வெள்ளி, ஆகஸ்ட் 29, 2008

பிள்ளையார்!!


ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு
கோயில் கொண்டிருக்கிறேன்!
நகரங்களில் நாற்புற மண்டபத்தின் நடுவே!
கிராமங்களில்,
சின்ன சிலைகளாய், சிறு கற்களாய்
அரசமர அரியணையில்
மழையில் நனைந்தபடி, வெயிலில் காய்ந்தபடி!
இருந்தாலும் பரவாயில்லை
ஆத்தங்கரையோரம், அரசமரத்தடியில்
ஆனந்தமாயிருக்கிறேன்!

வடநாட்டில் இரண்டு மனைவிகளுடன்
இடிபட்டுகொண்டிருப்பதைவிட
தென்நாட்டில் சுண்டெலி துணையுடன்
தெரு முனையில் பிரம்மச்சாரியாய்
பிரவேசிக்கவே விருப்பம் எனக்கு!

தைப் பொங்கல் திருநாளில்
சாணத்திலான என்னுருவம் தான்
சகல இல்லங்களிலும் அலங்கரிக்கும்!

மூத்தவனாய் பிறந்ததினால்
முதல்வனென்று ஆனேனோ?
முக்கண்ணன் கோவிலிலும்
முதல் வணக்கம் தந்திடுவர்!

சதுர்த்தி தினமன்று
சகல ஊர்களிலும்
கொலுக்கட்டையோடு பலகாரம் பல படைத்து
கொண்டாடி மகிழ்ந்திடுவர்!
சுறுசுறுப்பாய் சுற்றோ சுற்றுவென்று சுற்றிவருவர்
சுட சுட சுண்டலை கொரித்துக்கொண்டு!
அவரவர் ஆசைப்படி அவதாரம் பல கொண்டு
ஆனந்தமாய் ஆலயத்தில் ஆசிகள் அளித்திடுவேன்!

ஆறேழு நாளில்
ஆற்றிலோ கடலிலோ கறையும் போது
சில நேரம் சிலிர்த்திருக்கிறேன்!
கடலலை மிஞ்சும் மக்கள் கூட்டத்தை கண்டு !!
இதே ஒற்றுமை மனித மனங்களில் நிலைத்திருந்தால்
மானுடம் மலையென உயர்ந்திருக்கும்!
சில நேரம் கலங்கியிருக்கிறேன்
கடலில் என்னை கரைத்துவிட்டு கரையேறும்போது கலவரமாம்!!

எண்ணற்ற வேணடுதல்கள்
என் செவியிரண்டும் நிரம்பிவிடும்!
தேர்வில் வெற்றி வேண்டி, தேர்தலில் பதவி வேண்டி,
தேடிய செல்வம் நிலைக்க வேண்டி,
வேலை வேண்டி, காரியத்தில் வெற்றி வேண்டி,
கல்யாண காலம் வேண்டி,
கவலைகள் கரைந்திட, கஷ்டங்கள் போக்கிட
எண்ணற்ற வேண்டுதல்கள் வரிசையாய் வந்து நிற்கும்!
அக்கறையாய் கேட்டிடுவேன் அமைதியுற செய்திடுவேன்!
செய்யும் செயல்களில் நம்பிக்கை வைத்தால்,
எண்ணங்கள் எல்லாம் நல்லவையென்றால்
என்றென்றும் ஆசிகள் அளித்திடுவேன்!!

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2008

அரசாங்க அடாவடிகள்!


