சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 24, 2025

தாயுமானவன்!

ச்சி வெயில் அனலென தகிக்க,
உள்ளங்கால் ஊன்றிட
உயிர் போகும் சுடு மணலில் 
ஓடித் திரிந்த இளங்கன்று,
இளைப்பாற இடம் தேடி 
புளிய மரத்தடியில் வந்து நின்று 
' மா ' வென்று இருமுறை 
வயிறுவொட்ட கத்தியது !

மேற்பக்க வரப்பை தாண்டி 
மேச்சலில் நின்றிருந்த தாய் பசுவும்
குரல் வந்த திசை நோக்கி 
' ம்மா ' வென்று அழுத்தமாக
தலையசைத்து கத்தியது !

டேய் சுடலை எங்கடா இருக்க?
களையெடுத்துக் கொண்டிருந்த
கந்தனின் குரல் கேட்டு 
குதூகல பாய்ச்சலில் 
ஓடி வந்து நின்றதங்கே
இளங்கன்று சுடலையாண்டி!

மறுகனமே மடி சுரக்க
ம்மா ' வென்று தாய் பசுவும் அழைத்திட,
மான் போல துள்ளிக் கொண்டு
மடி முட்டிக் குடிக்கும் பொழுது,
மனமெங்கும் உணர்ச்சி பெருக,
கந்தனின் கண்களில் நீர் துளிகள்!
தாயுள்ளம் ததும்பி நிற்க,
தடவிக் கொடுத்து நின்றிருந்தான் - அந்த 
தாயுமானவன் !!

                             -  மே. இசக்கிமுத்து

வியாழன், ஜனவரி 11, 2024

ஈரம்!

ரண்டு நாட்கள் 
கனமழை என்றார்கள்,
இடியுடன் தொடங்கிய தூறல் மழை
இரவெல்லாம் கொட்டித் தீர்த்தது !

ஓடுகளின் இடையிலிருந்து ஒவ்வொரு துளியாய்
பரப்பி வைத்த பாத்திரத்தில் நிரம்பி வழிந்தது !
ஓவென்ற பேய் மழையும் ஓய்ந்தபாடில்லை !

விடிந்து வந்து பார்க்கும் போது
வீதியெங்கும் வெள்ளக் காடு !
நடை வரை வந்த மழைநீர்
நடுவீட்டினுள் வந்துவிட்டால் ?
'அதெல்லாம் வராது போய் உட்காரு'
அம்மாவின் அதட்டலுக்கு அமைதியானேன் !

தாமிரபரணியில் வெள்ளமாம்,
குளங்கள் உடைந்துவிட்டதாம்,
மழை இன்னும் விடவில்லை,
அப்பா வந்து சொன்னார்கள் !
கொஞ்சம் யோசனை செய்வதற்குள்
குளங்களை உடைத்து வந்த வெள்ளநீர்
கொடூர முகத்தோடு கடகடவென
வீதியின் வழியே வீட்டினுள் நுழைந்தது !
வீட்டினுள் நுழைந்த வெள்ளம்
விறுவிறுவென முட்டளவை தொட்டது !

என்ன செய்ய எங்கே செல்ல
முடிவெடுக்கும் முன்னால்,
எதிர் வீட்டு சுந்தரியின்
அப்பாவும் அம்மாவும்
ஓடோடி வந்தார்கள் !
ஒரு கையில் தம்பியையும்
மறு கையில் என்னையும்
இழுத்துக் கொண்டு சென்றார்கள் !

அம்மாவும் அப்பாவும் 
அப்படியே நின்றார்கள் !
'வெள்ளம் வேகமா வருது
வெரசலா மாடிக்கு வாங்க'
குரல் வந்த திசை நோக்கி 
கொஞ்சம் தயங்கி தான் வந்தார்கள் !

வாசல் பெருக்குவதில் ஏற்பட்ட
வாய் தகராறில்
வருடக்கணக்கில் பேசாமல் இருந்தவர்கள்
ஆபத்து நேரத்தில் அத்தனையும் மறந்து
அழைத்துக் கொண்டு சென்றதில்
ஆனந்த கண்ணீர் அம்மாவின் கண்களில் !

மாற்று உடை தந்தார்கள்,
மழை பற்றி பேசினார்கள் !
நெடுநாள் சங்கதிகளை
நெஞ்சார பகிர்ந்தார்கள்!
உள்ளார்ந்த அன்போடு
உணவு சமைத்து தந்தார்கள் !

நானும் சுந்தரியும்
நாளெல்லாம் பேசிக்கொண்டோம் !
சிணுங்கி நின்ற தம்பிக்கு
சிரிக்க வைக்க கதைகள் சொன்னாள் !
செல்லமென்று முத்தமிட்டு
சோறும் அவளே ஊட்டி விட்டாள் !

மறுநாள் காலையில்
மழை கொஞ்சம் நின்றது,
வெள்ளம் வடிய தொடங்கியதும் -எங்கள்
வீட்டிற்கு வந்து பார்த்த போது
வெள்ளம் வேட்டையாடிய சுவடுகள்
உள்ளம் கனக்கச் செய்தது !
பொருட்கள் எல்லாம் பொதுமிக் கிடந்தது !
அப்பாவின் கையைப் பிடித்தபடி
அம்மா அழுகையை அடக்கிக் கொண்டாள் !

என்னை பார்த்த செல்ல பூனை
என் காலைச் சுற்றி வந்தது,
ஆசையோடு தடவிக் கொடுத்தேன்,
அதன் உடம்பெல்லாம் ஈரம் !
பேரிடர் நேரத்திலும் 
மானிட மனங்களில் 
மறையாமல் இருக்கும் ஈரம் போல !!

