்லா இரவுகளில் 
நீட்சிகொள்ளும் காரு வானம்!

காற்றடி மாதத்தில்
கரையுமந்த காக்கை கூடு!

குத்த வைத்து கதை சொல்லும்
குளக்கரை கருங்கல்!

வெயில் கால மதியத்து
வெட்ட வெளி தேரி மணல்!

முன்னொரு இரவில்
கனவாய் வந்த மொட்டை மரம்!

நினைவுகளில் நிழலாய்
நீண்டு வரும் என் பின்னால்!

திரும்பி பார்க்கும் நேரத்தில்
முன்னால் வந்து முகங்காட்டும்!

தனித்திருக்கும் வேளைகளில்
தவழ்ந்து வரும் நினைவலைகள்,
ஆழ்மனதை வருடிவிடும்
அம்மாவின் தாலாட்டாய்!

                       -மே.இசக்கிமுத்து...

வெள்ளி, செப்டம்பர் 05, 2014

என் பள்ளி ஆசிரியர்கள்


         
பள்ளி பருவ நினைவலைகள் என் மனத்திரையில் எபபோதெல்லாம் சித்திரமாக வருகிறதோ அப்போதெல்லாம் என்னை மறந்து குதூகலித்து விடுகிறது உள்ளம். புத்தக படிப்போடு விளையாட்டு, வெகுளித்தனம் மற்றும் வேடிக்கைகளால் அறிவை ஆக்கப்பூர்வமாக வளர்த்துக் கொண்ட நாட்களவை. தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் இருக்கும் St.Charles English Medium Schoolலில் LKG முதல் ஐந்தாம் வகுப்பு வரையானஆரம்பப் பள்ளி நாட்கள் பெரும்பாலும் விளையாட்டோடு கலந்த நாட்களாகவே அமைந்தது. 

அதன் பின் தூத்துக்குடி மில்லர்புரத்தில் இருக்கும் St.Mary's Boys Hr.Sec.Schoolலில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான பள்ளி நாட்கள் இன்னமும் பசுமை மாறாமல் என் மனதில் நிறைந்துள்ளது. துள்ளித் திரியும் பயமறியா இளங்கன்றுகளுக்கு அறிவூட்டி அவை செல்ல வேண்டிய பாதைகளில் கரடுமுரடான கற்களை லாவகமாக கடந்து செல்வதெப்படி என்று புரிய வைப்பது போன்ற கடினமாக பணியை தான் எங்கள் பள்ளிஆசிரியர்கள் நற்கடமையென செய்து வந்திருக்கிறார்கள். அறிவுரைகளாகவும், அனுபவங்களை பகிர்ந்தும், மாணவர்களின் மனவோட்டத்தை அறிந்து கொண்டு அவர்கள் வழியிலேயே சென்று புரிந்து கொள்ள வைத்தும், நிறைய கண்டிப்புகளாளும், சில சமயம் தண்டனைகளாளும் எங்களை ஒரு வழிக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர்கள் எங்கள் பள்ளி ஆசிரியர்கள். ஆசிரியர் தினமான இன்று St.Mary's Boys Hr.Sec.Schoolலில் எனக்கு பாடங்கள் சொல்லி தந்து அறிவூட்டிய ஆசிரியர்களை நினைத்து பார்த்து மரியாதை செய்யும் விதமாக இப்பதிவை எழுதுகிறேன்.

VI - A பிரிவு - 1987 - 88 :-
ஆங்கிலம் மற்றும் கணிதம் (வகுப்பாசிரியர்) - திரு.பிச்சையா அவர்கள்
தமிழ் - திரு.ட்ருமேன் அவர்கள்
அறிவியல் - நாங்கள் இவரை சயின்ஸ் சார் என்று அழைத்து பழக்கப் பட்டதனால் பெயர் ஞாபகம் இல்லை.
சமூக அறிவியல் - திரு. ரெக்ஸ் அமர்தராஜ் அவர்கள்


VII - A பிரிவு - 1988 - 89:-
ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் (வகுப்பாசிரியர்) - திரு. ரெக்ஸ் அமர்தராஜ் அவர்கள்
தமிழ் - திரு. ஜார்ஜ் அவர்கள்
கணிதம் - திரு.ஜெயராஜ் அவர்கள்
அறிவியல் - திரு.சேவியர் இம்மானுவேல் அவர்கள்

VIII - A பிரிவு - 1989 - 90:-
ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் (வகுப்பாசிரியர்) - திரு. ரெக்ஸ் அமர்தராஜ் அவர்கள்
தமிழ் - திரு. ஜார்ஜ் பீட்டர் அவர்கள்
கணிதம் - திரு.செபஸ்டின் அவர்கள்
அறிவியல் - திரு. அந்தோனி பிச்சை அவர்கள்

IX - A பிரிவு - 1990 - 91:-
ஆங்கிலம் (வகுப்பாசிரியர்) - திரு. அருள் பிரகாசம் அவர்கள் (தலைமை ஆசிரியர்)
தமிழ் - புலவர் ராமச்சந்திரன் அவர்கள்
கணிதம் - திரு.ஜோசப் ராஜ் அவர்கள்
அறிவியல் - திரு. சின்னதுரை அவர்கள்
சமூக அறிவியல் - ஞாபகம் இல்லை