மைசூர் விரைவு ரயிலில் தூத்துக்குடியிலிருந்து பெங்களூர் வந்திறங்கிய அம்மாவையும் அத்தையையும் அழைத்து கொண்டு படிகளில் இருந்து இறங்கி வெளியே வந்த போது, டிக்கெட் பரிசோதகருடன் அமர்ந்திருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் (RPF) ஒருவர் எங்களை அழைத்து, எங்கிருந்து வருகிறீர்கள், எந்த ரயிலில் வந்தீர்கள் என்றேல்லாம் விசாரித்து விட்டு, அம்மா பையில் வைத்திருந்த முருங்கை காயை பார்த்து "இரண்டு முருங்கை காய் கொடு" என்றார் அதிகார தோரணையோடு. சரி இங்கே பெங்களூரில் இந்த மாதிரி நல்ல முருங்கை காய் கிடைக்காது, அதனால் எங்கள் பையில் இருந்த முருங்கை காயை பார்த்தவுடன் ஆசைப்பட்டு கேட்கிறார் என்று நினைத்து பையிலிருந்து இரண்டு காயை எடுத்து அவரிடம் கொடுத்தாள் அம்மா. அதிக அதிகாரமாய் "ரெண்டு எதுக்கு இன்னும் கொடு" என்றாரே பார்க்கலாம். வடிவேலு நிறைய படங்களில் சொல்லும் வசனம் "அட அவனா நீ " என்று நான் நினைத்துக் கொண்டு, ‍அவ்வளவு தான் இன்னும் கொடுக்க மாட்டேன் என்று அவரிடம் சொல்லிகொண்டு நடக்க தொடங்கினேன். அந்த காவலர் விடவில்லை, நில்லு நில்லு எங்கள் பின்னாலே வந்து, டிக்கெட் இருக்கா, உன்கிட்ட பிளாட்பாரம் டிக்கெட் இருக்கா என்று கேட்டுகொண்டே வர தொடங்கினார். எல்லாம் இருக்கு என்று சொல்லிவிட்டு நடக்க தொடங்கினோம். " பிளாட்பாரம் டிக்கெட் இல்லாம அடுத்தவாட்டி வா உன்ன பாத்துக்கிறேன் " என்று சொல்லி விட்டு சென்றாரே பார்க்கலாம். ஏதோ நான் பிளாட் பாரம் டிக்கெட் எடுக்காமல் அடிக்கடி வருவது மாதிரியும் அந்த காவலர் தான் என்னை அய்யோ பாவம் என்று விட்டுவிடுவது மாதிரியும் பேசிக் கொண்டு சென்றதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது.

இது சென்ற வாரம் நடந்த சம்பவம். எனக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் இந்த சமூகத்தை காக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்த சிலர் இந்த மாதிரி நடக்கும்போது ஆத்திரம் தான் வந்தது. தட்டிப் பறிக்கும் திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது. இந்த காவலரின் நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது, இவர் தன் அதிகாரத்தின் மூலம் அப்பாவி பயணிகளிடம் எதை எதையெல்லாம் வாங்க முடியுமோ அதையெல்லாம் வாங்கி பழக்கப்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளை பிடித்தால் அவரகளிடம் இவர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்கள் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. அரசாங்க சம்பளம், பல வகையான சலுகைகள் எல்லாம் இருந்தும் இவர்களின் பேராசை குறையவில்லை.

இம்மாதிரியான சுயநலவாதிகள் காவல்துறையில் இருக்கும் வரை அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் சமூக விரோத செயல்கள் செவ்வனே நடந்தேறத்தானே செய்யும்.

புதன், ஆகஸ்ட் 06, 2008

திண்ணை !!

சென்ற வாரம் சனிக்கிழமையன்று இரவு 8.30 மணியிருக்கும், சாப்பிட்டு விட்டு வீட்டின் வெளியே உள்ள சிறிய திண்ணை படியில் காற்றாட அமர்ந்திருந்தேன். அந்த சூழ்நிலை மிகவும் அமைதியாக இருந்தது, கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்தது. 8.30 மணிக்கே எங்கள் வரிசையில் உள்ள வீடுகளின் கதவுகள் அடைக்கப்பட்டு விடுகின்றன. சிறார்களின் சத்தம் அங்கில்லை. அனைவரும் வீட்டினுள்ளே இருந்துவிடுகிறார்கள். இரவு சாப்பிட்டு விட்டு திண்ணையில் காற்றாட அமர்ந்திருப்பதில் ஒரு சுகம் இருக்கிறதே, அப்பப்பா சொல்ல முடியாது, அனுபவித்து பார்க்க வேண்டும்.


