திங்கள், டிசம்பர் 09, 2013

முற்றம் கொண்ட வீடு வேண்டும்..

முற்றத்தில் பாய் விரித்து
முதலில் வந்து படுத்திருப்பாய்,
கால் மேலே கால் போட்டு
கையிரண்டை தலையில் வைத்து
நிலவு என்னை அழைத்திடுவாய்!

அன்றாட நிகழ்வுகளை
அலுப்புடனே சொல்லிடுவாய்
சரியா தவறா என்று நான்
யோசிக்கும் முன்பே - நீ
சரியென்றும் அது தவறென்றும்
தலையாட்டி சொல்லிடுவாய்!

ஏதேதோ வார்த்தைகளை
ஏற்ற இறக்கத்தோடு
எப்படியிருக்கு இது
அருமை அருமையென
ஆனந்த சிரிப்பொலி!

கவிதையென காகிதத்தில்
கருப்பு மையால் எழுதுமுன்னே - நீ
கழித்து போட்ட வார்த்தைகளை
கவனமாய் சேகரிப்பேன்
இன்னொரு கவிதை!

நீ முணுமுணுத்த
பாடல் வரிகளையெல்லாம்
பள்ளி பிள்ளையாய்
பாடி திரிகிறேன் நான்!

இப்போதெல்லாம்,
நீ எங்கெங்கு சென்றாலும்
தொடர்கிறேன் நான்,
முன்பு போல பேச வேண்டும்,
முற்றம் கொண்ட வீடு வேண்டும்!

                                                   -மே.இசக்கிமுத்து

வெள்ளி, அக்டோபர் 25, 2013

பட்டுப் பூச்சி

ழைக் காலம் தொடங்கிவிட்டது, மழைக் காலம் என்றாலே என் மனதிற்குள் வந்து நிற்பது பட்டுப் பூச்சி தான். இதனை வெல்வெட் பூச்சி என்றும் கூறுவார்கள். இரவு நேரத்தில் மழை பெய்ததென்றால் காலையில் மணல்வெளிகளிலும் அதனை சுற்றியுள்ள புல்வெளிகளிலும் சின்ன சின்னதாய் சிவப்பு நிறத்தில் பளபளவென்று சென்று கொண்டிருக்கும் இந்த பட்டுப் பூச்சிகள். மழைக் காலங்களில் இந்த பட்டுப் பூச்சிகளை பார்க்கும் போதெல்லாம் எனது ஆரம்பப் பள்ளி பருவ நாட்கள் தான் பட்டென நினைவுக்கு வரும். 

எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு மைதானம் போன்ற இடம் உண்டு, மழைக் காலங்களில் மதிய உணவு வேளையில் சாப்பிட்ட பின்பு இந்த மைதானத்திற்கு சென்று பட்டுப் பூச்சி தேடி பிடித்து அதை பென்சில் டப்டாவில் வைத்து வீீட்டிற்கு எடுத்து செல்வதுண்டு. விடுமுறை நாட்களென்றால் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தேரியில் பட்டுப் பூச்சி தேடி பிடிப்போம். யார் அதிகமாக பிடிக்கிறார்கள் என்று நண்பர்களுக்குள் ஒரு போட்டியே உண்டு. ஒன்று அல்லது இரண்டு கிடைத்தால் காலி தீப்பெட்டியிலும், நிறைய வைத்திருப்பவர்கள் பெரிய டப்பாவில் வைத்து வளர்ப்போம். அதற்கு இரையாக அருகம் புள்ளை பொட்டு வைப்போம். தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பட்டுப் பூச்சி என்ன செய்கிறது என்றும் குட்டியிட்டிருக்கிறதா என்றும் பார்ப்பதுண்டு. அதன் செய்கைகளை நண்பர்களிடம் பெருமையாக பேசிக்கொள்வோம். சின்னது, பெரியது மற்றும் குட்டிகள் என பார்த்து ரசித்து கொண்டே இருந்த நாட்கள் நினைவலைகளாய் இன்றும் மனதை நனைத்துக் கொண்டு தான் இருக்கிறது.. 

                                                                                                                          - மே. இசக்கிமுத்து..

வியாழன், அக்டோபர் 10, 2013

மறந்தும் நீ ..

வண்ணத்துப் பூச்சியாய்
வண்ணங்கள் காட்டி
வளைந்து வளைந்து எனை
அழைத்து செல்கிறாய் !

இறக்கை முளைத்ததாய்
இரு கையசைத்து தொடர்கிறேன் நான் !

மலரோடு மலராக நீ
மறந்தும் மறைந்துக் கொள்ளாதே
விழுந்து விடுவேன் நான் !  