X - A பிரிவு - 1991 - 92:-
ஆங்கிலம் மற்றும் கணிதம்(வகுப்பாசிரியர்) - திரு.ஜோசப் ராஜ் அவர்கள்
தமிழ் - திரு. அல்போன்ஸ் வணக்கம் அவர்கள்
அறிவியல் - திரு. சின்னதுரை அவர்கள்
சமூக அறிவியல் - திரு.தியாகராஜன் அவர்கள்

XI (1992 - 93) மற்றும் XII (1993 - 94) - A பிரிவு :-
இயற்பியல் (வகுப்பாசிரியர்)- திரு. பாலசுப்ரமணியன் அவர்கள்
வேதியியல் - திரு. ஸ்டிபன் அவர்கள்
கணிதம் - திரு. ஜெயபாலன் அவர்கள்
உயிரியல் - திரு.சேவியர் இக்னேசியஸ் அவர்கள்
தமிழ் - திரு. அல்போன்ஸ் வணக்கம் அவர்கள்
ஆங்கிலம் - ஞாபகம் இல்லை

சில வகுப்பு ஆசிரியர்களின் பெயர்கள் ஞாபத்தில் இல்லை, என்னோடு இந்த வகுப்புகளில் படித்த நண்பர்கள் யாருக்காவது அந்த ஆசிரியர்களின் பெயர்கள் ஞாபகத்தில் இருந்தால் தெரியப்படுத்தவும். 

6 முதல் 12ஆம் வகுப்பு வரை வெவ்வேறான ஆசிரியர்கள்களிடம் பயின்றிருந்தாலும், சில ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை மற்றும் அவர்களின் குணாதியங்கள் காரணமாக அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தின் மேல் நமக்கு அதிக ஈர்ப்பு மற்றும் ஆர்வம் ஏற்படுவதுண்டும். சில சமயங்களில் அந்த தாக்கம் நம்முள் எப்போதுமே இருப்பதுண்டு. அந்த வகையில் நான் சொல்ல வேண்டுமானால், இரண்டு ஆசிரியர்களை சொல்வேன். எனக்கும் 9 ஆம் வகுப்பில் தமிழ் வகுப்பெடுத்த புலவர் ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் 10 ஆம் வகுப்பில் கணித வகுப்பெடுத்த திரு.ஜோசப் ராஜ் அவர்கள்.

புலவர் ராமச்சந்திரன் அவர்களின் கணீரென்ற குரலும், பாடங்களுக்கு இலக்கிய தேன் கலந்து சொல்லும் விளக்க உரையும் எங்களின் கவனம் வேறெங்கும் சிதராமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும். அவர் பாடம் நடத்துகிறார் என்றால் அமைதியாக கவனிப்போம். இலக்கிய கருத்துகளை எங்களின் ரசனைக்கேற்றவாறு சொல்லும் போது மேசையை தட்டி உற்சாகப்பட்டுக் கொள்வதுண்டு. எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, ஒரு முறை சிலப்பதிகாரம் பாடம் நடத்தும் போது அவரின் கணீரென்ற குரலால் " தேரா மன்னா செப்புவ துடையேன் " என்று சொன்ன போது பக்கத்து வகுப்பு கூட அமைதியானது. அவர் வகுப்பில் படித்ததனால் தான் எனக்கு இன்றும் தமிழ் இலக்கியத்தின் மேல் ஆர்வம் குறையாமல் இருக்கிறது.

ஒன்பதாம் வகுப்பு வரை கணிதம் என்றால் கடினமாகத் தான் இருக்கும் என்ற எனது நிலைப்பாட்டை மாற்றியவர், பத்தாம் வகுப்பில் கணித வகுப்பெடுத்த திரு.ஜோசப் ராஜ் அவர்கள். ஒரு பாடம் நடத்தினால் அந்த பாடம் எல்லா மாணவருக்கும் புரிகிறது என்று தெரிந்த பின்னர் தான் அடுத்த பாடத்திற்கு செல்வார். ஒவ்வொருவரையும் போர்டில் வந்து கணக்கு போட வைப்பார். வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் ஒவ்வொரு செல்ல பெயர் வைத்து விடுவார். வாரந்தோறும் வகுப்பு தேர்வு நடத்துவார். தவறாக செய்துவிட்டால் செல்லப் பெயர் சொல்லி திட்டி விடுவார், பின்பு மற்றொரு முறை சொல்லிக் கொடுப்பார். நானும் அவரிடம் திட்டு வாங்கி திட்டு வாங்கியே தான் என்னுடைய கணித அறிவை வளர்த்துக் கொண்டேன். 9ம் வகுப்பு வரை கணிதத்தில் 50 மதிப்பெண்னை தாண்டாத என்னையும் அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 94 மதிப்பெண் எடுக்க வைத்த பெருமை அவரையே சேரும். மேலும், என் வகுப்பு தோழன் வாஞ்சீஸ்வரன் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து எங்கள் மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கள் வகுப்பாசிரியர் திரு.ஜோசப் ராஜ் அவர்களுக்கும் எங்கள் பள்ளிக்கும் பெருமை சேர்த்த விஷயமாக அமைந்தது.

