திங்கள், ஆகஸ்ட் 07, 2023

கல்லூரி காலங்கள் !!



 (நான் படித்த தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், 06/8/2023 அன்று எங்கள் B.Sc இயற்பியல் (1994-97) மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் வெள்ளி விழா சந்திப்பின் போது நான் எழுதி, வாசித்த கவிதை)



கால் நூற்றாண்டு கடந்து  நம்
கல்லூரியில் சந்திக்கின்றோம் !
நாம் பழகிய நாட்களும்,
மாறாத நட்பும்,
மறவாத நினைவுகளும்,  
புவியீர்ப்பு விசையாய் நம்மையெல்லாம்
இங்கு ஈர்த்து வந்தது !
எல்லாவற்றிற்கும் மேலாக,
புவியீர்ப்பு மையமாய்
பெருமை கொண்ட நம் கல்லூரி !!

இன்று கல்லூரி படிக்கட்டுகளில்
நாம் முன்னோக்கி நடந்தபோது,
பின்னோக்கி சென்றதே 
நம் நினைவுகளெல்லாம் !!

நந்தவனமாம் நம் கல்லூரியில்
நாளும் மலர்ந்திடும்
நறுமண மலர்களாய்
நடைபோட்ட நாட்கள் !!

முதல் வருடம்,
 முன்பின் தெரியாத முகங்கள்
முரன்கள் சில வந்த போதும்,
நாட்கள் செல்ல செல்ல
நம்பிக்கையும் மலர்ந்ததனால் 
நண்பர்கள் ஆனோம் நாம் !!
மூன்றாம் வருட முடிவில்
முழுவதுமாய் பக்குவப்பட்டோம்!!

இருபாலர் வகுப்புகளின்
இனிதான தொடக்கம் நாம் !
ஏனைய மாணவர்களின் ஏக்கப் பார்வை 
எப்போதும் நம் மீது தான்!
ஆணும் பெண்ணும் சமமென
அன்போடு அமர்க்களம் செய்தோம் !
இயற்பியல் துறை நாமென்று
இனிதாய் பெருமை கொண்டோம் !!

வகுப்பில்லா நேரங்களில்
வாவென்று அழைத்திடுமே
வகுப்பறையின் பின்புறமுள்ள வேப்பமரம் !
வாஞ்சையோடு அதன் நிழலில்
பாடங்களை பகிர்ந்து கொண்டோம் !
சுற்றுலா விவாதங்களும்
அதற்கான பாடல்களின் தேடல்களில்
கேலிகள் பல செய்து - பொய்
கோபம் கொண்டு கலைந்திடுவோம்!!

நாமில்லா நேரங்களில்,
நாம் பயின்ற பாடங்களோடு
பாடல் வரிகளையும் பாடிக்கொண்டு
ஆடிக் காற்றில் இசைந்தாடி
அங்குமிங்கும் நம்மையெல்லாம் 
நாளும் தேடியிருக்கும்
நிழல் தந்த வேப்பமரம் !!

கல்வியோடு நம் கனவுகளையும்
கண்முன்னே நிறுத்தி,
கற்றுணர்ந்த சான்றோராய்
நம்மையெல்லாம் மாற்றிய
நல்மனங் கொண்ட பேராசிரியர்கள் !!

நாம் தயங்கிய போதெல்லாம்,
நம்பிக்கை விதைகளை
நம் மனதினில் தூவி,
தந்தைக்கு நிகராய்
தன்னம்பிக்கை தந்த பேராசிரியர்கள் !!

நம்பிக்கை வைத்து
நண்பர்கள் போல் 
அனைவரின் கருத்திற்கும் 
பேராசிரியர்கள் ஆமோதிக்கும் போதெல்லாம்
ஆனந்தமாய் வருமந்த ஆரவாரம் !!

அழகிய நாட்களின் நினைவலைகள்
அவ்வப்போது ஆசையாய்
ஆழ்மனதை வருடிச்செல்லும் போதெல்லாம்,
அம்மாவின் தாலாட்டில்,
அப்பாவின் பேரன்பில்,
சத்தமின்றி சிரித்து மகிழும்
சிறுபிள்ளை ஆனோம் நாம் !!

நாம் பயின்ற வகுப்பறையில் 
மீண்டும் நாம் நுழையும் போது,
நம்மை நாமே நலம் விசாரித்து கொள்வது போல்,
நினைவுகளோடு நிஜத்தையும்
நம்மோடு கைகோர்த்து வைக்கும் 
கால இயந்திரமாய் நம் கல்லூரி !!

நாம் அமர்ந்த இருக்கைகள்,
நாளும் பேசிய கதைககள்,
பேச தயங்கிய எண்ணங்கள்,
ஏக்கப் பெருமூச்சில் 
மின்காந்த அலையொன்று
மின்னலென வந்து போகும் !!

இன்று வரை,
நம் எண்ணக்கடலிலே,
கல்லூரி நாட்களின் நினைவலையில் 
நிதமும் கால் நனைத்து சிறு பிள்ளையாய் 
மனதிற்குள் மகிழ்ந்திருந்தோம் !

இனி வரும் நாட்களில்,
இனிமை நிறைந்த
இந்த வெள்ளி விழா நினைவுகளும் 
அழியா ஓவியமாய் 
அனைவரின் உள்ளங்களில் 
பொக்கிஷமாய் நிறைந்திருக்கும் !!


                     - மே. இசக்கிமுத்து 



2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள்..உள்ளக்கிடக்கை அழகாய்------------*

பாஸ்கரன் சொன்னது…

உள்ளத்து உணர்வுகளை
தெள்ளத் தெளிவாய்
அள்ளித் தரும் வரிகள்...
மகிழ்ச்சி