வியாழன், நவம்பர் 25, 2010

மழை கவிதை!!










மழை
!

எண்ணற்ற
ஆசைகளை
நெஞ்சில் சுமந்து கொண்டு
தன் காதலியை பார்க்க ஓடோடி வந்தது மேகம்,
பாவம்,
காதலியை காணாமல் விம்மிபோனது!
மலமலவென்று பூமியில் விழுந்தது
மழை (கண்ணீர்) துளிகள்!!

* * *

மழை!

நிலவு பெண்ணை மணமுடிக்க
வானில் சுயம்வரம் நடக்கிறதோ?
இடி முழக்கமிட்டு மிடுக்காக
வந்த பின்பு,
வானவில்லை ஒடிக்க முடியாமல்
தோற்று போன வீரர்களின்
வியர்வை துளிகளோ?

* * *

மழை!

வான மாளிகையில்
குடியிருக்கும்
குடும்பத்தில் என்ன கலாட்டா?
நட்சத்திர குழந்தைகள்
கண்ணீர் சிந்துகிறார்களே!

- மே. இசக்கிமுத்து

செவ்வாய், அக்டோபர் 26, 2010

இது பண்டிகை காலம் !!


தோ இன்னும் இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. அம்மா போன வாரமே முறுக்கு செய்வதற்காக அரிசியை உரலில் வைத்து இடித்து பிறகு அரிப்பில் வைத்து சலித்து தயார் செய்துவிட்டார்கள். நாளைக்கு முறுக்கு சுடுவதற்காக எல்லாம் தயராக இருக்கிறது. அதிரசம் செய்வதற்காக பச்சரிசி மாவையும் தயார் செய்தாகிவிட்டது, வெல்லத்தை பாகாக்கி மாவுடன் சேர்த்து பதமாக இன்று வைத்தால் தான் அடுத்த வாரம் அதிரசம் செய்வதற்கு பதமாக இருக்குமாம். முறுக்கு சுட்டு முடித்த பிறகு முந்தரி கொத்து செய்வதற்கு பச்சசை பயிரை திருவையில் அதற்கேற்றாற் போல உடைத்து வைக்க வேண்டுமாம். பிறகு கலகலா தயார் செய்ய வேண்டுமாம். தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வடைக்கு பருப்பை ஊர வைத்து தீபாவளி அன்று அதிகாலையில் வடை சுட வேண்டுமாம். கடந்த ஒரு வாரமாகவே எனக்கும் தம்பிக்கும் வேலை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கிறது. அடிக்கடி கடைக்கு சென்று அம்மா சொல்லும் பொருட்களை வாங்க வேண்டும், முணுமுணுத்துக் கொண்டே அம்மா சொல்லும் வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அம்மா பலகாரம் செய்யும் போது எப்படி செய்கிறார்கள் என்று அருகிலேயே இருந்து பார்ப்பது, சின்ன சின்ன உதவிகளை செய்வது ஒரு தனி சுகம் தானே!

இதனிடையே அப்பா வேறு, "டெயிலரை போய் பாத்தியா? நம்ம துணியை தச்சுட்டாரா? அப்பப்ப போய் பாத்தா தான் சீக்கிரமே தச்சு தருவார், இல்லைன்னா இழுத்தடிச்சு கடைசியில அரை குறையா தச்சு தந்திடுவார்". அப்பா இரண்டு வாரம் முன்னாடியே துணி எடுத்துட்டு வந்தப்ப, தம்பிக்கு கலர் மற்றும் டிசைன் பிடிக்கலைன்னு அடம் பிடிச்சு திரும்பவும் கடைக்கு போய் அவனுக்கு பிடித்த மாதிரி வாங்கிட்டு வந்து, டெய்லர் கடையில தைக்க கொடுத்தோம். பட்டாசுக்கு இன்னும் வரலல்ல, அதை பற்றி சொல்லவே வேண்டாம். தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரம் இருந்தாலும் போன வாரத்திலிருந்தே என் நண்பர்கள் எல்லோரும் பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பப்ப பள்ளிக்கு போகும் போது அப்பா தரும் காசுளை சேர்த்து வைத்து பக்கத்தில் இருக்கும் பெட்டிக் கடையில் சர வெடியும் ஓலை வெடியும் வாங்கி வெடிக்கிறது. " சாமி போட்டா கிட்ட வைச்ச பத்தியை யாரு எடுத்தா நீனா? " தினமும் விளக்கு வைக்கும் போது அம்மா கிட்ட திட்டு வாங்கி கொள்வதே கடந்த ஒரு வாரமாக வாடிக்கையாகிவிட்டது. தீபாவளிக்கு என்ன என்ன பட்டாசுகள் வாங்கனும்னு ஒரு லிஸ்டே மனசுக்குள்ள போட்டுக்கிடுவோம். பள்ளிக்கூடத்தில் கூட பட்டாசுகள் பற்றிய பேச்சு தான் அதிகமாக பேசுகிறோம். இருந்தாலும் மனசுக்குள்ளே அப்பா நம சொல்ற எல்லா பட்டாசுகளையும் வாங்கித் தருவாங்களா இல்லையா என்ற எண்ணமும் இருந்து கொண்டே இருக்கிறது.