                                     - மே. இசக்கிமுத்து

செவ்வாய், ஜூலை 15, 2014

காக்கை


வாடாச்சி மர உச்சியில்
கூட்டிலிருந்த குஞ்சுகள்
காற்றடி காலத்து கிளையசைவில்
கலவரப்பட்டு கரைந்தபோது
சென்றிருந்த தாய் காகம் 
படபடத்து மூச்சிரைக்க
முட்டி மோதி முன்னே 
வந்து நிறகும்!

துணிவு கொண்ட பிஞ்சு ரெண்டும்
தத்தித் தாவி தனியே 
இறக்கையடித்து பறந்து பழகி
கிளையினில் மீண்டும் 
வந்துமரும்!

கருவேல முற்கள் கூடு
காற்று கொண்டு சென்றதன்று,
கூடிருந்த கொப்பை மட்டும்
வளர்ந்து விட்ட காக்கை ரெண்டும்
வந்து வந்து பார்த்துச் செல்லும்!

உயிர் காக்க இரை தேடி
ஊர் முழுக்க பறந்து சென்று
உறவுவென்ற மற்றொன்றை
மறந்து சென்றதொரு காக்கை!
தணியாத கடலலையாய்
தவிப்பாய் திரிந்தது மற்றொன்று!

இன்றும் கூட,
மொட்டை மர உச்சியில்
தன் கூடிருந்த கொப்பில் 
கொஞ்ச நேரம் வந்தமர்ந்து
கரையாத நினைவுகளில்
நிதமும் கரைந்து விட்டு போகும்
அந்த காக்கை!

                                  - மே.இசக்கிமுத்து..

செவ்வாய், மே 06, 2014

அம்மிக்கல்லும் ஆட்டு உரலும் !


ஞாயிற்று கிழமைகளில் அம்மா மசாலா அரைப்பதற்காக அஞ்சறை பெட்டியிலிருந்து சீரகம், வெந்தயம், பெருங்காயம், மஞ்சள், மிளகு எடுத்துக்கொண்டிருக்கும் போதே நான் அருகே சென்று உட்கார்ந்து விடுவேன். அம்மியில் மசாலா அரைக்கும் போது அதன் அருகிலிருக்கும் கல்லில் நான் உட்கார்ந்து கொண்டு அம்மா எப்போது தேங்காய் அரைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். "இந்த வெங்காயத்தை உரித்து கொடு" என்று சொன்னவுடன், "எனக்கு கொஞ்சம் தேங்காய் தருவியா?" என்று அம்மா சரி என்று சொல்லும் வரை காத்திருப்பேன். "சரி சீக்கிரம் வெங்காயாம் உரிச்சி கொடு" என்று சொன்ன பிறகு தான் வெங்காயம் உரிக்க ஆரம்பிப்பேன். தேங்காய் சில்லை அம்மியில் எடுத்து வைக்கும் போதே, "எனக்கு கொஞ்சம் " என்று கேட்டு வாங்கிவிடுவேன். சில சமயம் அம்மா சின்னதாக கையால் பிய்த்து தரும் போது, "இன்னும் கொஞ்சம் தாம்மா" என்பேன். "ரெண்டு சில் தேங்காய்ல உனக்கே பெரிசா தந்துட்டா கொழம்புக்கு கானாது" என்று சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவிடமிருந்து இன்னொரு சிறிய தேங்காய் துண்டு என் கைக்கு வந்து விடும். அம்மியில் மசாலா அரைத்து முடித்து, அம்மி மற்றும் குழவியிலிருக்கும் மசாலாவை வளித்து தட்டில் வைக்கும் வரை அருகிலேயே இருந்து கவனிப்பது எனது வழக்கமாகயிருந்தது. விளையாடும் போது சில சமயம் அம்மி மேல உட்கார்ந்து இருப்பதை பார்த்து விட்டால் "அம்மி மேல உட்காராதே உட்காராதேனு எத்தனை தடவை சொல்ல, நீனே ஒல்லியா இருக்க, அம்மி மேல உட்கார்ந்த உடம்பு தேஞ்சி போயிடும்" என்று பல தடவை திட்டு வாங்கியதுண்டு.