சிறு வயது நினைவலைகள் மனதில் நிழலாட தொடங்கியது. எங்கள் தெருவில் இருந்த வீடுகளெல்லாம் ஓட்டு வீடுகள் தான். எல்லா வீட்டின் முன் வாசல் அருகே திண்ணை உண்டு. வரவேற்பறை போல திண்ணையை பயன்படுத்துவதுண்டு. யாரேனும் வீட்டுக்கு வந்தால் முதலில் திண்ணையில் தான் "அப்பாட" என்று உட்கார்வார்கள். வேலை நிமித்த பேச்சாகட்டும், அரசியல் விவாதமாகட்டும், பெண்கள் சமையல் வேலைகளை முடித்துவிட்டு ஊர் நடப்புகளை பேசுவதாகட்டும் எல்லாவற்றிற்கும் அடைக்கலம் திண்ணை தான். எல்லாவற்றிற்கும் மேல் மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்து வீட்டு பாடங்களை எழுதுவதும் பின்பு விளையாடுவதும் அந்த சுகமே தனி தான்.


சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம், எங்களின் விளையாட்டுக் களமாகவே மாறிவிடும் அந்த திண்ணை. காலை தொடங்கி இரவு வரை எங்கள் ஆட்டங்கள் அங்கே அரங்கேறும். முழு ஆண்டு தேர்வு விடுமுறை காலங்களில் இன்னும் சொல்லவே வேண்டாம். விளையாட்டுகள் பல பல, வீடு கட்டுவது, இலைகள் செடிகளை பறித்து வந்து சோறு சமைப்பது, களி மண்னால் சாமி செய்து அதற்கு கொடை விழா நடத்துவது, தாயம், பல்லாங்குழி, ஐஸ்பால், கல்லா மண்ணா என விளையாட்டுகள் வித விதமாய் அரங்கேறும். சில சமயம் பெற்றோர்களுக்கு எங்கள் திண்ணை விளையாட்டுகள் பெரும் தொல்லையாக மாறுவதும் உண்டு. சில நேரம் எங்களின் தொல்லைகள் எல்லை மீறும் போது அம்மாவிடம் திட்டுகளும் வாங்குவதுண்டு. அதற்கு மறுநாளே விளையாட்டு இடம் நண்பன் வீட்டு திண்ணைக்கு மாறியிருக்கும். குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுவது போல எங்களின் விளையாட்டு இடமும் திண்ணை திண்ணையாக மாறி கொண்டே இருக்கும். இரவு சாப்பாடு கண்டிப்பாக திண்ணையில் வைத்து தான். பக்கத்து வீட்டு நண்பர்களோடு சேர்நது கூட்டாஞ்சோறு சாப்பிடுவது. வித விதமான கதைகள் சொல்லி மகிழ்வது, திண்ணையோடு மகிழந்த நாட்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.


கால மாற்றத்தில், தற்பொழுது கட்டப்படுகின்ற அனேக வீடுகளில் திண்ணை இருப்பதில்லை. நிலத்தில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும், அதில் அடுக்கு மாடி கட்டிடம் கட்டி விடுகிறார்கள், குழந்தைகளின் விளையாட்டு இடம் பற்றி கவலை கொள்வதற்கு அவர்களுக்கு நேரமில்லை. தற்கால சிறுவர்களின் முக்கிய விளையாட்டாக கிரிக்கெட் இருப்பதை நாம் ஆங்காங்கே தெருக்களில் காணலாம். சில சிறுவர்களின் மாலை நேர விளையாட்டாக சைக்கிள் ஓட்டுல். மேலும் சிறுவர்களின் நட்பு வட்டம் பள்ளி தோழர்களை விட்டு விரிவடைய மறுக்கின்ற சூழ்நிலையில் தான் தற்பொழுது இருக்கின்றது. விசாலமாக சிந்திக்கும் மனநிலை வீட்டுக்குள்ளே மறைந்துவிடுது. இதெல்லாம் அவசரயுகத்தின் அலங்கோலங்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது !!