வியாழன், ஜனவரி 11, 2024

ஈரம்!

ரண்டு நாட்கள் 
கனமழை என்றார்கள்,
இடியுடன் தொடங்கிய தூறல் மழை
இரவெல்லாம் கொட்டித் தீர்த்தது !

ஓடுகளின் இடையிலிருந்து ஒவ்வொரு துளியாய்
பரப்பி வைத்த பாத்திரத்தில் நிரம்பி வழிந்தது !
ஓவென்ற பேய் மழையும் ஓய்ந்தபாடில்லை !

விடிந்து வந்து பார்க்கும் போது
வீதியெங்கும் வெள்ளக் காடு !
நடை வரை வந்த மழைநீர்
நடுவீட்டினுள் வந்துவிட்டால் ?
'அதெல்லாம் வராது போய் உட்காரு'
அம்மாவின் அதட்டலுக்கு அமைதியானேன் !

தாமிரபரணியில் வெள்ளமாம்,
குளங்கள் உடைந்துவிட்டதாம்,
மழை இன்னும் விடவில்லை,
அப்பா வந்து சொன்னார்கள் !
கொஞ்சம் யோசனை செய்வதற்குள்
குளங்களை உடைத்து வந்த வெள்ளநீர்
கொடூர முகத்தோடு கடகடவென
வீதியின் வழியே வீட்டினுள் நுழைந்தது !
வீட்டினுள் நுழைந்த வெள்ளம்
விறுவிறுவென முட்டளவை தொட்டது !

என்ன செய்ய எங்கே செல்ல
முடிவெடுக்கும் முன்னால்,
எதிர் வீட்டு சுந்தரியின்
அப்பாவும் அம்மாவும்
ஓடோடி வந்தார்கள் !
ஒரு கையில் தம்பியையும்
மறு கையில் என்னையும்
இழுத்துக் கொண்டு சென்றார்கள் !

அம்மாவும் அப்பாவும் 
அப்படியே நின்றார்கள் !
'வெள்ளம் வேகமா வருது
வெரசலா மாடிக்கு வாங்க'
குரல் வந்த திசை நோக்கி 
கொஞ்சம் தயங்கி தான் வந்தார்கள் !

வாசல் பெருக்குவதில் ஏற்பட்ட
வாய் தகராறில்
வருடக்கணக்கில் பேசாமல் இருந்தவர்கள்
ஆபத்து நேரத்தில் அத்தனையும் மறந்து
அழைத்துக் கொண்டு சென்றதில்
ஆனந்த கண்ணீர் அம்மாவின் கண்களில் !

மாற்று உடை தந்தார்கள்,
மழை பற்றி பேசினார்கள் !
நெடுநாள் சங்கதிகளை
நெஞ்சார பகிர்ந்தார்கள்!
உள்ளார்ந்த அன்போடு
உணவு சமைத்து தந்தார்கள் !

நானும் சுந்தரியும்
நாளெல்லாம் பேசிக்கொண்டோம் !
சிணுங்கி நின்ற தம்பிக்கு
சிரிக்க வைக்க கதைகள் சொன்னாள் !
செல்லமென்று முத்தமிட்டு
சோறும் அவளே ஊட்டி விட்டாள் !

மறுநாள் காலையில்
மழை கொஞ்சம் நின்றது,
வெள்ளம் வடிய தொடங்கியதும் -எங்கள்
வீட்டிற்கு வந்து பார்த்த போது
வெள்ளம் வேட்டையாடிய சுவடுகள்
உள்ளம் கனக்கச் செய்தது !
பொருட்கள் எல்லாம் பொதுமிக் கிடந்தது !
அப்பாவின் கையைப் பிடித்தபடி
அம்மா அழுகையை அடக்கிக் கொண்டாள் !

என்னை பார்த்த செல்ல பூனை
என் காலைச் சுற்றி வந்தது,
ஆசையோடு தடவிக் கொடுத்தேன்,
அதன் உடம்பெல்லாம் ஈரம் !
பேரிடர் நேரத்திலும் 
மானிட மனங்களில் 
மறையாமல் இருக்கும் ஈரம் போல !!

                                     - மே. இசக்கிமுத்து