எங்கள் வீட்டின் திண்னையில் ஆட்டு உரல் ஒன்றும் உண்டு. அப்போதெல்லாம் வாரத்தில் ஒரு நாள் தான் இட்லி - தோசைக்கு மாவு ஆட்டுவார்கள். அதுவும் வெள்ளி கிழமை காலையில் இட்லி அல்லது தோசை கண்டிப்பாக உண்டு. அதற்கு சனி கிழமை சாயந்திரம் ஆட்டு உரலில் மாவு அரைத்து வைக்க வேண்டும். மாவு அரைக்கும் போதும் சில சமயங்களில் அருகே உட்கார்ந்து விடுவேன். முதலில் உழுந்து அரைத்து கொண்டிருக்கும் போதே ஆரம்பித்து விடுவேன், உள்ளங்கையை நீட்டி மாவு கேட்கும் போது, "உழுந்தெல்லாம் திங்க கூடாது, காது கேக்காம போயிரும்" என்ற அம்மாவிடம் "அப்ப அரிசி மாவு தரனும்" என்று முதலிலேயே சொல்லி வைத்து விடுவேன். அரிசி மாவு அரைய கொஞ்சம் நேரம் ஆகும் என்பதால், பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டே இடையிடையில் அரசி அரைபட்டுவிட்டதா என்று உரல் அருகே வந்து பார்த்து கொள்வேன். ஒரு வேளை அம்மா மாவு அரைத்து முடித்துவிட்டால்? மாவு அரைந்து கொண்டிருக்கும்போதே, உரலில் இருந்து எடுத்து என் உள்ளங்கையில் அம்மா தரும் அந்து மாவை ருசித்து சாப்பிடுவதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு. அரைத்து முடித்து பாத்திரத்தில் எடுத்து வைத்த மாவை கொடுத்தாலும் வாங்க மாட்டேன், எனோ அது எனக்கு பிடிக்காமல் போயிருந்தது. வெள்ளி கிழமை வந்தாலே ஒருவித ஆனந்தம் காலையிலேயே என் மனதிற்குள் வந்து விடும், இட்லி கிடைக்குமே. அம்மா தேங்காயை அம்மியில் அரைக்கும் போதே, "வயிறு பசிக்குதம்மா, இட்லி ரெடியா" என்று சொல்ல ஆரம்பித்து விடுவேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, "அம்மா, இன்னிக்கு மதியத்துக்கும் ஸ்கூலுக்கு இட்லி வைம்மா, மூனு போதும்" என்று டிப்பன் பாக்ஸில் இட்டிலியை எடுத்து கொள்வேன். மதியம் பள்ளியில் சாப்பிடும் போது "இன்னிக்கு எங்க வீட்ல இட்லிடா" என்றவாறு சாப்பிடுவேன். இட்லி மற்றும் தோசையென்றால் சாப்பிடும் போது உள்ளத்தில் ஒரு விதமான உற்சாக ஊற்று உதித்து விடும். 

ஆட்டு உரல் தேய்ந்திருந்தால் அரிசி நன்றாக அரைபடாது, அம்மி கொத்துபவரை கூப்பிட்டு கொத்த வைப்போம். அம்மியை கொத்தும் போது அதன் நடுவில் பூ அல்லது கட்டம் போன்று டிசைனாக கொத்தி விடுவார்.அவர் சிறு உளியை வைத்து கவனமாகவும் நேர்த்தியாகவும் கொத்துவதை ஆர்வத்தோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டிருப்பேன். கொத்தி முடித்த பின் "ம்ம் டிசைன் நல்லாருக்கா.." என்று கேட்கும் போது சிரித்துக் கொள்வேன். ஓரு சிறு வேலை என்றாலும் அந்த வேலையில் முழு ஈடுபாடும், திருப்தியாக செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வேலை செய்வது ஒரு பெரிய விஷயம் தான். டேபில் டாப் கிரைண்டரும், மிக்சியும் வீடுகளில் வந்தவுடன், அம்மிக்கும் ஆட்டு உரலுக்கு கிடைத்து வந்த முக்கியத்துவம் முற்றிலுமாக குறையத் தொடங்கியது. அம்மியும் ஆட்டு உரலும் பராமரிப்பு இன்றி முற்றத்தின் ஓரத்தில் போடப்பட்டது, சில வீடுகளில் பழைய சாமான்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டது. இப்போதெல்லாம் அம்மியை திருமண விழாக்களில் அம்மி மதித்தல் சடங்கின் போது வைக்கப்படும் சம்பிரதாயப் பொருளாக தான் பார்க்கப்படுகிறது. 

எங்கள் வீட்டின் ஓரத்திலே பயன்பாடின்றி கிடக்கும் அம்மியை பார்க்கும் போதெல்லாம் ஆழ்மனதில் அது ஏதோ ஒன்றைச் சொல்ல வருவதாய் உணர்கிறேன்..


                                                                                                                  -மே.இசக்கிமுத்து..

வியாழன், மார்ச் 13, 2014

அறிவிலியாய் இருந்து விடு!


ரியெனப் பட்டதை
சட்டெனச் சொல்லி
புரிய வைத்த முயற்சிகளெல்லாம்
மலரினை மறைத்து
முற்களை பறித்த காயங்களாய்
ஆறிட அடம்பிடித்துக் கொண்டிருந்த போது,

பட்டுணர்ந்த ஞானமொன்று
நெஞ்சினுள்ளமர்ந்து சொன்னதின்று,
அறிவிலியாய் இருந்து கொண்டு
ஆமாம் சரியென்றும்
தவறென்று தெரிந்தாலும்
தலையாட்டி வைத்து விடு!

மகிழ்ச்சியில் முகமும்
மலர்ந்திடும் மலராய்!
உறவினர் நண்பர்கள் ஊரார்
உறவினில் விசனங்கள் தவிர்த்திட
சமயத்தில்
அறிவிலியாய் இருப்பதில்
ஆதங்கம் தேவையில்லை!

சிரித்துக் கொண்டே
புரிந்து கொண்டேன்,
அறிவிலியாய் இருப்பதற்கும்
ஞானமொன்று வேண்டுமென்று!

                                  -மே.இசக்கிமுத்து

வியாழன், ஆகஸ்ட் 22, 2013

தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்!

ப்பாட, ஒரு வழியாக தன் மகள் காதல் சம்மந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்துவிட்டது, தன் மகள் தன்னிடம் வந்து விட்டாள், இது தனக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல எல்லா பெற்றோர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று மனமுருகி சொல்லியிருக்கிறார் இயக்குனர் சேரன். உண்மை தான் பொறுப்புள்ள எந்த தந்தைக்கும் தன் மகளை நல்ல ஒழுக்கம் மற்றும் பொறுப்புள்ளவருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கடமை உண்டு. மூன்று வாரங்களாக காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, இப்போது தான் அவர் மனதுக்கு நிம்மதி கிடைத்திருக்கும். அந்த கடினமாக காலங்களில் திரு. சேரன் அவர்களுக்கு ஆதரவாக திரைப்படத் துறையை சார்ந்த அனைவரும் இருந்தார்கள்.