இந்த ஆசிரியர் தினத்தில் எனக்கு அறிவமுதூட்டிய ஆசான்களை நினைத்து பார்த்து மரியாதை செய்கிறேன்.

                                                                                                 - மே.இசக்கிமுத்து..

வியாழன், ஆகஸ்ட் 21, 2014

என்னுள் நனைந்த மழை துளிகள்!


கருப்பட்டி கடுங்காப்பி,
கையில் கொஞ்சம் பொரிகடலை,
தூறல் மழையின் மண் வாசம்,
திண்னையில் தெறித்த மழை துளிகள்,
நினைக்க மறந்த வேளையிலே
நனைத்தது கொஞ்சம்!

வழிந்தோடும் மழைவெள்ளம்,
வரிசையாய் நீர்க்குமிழிகள்,
ஒன்றோடு மற்றொன்று 
உரசிச் சென்று உடையுமது,
பத்தா பதினொன்றா ?
முதலிலிருந்து தொடங்கும் 
மீண்டும் அந்த எண்ணிக்கை!

மழை ஓய்ந்து கூரையில்
வழிந்து வரும் நீர் துளிகள்,
உள்ளங்கையை ஏந்தினேன்,
உற்சாகமாய் தெறித்தங்கு
ஆஹா...
என்னுள் நனைந்த மழை துளிகள்!

                               - மே.இசக்கிமுத்து

புதன், ஜூன் 11, 2014

பூவரச வாசம்!


வீட்டிற்கு விலாசமென
பூவரச மரங்கள் ரெண்டு
பூரிப்பாய் நின்றதங்கு!

மரத்தடியில் கோயில் கட்டி
மத்தியானம் கொடை நடத்தி
பூவரசம் மாலை சாத்தி
இலையில் செய்த பீப்பீ சத்தம்
இன்னும் இங்கே கேட்கிறதே!

மொட்டில் செய்த பம்பரத்தை
முதலில் யார் விடுவதென்று
போட்டியோடு சண்டையும்
சேர்நதங்கு நடப்பதுண்டு!

பருக்களின் வடுகள் கொண்ட 
மரக்கிளை தொங்கி
குரங்குகளாய் குதித்து
கும்மாளமாம் கும்மாளம்!

பருவப் பெண்களின்
பளிச்சென முகங்களாய்
இலைகளின் நடுவே 
வண்டுகளுக்காக வட்டமிடும் 
மஞ்சள் பூசிய பூக்கள்!

பொசுக்கி விடும் வெயிலில்
நின்று செல்ல நிழல் கொடுத்து
வீதியில் செல்வோரிடமும்
விவரங்கள் கேட்டுக் கொள்ளும்!

அன்றொரு நாள்,
தென்னங் கிடுகு வேலி
செங்கல் சுவர் ஆனபோது
வேலியோரம் நின்றிருந்த 
பூவசர மரங்கள் ரெண்டும்
வேரறுக்கப் பட்டு
வெறுந்தரையில் கிடந்ததங்கு!

கருக்கல் ஆனதும் வந்தமரும்
காக்கைகள் தேடி அலையுமே!
அங்குமிங்கும் துள்ளியோடும்
அணில் குஞ்சிகள்
இனியெங்கு போகும்!
கோடாரியால் வெட்டும் போது
ஓங்கி நின்ற இரு மரங்கள்
ஓவென்று அழுதிருக்கும்!

விளையாடி சிரித்திருந்த பூவரசு
விறகாய் கிடந்ததங்கு!
பூக்களின் வாசம் மட்டும் - என்
நினைவுகளில் நின்று கொண்டு
காற்றடி காலங்களில் - என்
கைபிடித்து நடக்கிறது !

                   - மே.இசக்கிமுத்து

செவ்வாய், மே 06, 2014

அம்மிக்கல்லும் ஆட்டு உரலும் !


ஞாயிற்று கிழமைகளில் அம்மா மசாலா அரைப்பதற்காக அஞ்சறை பெட்டியிலிருந்து சீரகம், வெந்தயம், பெருங்காயம், மஞ்சள், மிளகு எடுத்துக்கொண்டிருக்கும் போதே நான் அருகே சென்று உட்கார்ந்து விடுவேன். அம்மியில் மசாலா அரைக்கும் போது அதன் அருகிலிருக்கும் கல்லில் நான் உட்கார்ந்து கொண்டு அம்மா எப்போது தேங்காய் அரைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். "இந்த வெங்காயத்தை உரித்து கொடு" என்று சொன்னவுடன், "எனக்கு கொஞ்சம் தேங்காய் தருவியா?" என்று அம்மா சரி என்று சொல்லும் வரை காத்திருப்பேன். "சரி சீக்கிரம் வெங்காயாம் உரிச்சி கொடு" என்று சொன்ன பிறகு தான் வெங்காயம் உரிக்க ஆரம்பிப்பேன். தேங்காய் சில்லை அம்மியில் எடுத்து வைக்கும் போதே, "எனக்கு கொஞ்சம் " என்று கேட்டு வாங்கிவிடுவேன். சில சமயம் அம்மா சின்னதாக கையால் பிய்த்து தரும் போது, "இன்னும் கொஞ்சம் தாம்மா" என்பேன். "ரெண்டு சில் தேங்காய்ல உனக்கே பெரிசா தந்துட்டா கொழம்புக்கு கானாது" என்று சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவிடமிருந்து இன்னொரு சிறிய தேங்காய் துண்டு என் கைக்கு வந்து விடும். அம்மியில் மசாலா அரைத்து முடித்து, அம்மி மற்றும் குழவியிலிருக்கும் மசாலாவை வளித்து தட்டில் வைக்கும் வரை அருகிலேயே இருந்து கவனிப்பது எனது வழக்கமாகயிருந்தது. விளையாடும் போது சில சமயம் அம்மி மேல உட்கார்ந்து இருப்பதை பார்த்து விட்டால் "அம்மி மேல உட்காராதே உட்காராதேனு எத்தனை தடவை சொல்ல, நீனே ஒல்லியா இருக்க, அம்மி மேல உட்கார்ந்த உடம்பு தேஞ்சி போயிடும்" என்று பல தடவை திட்டு வாங்கியதுண்டு.