                              - மே.இசக்கிமுத்து..

வியாழன், ஆகஸ்ட் 22, 2013

தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்!

ப்பாட, ஒரு வழியாக தன் மகள் காதல் சம்மந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்துவிட்டது, தன் மகள் தன்னிடம் வந்து விட்டாள், இது தனக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல எல்லா பெற்றோர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று மனமுருகி சொல்லியிருக்கிறார் இயக்குனர் சேரன். உண்மை தான் பொறுப்புள்ள எந்த தந்தைக்கும் தன் மகளை நல்ல ஒழுக்கம் மற்றும் பொறுப்புள்ளவருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கடமை உண்டு. மூன்று வாரங்களாக காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, இப்போது தான் அவர் மனதுக்கு நிம்மதி கிடைத்திருக்கும். அந்த கடினமாக காலங்களில் திரு. சேரன் அவர்களுக்கு ஆதரவாக திரைப்படத் துறையை சார்ந்த அனைவரும் இருந்தார்கள்.

இதில் ஒன்றை கவனத்தில் வேண்டும். திரு.சேரன் அவர்கள் ஒரு பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தபடியால் தான் இந்த பிரச்சனை தொலைக்காட்சிகளிலும், தினசரிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இது போன்ற காதல் விவகாரங்கள் தினம் தினம் நம் நாட்டில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. படிக்கும் போது காதலென்று தங்கள் படிப்பையும் வாழ்க்கையையும் தொலைத்து விட்டு எத்தனை மாணவிகள் இள வயதில் வழியறியாது தவித்து கொண்டிக்கிறார்கள். திரு.சேரன் அவர்கள் எப்படி கடுமையான மன உளைச்சலுக்கும் அலைச்சலுக்கும் ஆளாகினாறோ அது போல தான் மகளை பெற்ற பல பெற்றோர்கள் இந்த பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தினம் தினம் தவித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சாமானியர்களாக இருப்பதனால் இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வருவதில்லை.

இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு சினிமாவும் ஒரு காரணம் என்பதை நம்மால் மறுக்க முடியாது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்கள் கணினியிலும் செல் பேசியிலும் சினிமாவை பதிவிறக்கம் செய்து பார்ப்பதை பார்த்திருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் அபரிவிதமான வளர்ச்சி கண்டு விட்ட இந்த காலத்தில் இன்றைய திரைப்படங்கள் படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கால திரைப்படங்கள் பலவும் காதலை மையமாக வைத்தே எடுக்கப் படுகின்றன. பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் காதல், பள்ளி செல்லும் ஒரு மாணவி வெட்டியாக ஊரை சுற்றுபவனோடு காதல், கல்லூரி மாணவி ஒரு ரவுடியோடு காதல் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதை ரசிக்கும் மாணவர்கள் மத்தியில் இதன் தாக்கம் இருக்கத் தானே செய்யும். பக்குவப் படாத வயதில் இது தான் வாழ்க்கை என்று நினைத்து தங்கள் படிப்பையும் வாழ்க்கையையும் தொலைத்து கொள்கிறார்கள். 

திரைப்படங்களில் காதல் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை, காதலை பக்குவமாக, நடைமுறைக்கு ஏற்றாற் போல, கண்ணியமாக சொல்லலாமே. திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் அதை ஒரு வியாபார நோக்கத்தோடு மட்டும் பார்க்காமல் கொஞ்சம் சமூக பொறுப்புணர்ச்சியோடும் திரைப்படங்கள் தயாரிக்கலாமே. தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும் என்று சொல்வார்கள். தன் மகளின் 'பக்குவமற்ற காதல்' என்னும் தலைவலியிலிருந்து திரு.சேரன் அவர்கள் இப்போது தான் விடுபட்டிருக்கிறார், பார்ப்போம், திரைத் துறையினர் இந்த பாடத்தை புரிந்து கொள்வார்களா என்று.

                                                                                                                     - மே.இசக்கிமுத்து

புதன், ஆகஸ்ட் 21, 2013

விமர்சனங்கள்

ழியேதும் இல்லாமல்
ஆமாம் ஆமாமென்று
ஆமோதித்து விட்டு - நான்
நகர்ந்த வேளையில்
நமட்டு சிரிப்புடன்
முணுமுணுப்பாய் விமர்சனங்கள்
முற்றுபெறா எச்சங்களாய்
பின்னால் தொடர்ந்தாலும் - நான்
முன் நோக்கி நடப்பதனால்
தடைக் கல்லாய் ஆவதில்லை!