இதில் ஒன்றை கவனத்தில் வேண்டும். திரு.சேரன் அவர்கள் ஒரு பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தபடியால் தான் இந்த பிரச்சனை தொலைக்காட்சிகளிலும், தினசரிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இது போன்ற காதல் விவகாரங்கள் தினம் தினம் நம் நாட்டில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. படிக்கும் போது காதலென்று தங்கள் படிப்பையும் வாழ்க்கையையும் தொலைத்து விட்டு எத்தனை மாணவிகள் இள வயதில் வழியறியாது தவித்து கொண்டிக்கிறார்கள். திரு.சேரன் அவர்கள் எப்படி கடுமையான மன உளைச்சலுக்கும் அலைச்சலுக்கும் ஆளாகினாறோ அது போல தான் மகளை பெற்ற பல பெற்றோர்கள் இந்த பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தினம் தினம் தவித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சாமானியர்களாக இருப்பதனால் இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வருவதில்லை.

இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு சினிமாவும் ஒரு காரணம் என்பதை நம்மால் மறுக்க முடியாது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் தங்கள் கணினியிலும் செல் பேசியிலும் சினிமாவை பதிவிறக்கம் செய்து பார்ப்பதை பார்த்திருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் அபரிவிதமான வளர்ச்சி கண்டு விட்ட இந்த காலத்தில் இன்றைய திரைப்படங்கள் படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கால திரைப்படங்கள் பலவும் காதலை மையமாக வைத்தே எடுக்கப் படுகின்றன. பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் காதல், பள்ளி செல்லும் ஒரு மாணவி வெட்டியாக ஊரை சுற்றுபவனோடு காதல், கல்லூரி மாணவி ஒரு ரவுடியோடு காதல் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதை ரசிக்கும் மாணவர்கள் மத்தியில் இதன் தாக்கம் இருக்கத் தானே செய்யும். பக்குவப் படாத வயதில் இது தான் வாழ்க்கை என்று நினைத்து தங்கள் படிப்பையும் வாழ்க்கையையும் தொலைத்து கொள்கிறார்கள். 

திரைப்படங்களில் காதல் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை, காதலை பக்குவமாக, நடைமுறைக்கு ஏற்றாற் போல, கண்ணியமாக சொல்லலாமே. திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் அதை ஒரு வியாபார நோக்கத்தோடு மட்டும் பார்க்காமல் கொஞ்சம் சமூக பொறுப்புணர்ச்சியோடும் திரைப்படங்கள் தயாரிக்கலாமே. தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும் என்று சொல்வார்கள். தன் மகளின் 'பக்குவமற்ற காதல்' என்னும் தலைவலியிலிருந்து திரு.சேரன் அவர்கள் இப்போது தான் விடுபட்டிருக்கிறார், பார்ப்போம், திரைத் துறையினர் இந்த பாடத்தை புரிந்து கொள்வார்களா என்று.

                                                                                                                     - மே.இசக்கிமுத்து

புதன், ஆகஸ்ட் 14, 2013

சுதந்திர உணர்வு

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்
திக்கெட்டும் கெடுபிடி!
பல அடுக்கு பாதுகாப்பு
உச்ச கட்ட உஷார் நிலை!

சுதந்திர நாளில் இங்கு
பரந்த வானில் கூட தடை!

விடுதலை நாள்
விடுமுறை நாளாய்
தொலைக்காட்சி தொடர்களில்
தொலைத்து நிற்கிறோம்!

ஆண்டுகள் பல போராடி
அடிமைதனத்தை தகர்த்தெறிந்து
ஆனந்த சுதந்திரம் பெற்றோம்!

சுயநல செயல்களில்
நாட்டுப் பற்று நசுக்கப்பட்டு
அந்நிய சக்திகளின் சூழ்ச்சியில்
சுகப்பட்டு கிடக்கும் சிலரால் தான்
சுதந்திர நாளில்
சுருங்கி கிடக்கிறது
சுதந்திர உணர்வு!

                                                                             -மே.இசக்கிமுத்து

திங்கள், ஜூன் 13, 2011

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து !


ரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (13.6.2011) தொடங்க உள்ளது. பிளமிங்கோ லைனர்ஸின் " ஸ்காட்டியா பிரின்ஸ் " என்ற சொகுசு கப்பல் இன்று தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்லயிருக்கிறது, இந்த கப்பல் சேவையின் மூலம் இந்தியா, குறிப்பாக தென்னிந்தியா - இலங்கை இடையிலான சுற்றுலா மற்றும் வணிகம் மேம்படும். மேலும் இரு நாட்டு மக்களிடையிலான பண்பாடு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஏற்பட இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இந்த கப்பல் சேவையை 2001ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். 2001ம் ஆண்டு நான் தூத்துக்குடியில் Flyjac Logisticsயில் ஏற்றுமதி ஒருங்கினைப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த போது இந்த பயணிகள் கப்பல் சேவைக்கான ஆயத்த வேலைகள் மும்முரமாக தொடங்கியது. அந்த ஆண்டின் இறுதியிலேயே இக்கப்பல் சேவை தொடங்கப்பட்டுவிடும் என்று பரவலாக பேசப்பட்டது. பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான முகவர்கள் நியமண விளம்பரங்கள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருந்தன.

வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகளை கையாளும் நிறுவனத்தில் ஏற்றுமதி ஒருங்கினைப்பாளராக பணியாற்றியதால் பல நாடுகளில் உள்ள எங்கள் நிறுவனத்தை சார்ந்த தொழில் ரீதியான முகவர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பல பேர்களின் தொடர்பு எனக்கு இருந்தது. அது போல இலங்கையிலும் எங்கள் முகவர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பலரின் அறிமுகம் எனக்கு இருந்தது. அதனால் அந்த ஆண்டு தொடங்கப்படவிருந்த பயணிகள் கப்பலில் முதலாவது சேவையில் கொழும்புக்கு செல்ல வேண்டும் எனற ஆசை என்னுள் எழுந்தது. ஆனால் அந்த நேரத்தில் என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. அடுத்த வாரத்திலேயே திருச்சிக்கு சென்று திருச்சியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அம்மா என்னிடம் " எதுக்கு இப்ப பாஸ்போர்ட்? நீ எங்க போக போற? ". எதுக்கும் இருக்கட்டுமே என்று சொல்லிக்கொண்டேன். நான் விண்ப்பித்த ஒரு மாதத்தில் பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட்டது. ஆனால் பாருங்கள் அரசாங்கம் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை கிடப்பில் போட்டது, அதற்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் சொல்லப்பட்டது.

மீண்டும் பத்து வருடங்கள் கழித்து இந்த திட்டம் இப்போது உயிரோட்டம் பெற்றிருக்கிறது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் எனது பாஸ்போர்ட்டின் காலம் முடிந்து விட்டதே..என்ன செய்வது, அதை புதுப்பித்தாக வேண்டும், அதற்கெல்லாம் இப்போது என்னிடம் நேரமிருப்பதாக தெரியவில்லை. பிறகு பார்க்கலாம்..எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்!!! என்றாலும் பாரதியின் இந்த பாடல் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..

" முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே! "

செவ்வாய், அக்டோபர் 26, 2010

இது பண்டிகை காலம் !!


தோ இன்னும் இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. அம்மா போன வாரமே முறுக்கு செய்வதற்காக அரிசியை உரலில் வைத்து இடித்து பிறகு அரிப்பில் வைத்து சலித்து தயார் செய்துவிட்டார்கள். நாளைக்கு முறுக்கு சுடுவதற்காக எல்லாம் தயராக இருக்கிறது. அதிரசம் செய்வதற்காக பச்சரிசி மாவையும் தயார் செய்தாகிவிட்டது, வெல்லத்தை பாகாக்கி மாவுடன் சேர்த்து பதமாக இன்று வைத்தால் தான் அடுத்த வாரம் அதிரசம் செய்வதற்கு பதமாக இருக்குமாம். முறுக்கு சுட்டு முடித்த பிறகு முந்தரி கொத்து செய்வதற்கு பச்சசை பயிரை திருவையில் அதற்கேற்றாற் போல உடைத்து வைக்க வேண்டுமாம். பிறகு கலகலா தயார் செய்ய வேண்டுமாம். தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வடைக்கு பருப்பை ஊர வைத்து தீபாவளி அன்று அதிகாலையில் வடை சுட வேண்டுமாம். கடந்த ஒரு வாரமாகவே எனக்கும் தம்பிக்கும் வேலை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கிறது. அடிக்கடி கடைக்கு சென்று அம்மா சொல்லும் பொருட்களை வாங்க வேண்டும், முணுமுணுத்துக் கொண்டே அம்மா சொல்லும் வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அம்மா பலகாரம் செய்யும் போது எப்படி செய்கிறார்கள் என்று அருகிலேயே இருந்து பார்ப்பது, சின்ன சின்ன உதவிகளை செய்வது ஒரு தனி சுகம் தானே!

இதனிடையே அப்பா வேறு, "டெயிலரை போய் பாத்தியா? நம்ம துணியை தச்சுட்டாரா? அப்பப்ப போய் பாத்தா தான் சீக்கிரமே தச்சு தருவார், இல்லைன்னா இழுத்தடிச்சு கடைசியில அரை குறையா தச்சு தந்திடுவார்". அப்பா இரண்டு வாரம் முன்னாடியே துணி எடுத்துட்டு வந்தப்ப, தம்பிக்கு கலர் மற்றும் டிசைன் பிடிக்கலைன்னு அடம் பிடிச்சு திரும்பவும் கடைக்கு போய் அவனுக்கு பிடித்த மாதிரி வாங்கிட்டு வந்து, டெய்லர் கடையில தைக்க கொடுத்தோம். பட்டாசுக்கு இன்னும் வரலல்ல, அதை பற்றி சொல்லவே வேண்டாம். தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரம் இருந்தாலும் போன வாரத்திலிருந்தே என் நண்பர்கள் எல்லோரும் பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பப்ப பள்ளிக்கு போகும் போது அப்பா தரும் காசுளை சேர்த்து வைத்து பக்கத்தில் இருக்கும் பெட்டிக் கடையில் சர வெடியும் ஓலை வெடியும் வாங்கி வெடிக்கிறது. " சாமி போட்டா கிட்ட வைச்ச பத்தியை யாரு எடுத்தா நீனா? " தினமும் விளக்கு வைக்கும் போது அம்மா கிட்ட திட்டு வாங்கி கொள்வதே கடந்த ஒரு வாரமாக வாடிக்கையாகிவிட்டது. தீபாவளிக்கு என்ன என்ன பட்டாசுகள் வாங்கனும்னு ஒரு லிஸ்டே மனசுக்குள்ள போட்டுக்கிடுவோம். பள்ளிக்கூடத்தில் கூட பட்டாசுகள் பற்றிய பேச்சு தான் அதிகமாக பேசுகிறோம். இருந்தாலும் மனசுக்குள்ளே அப்பா நம சொல்ற எல்லா பட்டாசுகளையும் வாங்கித் தருவாங்களா இல்லையா என்ற எண்ணமும் இருந்து கொண்டே இருக்கிறது.

புரியது புரியுது நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு. நான் கொஞ்சம் 18 வருடம் பின்னால போயி பேசிக்கிட்டு இருக்தேங்க. 1992ல் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தீபாவளிக்கு முந்தைய நாட்கள் எப்படி இருந்திச்சுன்னு சொல்லிட்டுயிருந்தேன். அப்போதெல்லாம் தீபாவளிக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் முன்னாடியே ஒரு உற்சாகம், பரபரப்பு நம்மிடம் வந்துவிடும். பண்டிகை கொண்டாடுவதன் நோக்கமே நாம் சந்தோசமக இருக்க வேண்டும் என்பதற்காக தானே, அதற்கான உற்சாகம் இரண்டு மூன்று வாரங்கள் முன்னாடியே வந்தால் தானே பண்டிகையின் முக்கியத்துவம் உணரப்படும்.

ஆனால் சில கிராமங்களை தவிர்த்து, இப்போதெல்லாம் மக்கள் மனங்களில் பண்டிகை கால உற்சாகம் தொற்றிக் கொள்வதில்லை. அதற்கான ஆயத்த வேலைகளில் பொதுவாக நம் மக்கள் ஈடுபட யாருக்கு நேரம் இருக்கிறது ? நேரம் இருந்தாலும் முன்பு போல யாரும் செய்வதில்லை. தீபாவளி, பொங்கலெல்லாம் ஏதோ ஒரு ஞாயிற்றுகிழமை விடுமுறை போல தான் கழிகிறது. இந்த அவசர காலத்தில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னரே பண்டிகைகளுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட யாருக்கும் நேரமில்லை. குடும்பத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு இடத்தில் வேலை செய்யும் நிலை, சில சமயங்களில் தீபாவளிக்கும் வீட்டுக்கு வரமுடியாத வேலை பளு. வந்தாலும் உடனடியாக திரும்ப வேண்டிய கட்டாய வேலைகள். அறிவியல் வளர்ச்சிகள் பல்வேறான வசதிகள் தந்த பிறகு நேரத்தை மிச்சப்படுத்த தொடங்கிவிட்டோம் ஆனால் உற்சாகத்தை தொலைத்துவிட்டோம் என்பதை மறந்துவிடுகிறார்கள், உடனடி பதார்த்தங்கள், ரெடிமேட் துணிகள் தான் வாங்குகிறோம். சில பேர்கள் தீபாவளி சீட்டு என்ற ஒரு திட்டத்தில் சேர்ந்து விடுகிறார்கள், மாதம் ரூ.100 அல்லது தம் வசதிக்கேற்ப செலுத்திவிட்டு தீபாவளி நேரத்தின் போது பலகாரங்கள், ஆடைகள் மற்றும் பாத்திரங்கள் பெற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறாக பண்டிகைகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. இப்படியே போனால் ஒரு காலத்தில் நமது சந்ததியினர் பண்டிகைகளின் முக்கியத்துவம் மட்டுமல்ல பண்டிகை கொண்டாடுவதையே மறந்து விடுவார்கள் என்று தான் எண்ண தோன்றுகிறது. பாதி நேரம் அலுவலகத்திலும் மீதி நேரம் தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைத்துக் கொண்டிருக்கும் நாம் இந்த பண்டிகை காலங்களிலாவது பண்டிகையின் முக்கியத்துவம் உணர்நது உற்சாகம் குறையாமல் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கொண்டாடினால் சந்தோசம் இன்னும் இரட்டிப்பாக இருக்கும் அல்லவா!

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009

சபாஷ் சரியா சொன்னீங்க!!


ங்கள் அலுவலகத்தில் 2003 டிசம்பர் மாதத்தில் ஒரு போட்டி தேர்வு நடத்தி 8 இளநிலை உதவியாளர்களை (மத்திய அரசு பணி) தேர்வு செய்தார்கள். இது சம்பந்தமாக எனது தம்பி சில விவரங்கள் வேண்டி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு மனு செய்து, இந்த போட்டி தேர்வின் மூலம் தேர்வானவர்களின் பணிமூப்பு பட்டியலை கேட்டிருந்தான். எங்கள் அலுவலகத்தில் இருந்தும் விவரங்களை கொடுத்தார்கள், ஆனால் அவர்கள் கொடுத்ததோ 2007 ஏப்பரல் மாதத்தில் நடந்த போட்டி தேர்வின் மூலம் தேர்வானவர்களின் பணிமூப்பு பட்டியல். தவறான தகவலை தந்து விட்டார்கள். அதனால் எனது தம்பி மீண்டும் எங்கள் அலுவலகத்தில் சரியான தகவல் தரும்படி மேல்முறையீடு செய்தான். மறுபடியும் எங்கள் அலுவலகத்தில் இருந்து 2003 டிசம்பர் போட்டி தேர்வு சம்பந்தமான விவரங்களை கொடுத்தார்கள், அதில் முதலில் அவர்கள் செய்த தவறை ஒத்துக்கொள்ளவில்லை. பரவாயில்லை இம்முறை சரியான தகவல் தந்தார்களே என்று சமாதானப்பட்டுக் கொண்டான் என் தம்பி.

2003 டிசம்பர் மாதத்தில் நடந்த போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் எங்கள் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். நான் நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் பணியமர்த்தப்பட்டேன். ஐந்து வருடத்திற்கு பிறகு கடந்த ஏப்ரல் 2009ல் மேல்நிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றேன். போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பணிமூப்பு அவர்கள் அந்த போட்டி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பின்பு அந்த பணிமூப்பின் அடிப்படையில் தான் பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது.

ஒருமுறை இது சம்பந்தமாக தம்பியும் நானும் பேசிக்கொள்ளும்போது என்னிடம் எங்கள் அலுவலகம் தந்த விவரங்களை காட்டினான், ஒரு கனம் அதிர்ந்தே விட்டேன். ஏனேன்றால் அந்த பணிமூப்பு பட்டியலில் என்னுடன் அந்த போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு என்னுடன் பணிபுரியும் ஒருவர் எனக்கு அடுத்தபடியாக தான் வருகிறார், ஆனால் அவர் எனக்கு முன்பே 2008ல் பதவி உயர்வு பெற்று விட்டார். ஆனால் எனக்கு ஏப்ரல் 2009ல் தான் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எங்கள் அலுவலகம் தந்த விவரங்களின் படி பார்த்தால் எனக்கு பதவி உயர்வு கொடுத்த பிறகு தான் அந்த நபருக்கு பதவி உயர்வு கொடுத்திருக்க வேண்டும். எனவே இது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கிய விவரங்களின் அடிப்படையில் பணிமூப்பு பட்டியலில் எனக்கு அடுத்தபடியாக வரும் நபருக்கு எனக்கு முன்பாகவே பதவி உயர்வு எப்படி கொடுக்கப்பட்டது?, அது தவறு என்றும் எனவே எனக்கும் 2008 முதல் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எனது அலுவலகத்தில் நான் ஒரு மனு செய்தேன். ஒரு மாதம் கழித்து அலுவலக நிர்வாக அதிகாரி (Admistrative Officer) என்னை அழைத்து என்னுடை மனு பற்றி விவாதித்தார், அப்போது அவர் சொன்ன விஷயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. " தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என் தம்பி செய்த மேல் முறையீட்டு மனு மீது அவர்கள் தந்த விவரங்கள் தவறாக தரப்பட்டுவிட்டன" என்று தெரிவித்தார். மேலும் அந்த போட்டித் தேர்வில் தேர்வானவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியலையும் அவர் காட்டினார், அதன் படி பார்த்தால் நான் குறிப்பிட்ட என்னுடன் பணிபுரியும் அந்த நபர் எனக்கு முன்பாக தான் இருக்கிறார், எனவே பதவி உயர்வில் எந்த தவறும் இல்லை. சரி நானும் ஒத்துக்கொண்டேன், ஆனால் நான் கொடுத்த மனுவிற்கு எழுத்துபூர்வமாக பதில் வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். எழுத்துபூர்வமாக எனக்கு பதில் தந்தால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மீண்டும் அவர்கள் தவறான தகவல் தந்ததாக ஒத்துக்கொண்டாக வேணடும் அதனால் அவர்களுக்கும் பிரச்சனை வரும் என்று எனக்கும் தெரியும். அதனால் என்ன தவறு செய்தால் ஒத்துக்கொள்ளட்டுமே என்று நானும் வந்து விட்டேன்.

இரண்டு வாரம் ஆகியும் எனக்கு எழுத்துபூர்வமாக பதில் வரவில்லையே என நினைத்துக் கொண்டிருக்கையில், கடந்த வாரம் (14.08.2009 ) எங்கள் அலுவலக நிர்வாக கட்டுப்பாட்டு அதிகாரி (Controller of Adminstration) என்னை அழைத்தார், இது சம்பந்தமாக தான் அழைக்கிறார் என்று எனக்கும் தெரியும். அவர் என்னிடம் பேசிய விதம் என்னை மீண்டும் ஒருமுறை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் சொன்னது இது தான், " ஏதேனும் விவரம் வேண்டுமென்றால் அலுவலகத்தில் கேட்க வேண்டுமாம், ஏன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அதுவும் என் தம்பி மூலமாக கேட்க வேண்டும், அதனால் எங்கள் இயக்குநர் என் மீது கோபமாக இருக்கிறாறாம். மேலும் எழுத்துபூர்வமான பதில் தந்துட்டேன் வாங்கிக்கோ, எதனாலும் பண்ணு, எப்படியும் ஒரு நாள் எங்கள் உதவி உனக்கு தேவைப்படும், நான் உன்னை மிரட்டுவதாக எடுத்துக்காதே, ஒரு அறிவுரையாக எடுத்துக்கோ " என்றாறே பார்க்கலாம். சபாஷ் சரியா சொன்னீங்க!! என்று சொல்ல தோன்றியது. ஒருபுறம் எனக்கு சிரிப்பும் வந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தவறான தகவல்களை தந்து தவறு செய்தவர்கள் அவர்கள், ஆனால் கடைசி வரை அவர்கள் தவறை ஒத்துக்கொள்ளாமல் பேசுகிறார்களே? என்ன சொல்வது? நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்லுவாங்களே " மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன் குடம் " , " வாத்தியார் செஞ்சா தப்பில்லை பள்ளி பிள்ளைங்க செஞ்சா பெரிய தப்பு ", ஒரு தவறை யார் செய்தாலும், அவர் உயர் அதிகாரியாகட்டும் அல்லது கீழ்நிலை பணியாளராகட்டும் தவறு தவறு தான், அதை ஒத்துக்கொள்ள வேண்டியது தானே, அதை விட்டுவிட்டு எப்படியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், குற்றம் உள்ள மனசு என்றைக்கும் குறுகுறுத்துக்கொண்டே இருக்கும், தவறான தகவலை தந்து விட்டதாக என்னுடைய தம்பி மத்திய தகவல் ஆணையத்திடம் இரண்டாம் முறையீடு செய்தால், தவறை அவர்கள் ஒத்துக்கொள்ள தான் வேண்டும், அதற்கான அபராதமும் உண்டு. ஒரு வேளை என் தம்பி மத்திய தகவல் ஆணையத்திடம் இரண்டாம் முறையீடு கொடுத்தால் என்ன செய்வது என்று அவர்கள் தினம் தினம் யோசித்துக் கொண்டே இருக்கத் தான் செய்வார்கள். அரசாங்க அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்பதை பொது மக்கள் அறிந்து கொள்ள வசதியாக தான் அரசாங்கம் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் விவரங்களை அளிக்கும் அரசாங்க அதிகாரிகள் அந்த தகவல்களை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து அளிக்க வேண்டும், ஏதோ கடமைக்காக கொடுத்தாக வேண்டுமே என்று இது போல செயல்பட்டால் அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதன் முழு பயனும் மக்களை சென்றடையும் என்பதில் சந்தேகமே!!