எங்கள் வீட்டின் திண்னையில் ஆட்டு உரல் ஒன்றும் உண்டு. அப்போதெல்லாம் வாரத்தில் ஒரு நாள் தான் இட்லி - தோசைக்கு மாவு ஆட்டுவார்கள். அதுவும் வெள்ளி கிழமை காலையில் இட்லி அல்லது தோசை கண்டிப்பாக உண்டு. அதற்கு சனி கிழமை சாயந்திரம் ஆட்டு உரலில் மாவு அரைத்து வைக்க வேண்டும். மாவு அரைக்கும் போதும் சில சமயங்களில் அருகே உட்கார்ந்து விடுவேன். முதலில் உழுந்து அரைத்து கொண்டிருக்கும் போதே ஆரம்பித்து விடுவேன், உள்ளங்கையை நீட்டி மாவு கேட்கும் போது, "உழுந்தெல்லாம் திங்க கூடாது, காது கேக்காம போயிரும்" என்ற அம்மாவிடம் "அப்ப அரிசி மாவு தரனும்" என்று முதலிலேயே சொல்லி வைத்து விடுவேன். அரிசி மாவு அரைய கொஞ்சம் நேரம் ஆகும் என்பதால், பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டே இடையிடையில் அரசி அரைபட்டுவிட்டதா என்று உரல் அருகே வந்து பார்த்து கொள்வேன். ஒரு வேளை அம்மா மாவு அரைத்து முடித்துவிட்டால்? மாவு அரைந்து கொண்டிருக்கும்போதே, உரலில் இருந்து எடுத்து என் உள்ளங்கையில் அம்மா தரும் அந்து மாவை ருசித்து சாப்பிடுவதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு. அரைத்து முடித்து பாத்திரத்தில் எடுத்து வைத்த மாவை கொடுத்தாலும் வாங்க மாட்டேன், எனோ அது எனக்கு பிடிக்காமல் போயிருந்தது. வெள்ளி கிழமை வந்தாலே ஒருவித ஆனந்தம் காலையிலேயே என் மனதிற்குள் வந்து விடும், இட்லி கிடைக்குமே. அம்மா தேங்காயை அம்மியில் அரைக்கும் போதே, "வயிறு பசிக்குதம்மா, இட்லி ரெடியா" என்று சொல்ல ஆரம்பித்து விடுவேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, "அம்மா, இன்னிக்கு மதியத்துக்கும் ஸ்கூலுக்கு இட்லி வைம்மா, மூனு போதும்" என்று டிப்பன் பாக்ஸில் இட்டிலியை எடுத்து கொள்வேன். மதியம் பள்ளியில் சாப்பிடும் போது "இன்னிக்கு எங்க வீட்ல இட்லிடா" என்றவாறு சாப்பிடுவேன். இட்லி மற்றும் தோசையென்றால் சாப்பிடும் போது உள்ளத்தில் ஒரு விதமான உற்சாக ஊற்று உதித்து விடும். 

ஆட்டு உரல் தேய்ந்திருந்தால் அரிசி நன்றாக அரைபடாது, அம்மி கொத்துபவரை கூப்பிட்டு கொத்த வைப்போம். அம்மியை கொத்தும் போது அதன் நடுவில் பூ அல்லது கட்டம் போன்று டிசைனாக கொத்தி விடுவார்.அவர் சிறு உளியை வைத்து கவனமாகவும் நேர்த்தியாகவும் கொத்துவதை ஆர்வத்தோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டிருப்பேன். கொத்தி முடித்த பின் "ம்ம் டிசைன் நல்லாருக்கா.." என்று கேட்கும் போது சிரித்துக் கொள்வேன். ஓரு சிறு வேலை என்றாலும் அந்த வேலையில் முழு ஈடுபாடும், திருப்தியாக செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வேலை செய்வது ஒரு பெரிய விஷயம் தான். டேபில் டாப் கிரைண்டரும், மிக்சியும் வீடுகளில் வந்தவுடன், அம்மிக்கும் ஆட்டு உரலுக்கு கிடைத்து வந்த முக்கியத்துவம் முற்றிலுமாக குறையத் தொடங்கியது. அம்மியும் ஆட்டு உரலும் பராமரிப்பு இன்றி முற்றத்தின் ஓரத்தில் போடப்பட்டது, சில வீடுகளில் பழைய சாமான்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டது. இப்போதெல்லாம் அம்மியை திருமண விழாக்களில் அம்மி மதித்தல் சடங்கின் போது வைக்கப்படும் சம்பிரதாயப் பொருளாக தான் பார்க்கப்படுகிறது. 

எங்கள் வீட்டின் ஓரத்திலே பயன்பாடின்றி கிடக்கும் அம்மியை பார்க்கும் போதெல்லாம் ஆழ்மனதில் அது ஏதோ ஒன்றைச் சொல்ல வருவதாய் உணர்கிறேன்..


                                                                                                                  -மே.இசக்கிமுத்து..

புதன், ஏப்ரல் 30, 2014

ஒரு "Smiley" யாவது அனுப்புவாயா?



படபட வார்த்தைகளும்,
பதறாக பேச்சுகளும்,
சிலிர்க்க வைத்த கேள்விகளும்,
சின்னதாய் சிரிப்புகளும்,
முடிவில்லா விவாதங்களில்
முந்த துடித்த பொழுதுகளும்,
சின்னதான சீண்டல்களில்
பேச மறத்த உதடுகளும்,
பேச துடித்த பார்வைகளும்,

இணையம் இல்லா காலங்களில்
இணைந்திருந்த எண்ணங்களும்,
கேலியோடும் கிண்டலோடும்
உலா வந்த உறவுகளும்,
நட்பெனும் வட்டத்தில் 
வலம் வந்த நாட்களும்,

நினைவில் வந்து நிற்கிறதே
ஆன் லைனில்
ஒரு "Smiley" யாவது அனுப்புவாயென
காத்திருக்கும் வேளையிலே!

                                              - மே.இசக்கிமுத்து

வெள்ளி, மார்ச் 21, 2014

காமிக்ஸ் உலகம் !


மர்ம வேட்டை, அழகியை தேடி, ஜனாதிபதி கொலை, வல்லவனுக்கு வல்லவன், ரத்த காட்டேரி... இந்த பெயர்களையெல்லாம் வாசிக்கும் போது ஏதோ தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஆங்கில திரைப்படங்களின் பெயர்கள் போல இருக்கிறதல்லவா? இருக்கலாம், ஆனால் 1985-90களில் இந்த பெயர்கள் எல்லாம் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவையெல்லாம் 1985-90களில் வெளிவந்த காமிக்ஸ் கதைகளின் தலைப்புகள். 

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான் காமிக்ஸ் புத்தகங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. வகுப்பு தோழன் வாஞ்சீஸ்வரனிடம் நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன. அதை வைத்து அவன் ஒரு மினி நூலகமே எங்கள் வகுப்பில் நடத்தி வந்தான். ஆசிரியர் வராத வகுப்புகளில் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த மாணவர்கள் மத்தியில் நாங்கள், அதாவது நான், வாஞ்சீஸ்வரன், ப்ராங்கோ, ராம்குமார், கண்ணன் மற்றும் சிலர் பாட புத்தகங்களுக்கு நடுவில் காமிக்ஸ் புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருப்போம். இப்போதிருக்கின்ற தனியார் தெலைக்காட்சி சேனல்கள், கேபிள் டிவி வசதிகள் வராமல் இருந்த நேரத்தில் முதன் முதலாக காமிக்ஸ் படக்கதை புத்தகங்களை வாசித்த போது தன்னை மறந்து அந்த காமிக்ஸ் கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடுகிற ஒரு உணர்வு இருக்கிறதே, படித்து முடிக்கும் வரை வேறு உலகத்திற்கே சென்று வந்த மகிழ்ச்சியை, அந்த அனுபவத்தை என்னவென்று சொல்வது. 

முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மற்றும் ராணி காமிக்ஸ் மிகவும் பிரபலம். ஒவ்வொன்றும் தனக்கென ஒரு முத்திரை பதித்து போட்டி போட்டுக் கொண்டு மாதந்தோறும் புது புது கதைகளை வெளியிடும். 25 பைசா, 50 பைசா என அப்பா தரும் சில்லரைகளை சேர்த்து வைத்து மாதந்தோறும் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிவிடுவேன். எங்கள் வீட்டிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளி சிவந்தா குளம் ரோட்டில் உள்ள சந்தியில் ஒரு கடையில் தான் புத்தகங்கள் வாங்குவேன். பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதெல்லாம் வழியில் புத்தக கடையில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகங்களிடையே ஏதேனும் புதிய காமிக்ஸ் புத்தகம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வருவதுண்டு. 

முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் கிடைப்பதே ரொம்ப கடினம். எப்போதாவது தான் வரும் ஆனால் வந்த உடனேயே விற்று தீர்ந்து விடும், அந்த அளவிற்கு லயனுக்கும் முத்துவிற்கும் நிறைய வாசகர்கள். அதனால் டிமாண்ட் அதிகம். அதன் விலை ரூ 1.50, ரூ 2.00 மற்றும் ரூ 3.00 என கதையின் நீளம் மற்றும் பக்கத்திற்கு ஏற்றவாறு விலை இருக்கும். மே மாத்தில் கோடை மலரும் தீபாவளி நேரத்தில் தீபாவளி மலரும் வெளியிடுவார்கள். அதன் விலையோ ரூ 5.00 முதல் ரூ 7.00 வரை இருக்கும். அது பற்றிய விளம்பரங்கள் இரண்டு மாதங்களுக்கு முந்தைய இதழ்களிலிருந்தே வர தொடங்கிவிடும், வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆசையும் கூடவே வந்துவிடும். இரும்புக் கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரக் மற்றும் கவ்பாய் போன்ற கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை.

ராணி காமிக்ஸ், பிரபலமான தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவந்த இதழ். மாதமிருமுறையாக 1ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் டானென்று கடைகளில் வந்து விடும். பள பளப்பான வளு வளு அட்டைப் படம் இதன் தனிச் சிறப்பு. ரூ 1.50க்கு ராணி காமிக்ஸ் தரமான தாளில் தந்தனர். பின் இதன் விலை ரூ 2.00 ஆனது. முகமூடி வீரர் மாயாவி, ராயன், ஜேம்ஸ் பாண்ட் 007, ஆசாத், மாடஸ்தி பிளைசி, மற்றும் தில்லான் போன்றோர் ராணி காமிக்ஸின் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு இதழிழும் ஏதேனும் ஒரு போட்டி அறிவிப்பு நிச்சயம் இருக்கும். இதன் கடைசி பக்கத்தில் அடுத்த இதழுக்கான கதையின் தலைப்பு படத்தோடு போட்டிருப்பார்கள். ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் ஆகியவற்றில் வரும் கதைகளெல்லாம் வெளிநாட்டுஆங்கில காமிக்ஸ்களின் தமிழ் பதிப்பாக இருந்தாலும் விறுவிறுப்பு மற்றும் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது. 

நிறைய புத்தகங்களை படிக்க தூண்டியதே இந்த காமிக்ஸ் கதை புத்தகங்ளின் மூலம் கிடைத்த வாசிப்பு அனுபவமும் ஆர்வமும் தான் என்பதில் மாற்று கருத்தே கிடையாது. புத்தகங்களின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியதர்கான முதல் காரணியாக இருந்ததே இந்த காமிக்ஸ் புத்தகங்கள் தான். இன்றும் பழைய புத்தக கடையில் மற்றும் வேறு எங்கேயாவது தமிழ் காமிக்ஸ் புத்தகத்தை பார்க்க நேர்ந்தால் இந்த பசுமையான நினைவுகளில் மூழ்கிவிடுகிறது மனசு. அது ஒரு காமிக்ஸ் உலகம்.

மே.இசக்கிமுத்து..

வெள்ளி, அக்டோபர் 25, 2013

பட்டுப் பூச்சி

மழைக் காலம் தொடங்கிவிட்டது, மழைக் காலம் என்றாலே என் மனதிற்குள் வந்து நிற்பது பட்டுப் பூச்சி தான். இதனை வெல்வெட் பூச்சி என்றும் கூறுவார்கள். இரவு நேரத்தில் மழை பெய்ததென்றால் காலையில் மணல்வெளிகளிலும் அதனை சுற்றியுள்ள புல்வெளிகளிலும் சின்ன சின்னதாய் சிவப்பு நிறத்தில் பளபளவென்று சென்று கொண்டிருக்கும் இந்த பட்டுப் பூச்சிகள். மழைக் காலங்களில் இந்த பட்டுப் பூச்சிகளை பார்க்கும் போதெல்லாம் எனது ஆரம்பப் பள்ளி பருவ நாட்கள் தான் பட்டென நினைவுக்கு வரும். 

எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு மைதானம் போன்ற இடம் உண்டு, மழைக் காலங்களில் மதிய உணவு வேளையில் சாப்பிட்ட பின்பு இந்த மைதானத்திற்கு சென்று பட்டுப் பூச்சி தேடி பிடித்து அதை பென்சில் டப்டாவில் வைத்து வீீட்டிற்கு எடுத்து செல்வதுண்டு. விடுமுறை நாட்களென்றால் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தேரியில் பட்டுப் பூச்சி தேடி பிடிப்போம். யார் அதிகமாக பிடிக்கிறார்கள் என்று நண்பர்களுக்குள் ஒரு போட்டியே உண்டு. ஒன்று அல்லது இரண்டு கிடைத்தால் காலி தீப்பெட்டியிலும், நிறைய வைத்திருப்பவர்கள் பெரிய டப்பாவில் வைத்து வளர்ப்போம். அதற்கு இரையாக அருகம் புள்ளை பொட்டு வைப்போம். தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பட்டுப் பூச்சி என்ன செய்கிறது என்றும் குட்டியிட்டிருக்கிறதா என்றும் பார்ப்பதுண்டு. அதன் செய்கைகளை நண்பர்களிடம் பெருமையாக பேசிக்கொள்வோம். சின்னது, பெரியது மற்றும் குட்டிகள் என பார்த்து ரசித்து கொண்டே இருந்த நாட்கள் நினைவலைகளாய் இன்றும் மனதை நனைத்துக் கொண்டு தான் இருக்கிறது.. 

                                                                                                                          - மே. இசக்கிமுத்து..

திங்கள், டிசம்பர் 24, 2012

காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு...

 
            பள்ளி பருவத்தில் நாம் படித்து, ரசித்து, பாடிய பாடல்களை இப்போது நாம் நினைவுபடுத்தி பார்க்கும் போது அதில் கிடைக்கும் சுகமே தனி தான். நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்றுவிடும், ஒரு வித ஏக்கம் நம் மனதில் வந்து குடியேறிவிடும். அந்த வகையில் நான் முதல் வகுப்பில் படித்த போது தமிழ் பாட புத்தகத்தில் கடைசி பக்கத்தில் இந்த தாத்தா பாட்டு இருந்தது என்று நினைக்கிறேன். கடைசி வரியில் தாத்தா தும்முவதாக வரும் போது ஆசிரியை முக பாவத்தோடு தும்மல் போட்டு சொல்லி தந்ததும், நாங்களும் தும்மி தும்மி விளையாடியதும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இந்த பாட்டு உங்களுக்கும் ஞாபகம் வருமானால் வாருங்கள் நாம் நம் பள்ளி பருவத்திற்கே சென்றுவிட்டு வருவோம்....
 
 
காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு
காடு போல தாடியாம்
மாடி மேல நிக்கும் போது
தாடி மண்ணில் புரளுமாம்
 
ஆந்தை ரெண்டு கோழி மைனா
அண்டங்காக்கா குருவிகள்
பாந்தமாக தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டு நின்றன
 
உச்சி மேல நின்ற தாத்தா
உடல் குலுங்க தும்மினார்
அச்சும் அச்சும் என்றபோது
அவை அனைத்தும் பறந்தன...

வெள்ளி, ஜூலை 01, 2011

Oh Babies!


















These two little squirrels were saved by me last week, when the labourers removed the squirrel’s nests while doing renovation works in the quarters (1st floor) above to my house. At that time these squirrels were running very slowly here and there in front of my house. I told my wife to save it from the crows and dogs. They were shivering their legs and in the state of afraid as that might have been the first time they are coming out of their nest. Our kids were overjoyed seeing these little ones, by touching them, making sounds like them etc. We put them in the plastic wired basket. We changed the small empty eye drops bottle into small feeding bottle suitable for them and feeding the milk through it. For the first two days they showed little reluctant to come out and take the milk. Slowly they moved friendly with us.

Now it’s a week over, they started running behind us and search for the little feeding bottle for milk when we open it. Eswar and Santhosh started calling them as TIKO the name of the squirrel character in the cartoon “Dora the Explorer”. I know the squirrels will not stay with us like pet animals, when they grow and start jumping, I am sure that one day they will leave our house and go to their world. Till that day we enjoy the presence of little squirrels!

திங்கள், ஜூன் 13, 2011

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து !


வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (13.6.2011) தொடங்க உள்ளது. பிளமிங்கோ லைனர்ஸின் " ஸ்காட்டியா பிரின்ஸ் " என்ற சொகுசு கப்பல் இன்று தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்லயிருக்கிறது, இந்த கப்பல் சேவையின் மூலம் இந்தியா, குறிப்பாக தென்னிந்தியா - இலங்கை இடையிலான சுற்றுலா மற்றும் வணிகம் மேம்படும். மேலும் இரு நாட்டு மக்களிடையிலான பண்பாடு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஏற்பட இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இந்த கப்பல் சேவையை 2001ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். 2001ம் ஆண்டு நான் தூத்துக்குடியில் Flyjac Logisticsயில் ஏற்றுமதி ஒருங்கினைப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த போது இந்த பயணிகள் கப்பல் சேவைக்கான ஆயத்த வேலைகள் மும்முரமாக தொடங்கியது. அந்த ஆண்டின் இறுதியிலேயே இக்கப்பல் சேவை தொடங்கப்பட்டுவிடும் என்று பரவலாக பேசப்பட்டது. பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான முகவர்கள் நியமண விளம்பரங்கள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருந்தன.

வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகளை கையாளும் நிறுவனத்தில் ஏற்றுமதி ஒருங்கினைப்பாளராக பணியாற்றியதால் பல நாடுகளில் உள்ள எங்கள் நிறுவனத்தை சார்ந்த தொழில் ரீதியான முகவர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பல பேர்களின் தொடர்பு எனக்கு இருந்தது. அது போல இலங்கையிலும் எங்கள் முகவர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பலரின் அறிமுகம் எனக்கு இருந்தது. அதனால் அந்த ஆண்டு தொடங்கப்படவிருந்த பயணிகள் கப்பலில் முதலாவது சேவையில் கொழும்புக்கு செல்ல வேண்டும் எனற ஆசை என்னுள் எழுந்தது. ஆனால் அந்த நேரத்தில் என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. அடுத்த வாரத்திலேயே திருச்சிக்கு சென்று திருச்சியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அம்மா என்னிடம் " எதுக்கு இப்ப பாஸ்போர்ட்? நீ எங்க போக போற? ". எதுக்கும் இருக்கட்டுமே என்று சொல்லிக்கொண்டேன். நான் விண்ப்பித்த ஒரு மாதத்தில் பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட்டது. ஆனால் பாருங்கள் அரசாங்கம் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை கிடப்பில் போட்டது, அதற்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் சொல்லப்பட்டது.