அதிகார அசைவுகளுக்கு
அதற்கேற்ற லயம் தேடும்
விற்பன்னர்களாய்,
தனக்கான சிந்தனை
சிறிதேனும் இல்லாமல்
தலையாட்டி பழகிவிட்ட
தலைகளின் நடுவே
நியதியின் பாதையில்
நெடுந்தூர பயணத்தில்
சோர்ந்து விடுவேனென்று
நினைத்திட வேண்டாம்!

                                 - மே.இசக்கிமுத்து

புதன், ஆகஸ்ட் 14, 2013

சுதந்திர உணர்வு

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்
திக்கெட்டும் கெடுபிடி!
பல அடுக்கு பாதுகாப்பு
உச்ச கட்ட உஷார் நிலை!

சுதந்திர நாளில் இங்கு
பரந்த வானில் கூட தடை!

விடுதலை நாள்
விடுமுறை நாளாய்
தொலைக்காட்சி தொடர்களில்
தொலைத்து நிற்கிறோம்!

ஆண்டுகள் பல போராடி
அடிமைதனத்தை தகர்த்தெறிந்து
ஆனந்த சுதந்திரம் பெற்றோம்!

சுயநல செயல்களில்
நாட்டுப் பற்று நசுக்கப்பட்டு
அந்நிய சக்திகளின் சூழ்ச்சியில்
சுகப்பட்டு கிடக்கும் சிலரால் தான்
சுதந்திர நாளில்
சுருங்கி கிடக்கிறது
சுதந்திர உணர்வு!

                                                                             -மே.இசக்கிமுத்து

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

என் உலகம்

ளவேனில் இரவொன்றில்
இளைப்பாற அமருகையில்
இதமான தென்றலாய்
தெம்மாங்கு பாட்டிசைத்தாய்!

முதுவேனில் முகம் கலைந்து
புழுதி பறந்த பொட்டலிலே
ஒற்றையாய் நான் நிற்கையிலே
நிழலாய் நீண்டு நின்றாய்!

கார்கால வெள்ளத்தில்
அடை மழையின் அரற்றலுக்கும்
அஞ்சாமல் குதித்தெழும் குமிழியாய்
மனதினிலே நிலைத்திருந்தாய்!

கூதிர் காலத்தின்
இலையுதிர் மரம் போல
இல்லாமல் இருந்தாலும்,

முன்பனிக் காலத்தில்
முளைத்தெழும் தளிராய்
முகமலர்ந்து சிரித்து வந்தாய்!

பின்பனிக் காலத்தில்
பனித் திரை கிழித்து
பட்டென பாயும்
பகலவன் ஒளியாய்!

தென்றலாய், நிழலாய்
குமிழியாய், தளிராய்
ஒளியாய் ஒவ்வொரு நிகழ்விலும்
பழகிய இதயம் பக்கத்தில் உணர்ந்தேன்!

ஒன்றின் பின் ஒன்றாய்
வரிசையாய் வரும் காலங்களிலெல்லாம்
நம்பிக்கை தருவது
என்னோடு வரும் நட்பே தான்!

நட்புச் சூரியனை
நாளும் சுற்றும் கோள்களால்
இயங்குவது என்னுலகம்! ‌ 

                                  - மே.இசக்கிமுத்து

வியாழன், ஜனவரி 17, 2013

ரோஜா செடியின் விண்ணப்பமொன்று....


டி காற்றென்றால்
அங்கும் இங்கும் அசைந்தாடி
நறுமணப் பாடலோடு,
தலையாட்டி தட்டாங்கல்லாடி
குதூகலித்திருந்தோமே!

மங்கையரே,
கூந்தலில் சூடிக் கொள்ள
தேடி வரும்போது,
அய்யோவென ஓடிடத்தான்
அறியவில்லை எங்களுக்கு!
முட்களிருந்தும் கூட
முட்டிவிட மனமில்லை!
அத்தனை பூக்களையும்
தட்டிப் பறித்தீர்களே
தயவேதுமில்லாமல்!
கன்னி பெண் நாங்கள்
கைம்பெண்ணாய் ஆனோமே!

மலர்ந்தவுடன் மங்கையின்
கூந்தலில் குடியேறுவதில்
வருத்தமொன்றும் இல்லை,
அலங்காரமாய் பார்ப்பதில்
எங்களுக்கும் ஆனந்தம் தான்!

ஒய்யார மங்கையரே
ஒரே ஒரு விண்ணப்பம்,
அத்தனை பூக்களையும்
அப்படியே பறிக்க வேண்டாம்,
ஒன்றிரெண்டாவது விட்டு வையுங்கள்
அலங்கரித்து கொள்வதில்
எங்களுக்கும் ஆசையுண்டு!

                       - மே.இசக்கிமுத்து