புரியது புரியுது நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு. நான் கொஞ்சம் 18 வருடம் பின்னால போயி பேசிக்கிட்டு இருக்தேங்க. 1992ல் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தீபாவளிக்கு முந்தைய நாட்கள் எப்படி இருந்திச்சுன்னு சொல்லிட்டுயிருந்தேன். அப்போதெல்லாம் தீபாவளிக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் முன்னாடியே ஒரு உற்சாகம், பரபரப்பு நம்மிடம் வந்துவிடும். பண்டிகை கொண்டாடுவதன் நோக்கமே நாம் சந்தோசமக இருக்க வேண்டும் என்பதற்காக தானே, அதற்கான உற்சாகம் இரண்டு மூன்று வாரங்கள் முன்னாடியே வந்தால் தானே பண்டிகையின் முக்கியத்துவம் உணரப்படும்.

ஆனால் சில கிராமங்களை தவிர்த்து, இப்போதெல்லாம் மக்கள் மனங்களில் பண்டிகை கால உற்சாகம் தொற்றிக் கொள்வதில்லை. அதற்கான ஆயத்த வேலைகளில் பொதுவாக நம் மக்கள் ஈடுபட யாருக்கு நேரம் இருக்கிறது ? நேரம் இருந்தாலும் முன்பு போல யாரும் செய்வதில்லை. தீபாவளி, பொங்கலெல்லாம் ஏதோ ஒரு ஞாயிற்றுகிழமை விடுமுறை போல தான் கழிகிறது. இந்த அவசர காலத்தில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னரே பண்டிகைகளுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட யாருக்கும் நேரமில்லை. குடும்பத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு இடத்தில் வேலை செய்யும் நிலை, சில சமயங்களில் தீபாவளிக்கும் வீட்டுக்கு வரமுடியாத வேலை பளு. வந்தாலும் உடனடியாக திரும்ப வேண்டிய கட்டாய வேலைகள். அறிவியல் வளர்ச்சிகள் பல்வேறான வசதிகள் தந்த பிறகு நேரத்தை மிச்சப்படுத்த தொடங்கிவிட்டோம் ஆனால் உற்சாகத்தை தொலைத்துவிட்டோம் என்பதை மறந்துவிடுகிறார்கள், உடனடி பதார்த்தங்கள், ரெடிமேட் துணிகள் தான் வாங்குகிறோம். சில பேர்கள் தீபாவளி சீட்டு என்ற ஒரு திட்டத்தில் சேர்ந்து விடுகிறார்கள், மாதம் ரூ.100 அல்லது தம் வசதிக்கேற்ப செலுத்திவிட்டு தீபாவளி நேரத்தின் போது பலகாரங்கள், ஆடைகள் மற்றும் பாத்திரங்கள் பெற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறாக பண்டிகைகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் ஒரு காலத்தில் நமது சந்ததியினர் பண்டிகைகளின் முக்கியத்துவம் மட்டுமல்ல பண்டிகை கொண்டாடுவதையே மறந்து விடுவார்கள் என்று தான் எண்ண தோன்றுகிறது. பாதி நேரம் அலுவலகத்திலும் மீதி நேரம் தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் இந்த பண்டிகை காலங்களிலாவது பண்டிகையின் முக்கியத்துவம் உணர்நது உற்சாகம் குறையாமல் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கொண்டாடினால் சந்தோசம் இன்னும் இரட்டிப்பாக இருக்கும் அல்லவா!

புதன், பிப்ரவரி 03, 2010

அது ஒரு BIG FUN காலம் !


நான் கடைக்கு செல்லும் போது சில சமயம் என்னுடைய மூன்றரை வயது மகனை அழைத்து செல்வதுண்டு. வழியிலேயே ஆரம்பித்து விடுவான் "அப்பா எனக்கு பூமர் பபுல்கம் வாங்கி தாங்கப்பா கொஞ்ச நேரம் சவச்சிட்டு துப்பிறுவேன்", சில சமயம் "அப்பா புபாலு பபுல்கம் கூட ஒரு ஸ்டிக்ர் பிரியாம், கையில ஒட்டலாம்பா டிவில காமிச்சான், எனக்கு வேணும்பா" என்று வழி நெடுக சொல்லிக் கொண்டே வருவான். கடையை விட்டு செல்லும் போது பபுல்கம் வாங்காமல் வர மாட்டான். அந்த அளவுக்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் சின்னஞ்சிறு சிறுவர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. கார்டூன் நெட்வொர்க், போகோ, சுட்டி டிவி போன்ற சிறுவர்கள் பார்க்கும் தொலைக்காட்சிகளில் சொல்லவே வேண்டாம் குழந்தைகளின் மனங்களில் பதியும்படியான விளம்பரங்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் என்னுடைய மகன் பபுல்கம் (சுவிங்கம்) கேட்கும் போதெல்லாம் எனக்கு என் பள்ளி பருவ நாட்கள் நினைவுக்கு வந்துவிடும்.

நான் தூத்துக்குடி St.Charles English Medium Schoolலில் ஐந்தாம் வகுப்பு (1987களில்) படிக்கும் போது "பிக் பன்" (BIG FUN) சுவிங்கம் ரொம்ப பிரபலம். தினமும் மதியம் சாப்பிட்ட பின்பு இந்த BIG FUN சுவிங்கத்தை சுவைத்தபடியே தான் விளையாடுவோம். சில சமயமங்களில் BIG FUNனை சுவைத்தபடியே வகுப்பிற்கு சென்று டீச்சரிடம் திட்டு வாங்கியதும் உண்டு. BIG FUN சுவிங்கத்துடன் வரும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் படங்களையும், அதில் குறிக்கப்பட்டுள்ள ரன்களையும் சேகரிப்பதில் போட்டி போட்டுக் கொள்வோம். கபில் தேவ், கவாஸ்கர், திலிப் வென்சர்க்கார், ரவி சாஸ்த்ரி, விவன் ரிச்சர்ட்ஸ, அலன் பார்டர், மனிந்தர்சிங் போன்றவர்களின் படங்களை ஆர்வமாக சேர்த்து கொள்வோம். 6 மற்றும் 4 ரன்கள் குறிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் படங்கள் கிடைப்பது மிகவும் கடினம். 6 ரன் கிடைத்து விட்டால் அதை மற்றவர்களிடம் பெருமையாக காட்டிக்கொள்வோம். சில படங்களை நண்பர்களிடம் பரிமாற்றிக்கொள்வோம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் BIG FUN கிடைக்காது, அதனால் பள்ளிக்கு அருகில் சிதம்பரநகரில் உள்ள பேக்கிரிக்கு சென்று தான் BIG FUN வாங்குவேன். ஐந்து BIG FUN சுவிங்கம் மொத்தமாக வாங்கினால் ஒரு சிறிய பயிற்ச்சி புத்தகம் மாதரி ஒன்றை கடைக்காரர் தருவார், அதில் குறிப்பிட்டுள்ள படி அந்தந்த இடத்தில் அதற்குறிய ரன் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் படத்தை ஒட்டி முடித்து கொடுத்தால் கிரிக்கெட் பந்து, டையரி கொடுப்பார்கள் என்று கடைகளில் தொங்கி கொண்டிருக்கும் விளம்பரத்தை பார்த்து BIG FUN சுவிங்கம் வாங்கும் எங்களின் ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது. BIG FUN னின் விலை 35 காசுகள், அந்த நேரங்களில் 35 காசுகள் என்பது எங்களுக்கு மிக பெரிய தொகை. அவ்வப்போது 5 அல்லது 10 காசுகள் தான் எங்களுக்கு கிடைக்கும், அதையெல்லாம் சேர்த்து வைத்து 35 காசுகள் சேர்ந்ததும் ஒரு BIG FUN வாங்கி விடுவோம். ஆனால் பரிசு கிடைக்கும் அளவுக்கு என்னால் எல்லா படங்களையும் சேர்க்க முடியாமல் தான் போனது. தொலைக்காட்சி பெட்டி எல்லோருடைய வீட்டிலும் குடிபுகாத மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் தொடங்கப்படாத அந்த காலங்களிலும் சிறுவர்களின் மத்தியில் அந்த BIG FUN மிகவும் பிரபலமாக இருந்தது. இன்று நினைத்து பார்க்கும் போதும் ஆனந்தமாக தான் இருக்கிறது. அது ஒரு BIG FUN காலம் !