மீண்டும் பத்து வருடங்கள் கழித்து இந்த திட்டம் இப்போது உயிரோட்டம் பெற்றிருக்கிறது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் எனது பாஸ்போர்ட்டின் காலம் முடிந்து விட்டதே..என்ன செய்வது, அதை புதுப்பித்தாக வேண்டும், அதற்கெல்லாம் இப்போது என்னிடம் நேரமிருப்பதாக தெரியவில்லை. பிறகு பார்க்கலாம்..எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்!!! என்றாலும் பாரதியின் இந்த பாடல் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..

" முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே! "

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி !


அண்மையில் நான் தூத்துக்குடிக்கு சென்றிருந்த போது, அங்கு ஒரு விஷயத்தை என்னால் கவனிக்க முடிந்தது. அது அனேக வீடுகளில் தமிழக அரசு வழங்கிய 14" இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அலங்கரித்துக் கொண்டிருந்தது. அத்தோடு மற்றொன்றையும் சொல்ல வேண்டும். அதன் பக்கத்திலேயே அவர்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் 21' அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது. சில வீடுகளில் LCD திரை கொண்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் பார்க்க நேர்ந்தது. பலர் ஒரு அறையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் மற்றொரு அறையில் பெரிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும். இன்னும் சொல்லப் போனால் அனேக வீடுகளில் இப்பொழுதெல்லாம் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள். நன்றி தமிழக அரசுக்கு!! சிலர் தங்களுக்கு கிடைத்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் அட்டை பெட்டியை திறக்காமலேயே அதை தேவையற்ற ஒரு பொருள் போல மூலையில் போட்டிருக்கிறார்கள். பொதுவாகவே மக்களுக்கு ஒரு மனோபாவம் இருக்கிறது, அது இலவசமாக எது கிடைத்தாலும் வாங்கி விடுவது, அது தேவையா இல்லையா, உபயோகப்படுமா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், இலவசம் என்றால் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் பழக்கம். நம் ஊரில் சொல்வார்களே, " கப்பல்ல பொண்ணு வருதுன்னா, அவனுக்கு ஒன்று, அவன் அப்பாவிற்கு ஒன்று, அவன் தாத்தாக்கு ஒன்று கேட்பானாம் " அது போல தான்.

3492 கோடியே 72 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க திட்டமிட்டு, இது வரை 1 கோடியே 58 லட்சத்து 228 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப் பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தமிழக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 05.02. 2011 அன்று தமிழக அரசு தாக்கல் செய்த 2011-12 ஆண்டிற்கான இடைக் கால வரவு செலவு அறிக்கையில் மேலும் ரூ.249 கோடியில் 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்ள கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.06.2006 தேதியிட்ட அரசாணை எண் 3 ல், " மகளிருக்கு பொழுது போக்கிற்காகவும், அவர்கள் பொது அறிவு பெறவும் வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, அவை இல்லாத குடும்பங்களுக்கு வழங்க இந்த அரசு கருதியுள்ளது ". இந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பயன், அதன் உண்மையான பயனாளிகளுக்கு போய் சேர்கிறதா என்றால் உறுதியாக ஆம் என்று சொல்ல முடியாது.

இத்திட்டம் செயல்படுத்துவதில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. முதலில் அந்தந்த பகுதிகளில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகளை அதிகாரிகள் மூலம் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். பின்பு அதற்கேற்ப திட்டமிட்டு செலவினங்களை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். கணக்கெடுப்பில் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள், அந்த வார்டு உறுப்பினர் போன்றவர்களை ஈடுபடுத்தியிருக்கக் கூடாது. இவ்வாறு செய்திருந்தால் இந்த திட்டத்தின் பயன் அதன் உண்மையான பயனாளிக்கு சென்றிருக்கும். மேலும் அதிகப்படியான மற்றும் தேவையில்லாத செலவினங்களை தவிர்த்திருக்கலாம். அதை கொண்டு நல்ல பல பயனுள்ள திட்டங்களை செயல் படுத்தியிருக்கலாம். இன்னமும் தமிழ் நாட்டில் எத்தனையோ கிராமங்களில் நல்ல சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. கிராமத்தில் மற்றும் நகரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் பயனுக்காக பல வசதிகளை செய்திருக்கலாம். அந்த நிதியை கொண்டு இன்னும் எவ்வளவோ மக்களுக்கு மிகவும் தேவையான திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம்.

பல திட்டங்களை செயல்படுத்துவதில் அரசியலும் அரசியல்வாதிகளும் இடையில் வரும் வரை அத்திட்டத்தின் நோக்கம் முழுமையடையாமல் போய்விடும்..