புதன், டிசம்பர் 24, 2008

கடை தேங்காய்...


ஹோட்டல் வி.டீ பேரடைசில் 17.12.2008 முதல் 19.12.2008 வரை பார்ஸன் இண்ஸ்டிடியுட் ஆப் ஸ்டாட்யூடரி ரூல்ஸ் (PARSAM INSTITUTE OF STATUTARY RULES, BANGALORE) நடத்திய அரசு அலுவலர்களுக்கான " ACCOUNTING STANDARDS AND READING BALANCE SHEET " என்ற பயிலரங்கத்தில் கலந்து கொள்வதற்காக எங்கள் அலுவலகத்தில் இருந்து என்னை அனுப்பியிருந்தார்கள். நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் வேலை செய்வதால் எனக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கலந்து கொண்டேன்.

பயிலரங்கின் முதலாம் நாள் முடிவிலே எனக்கு புரிந்து விட்டது, இது அரசு R&D NON PROFITABLE ORGANISATION னில் பணி புரியும் என்னை போன்றோர்க்கு எந்த பயனுமில்லை, ஏனென்றால் பயிலரங்கில் சொல்லி தந்ததோ லாபம் ஈட்டும் கம்பெனிகளில் பணி புரிபவர்கள் தெரிந்து கொள்ள, கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள், அரசு R&D NON PROFITABLE ORGANISATIONனுக்கு அது பொருந்தாது. ஐயோ தேவையில்லாமல் என்னையும் அனுப்பி பயிலரங்க கட்டணமாக ரூ. 6180/- வேறு கொடுத்துவிட்டார்களே என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அங்கு மற்றொரு விஷயத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயம் இது தான்.

இந்த பயிலரங்கில் பெங்களூரில் உள்ள மற்றொரு அரசு R&D NON PROFITABLE ORGANISATION ஆன ADA (AERONAUTICAL DEVELOPMENT AGENCY) வில் இருந்து 10 பேர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசும் போது தான் தெரிந்தது அந்த 10 பேரில் 5 பேர் தொழில்நுட்ப பிரிவில் (SCIENTIFIC & TECHNICAL STAFF) உள்ளவர்கள் என்று. நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் வேலை செய்யும் எங்களுக்கே இப்பயிலரங்கம் பயனற்று இருக்கும் போது தொழில்நுட்ப பிரிவில் உள்ளவர்களை அவர்களுடைய நிறுவனம் எப்படி அனுப்பியது? பிறகு தான் புரிந்தது ADAவில் நிதி மற்றும் கணக்கியல் அதிகாரியாக இருக்கும் திரு.நாகராஜா என்பவர் இப்பயிலரங்கை நடத்தும் பார்ஸன் இண்ஸ்டிடியுடிற்கு மிகவும் நெருக்கமானவர், மேலும் இந்நிறுவனம் நடத்தும் எல்லா பயிலரங்கிற்கும் இவர் தான் ஒருங்கிணைப்பாளர். எனவே தான் அவருடைய அலுவலகத்தில் இருந்து அதிகமான நபர்களை தேர்வு செய்து அனுப்ப முடிந்தது. மேலும் திரு.நாகராஜாவிற்கு பல அரசு நிறுவனங்களிலுள்ள உயர் அதிகாரிகள் மிகவும் நெருக்கம். இந்த நெருக்கத்தினால் பார்ஸன் இண்ஸ்டிடியுட் நடத்தும் பயிலரங்குகளில் நிறைய பேரை பங்கு கொள்ள செய்ய முடிகிறது. அதில் ஒன்று தான் எங்கள் நிறுவனம் இந்த பயிலரங்கிற்கு என்னை அனுப்பியது. அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக எங்கள் துறை தலைவரை சந்தித்து இந்த பயிலரங்கத்தினால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறியபோது அவர் " மற்ற ACCOUNTING STANDARD பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினால் தான் அனுப்பினேன் " என்றவாறு சமாளித்துக் கொண்டார்.

அரசு அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றிற்காக செலவு செய்யும் போது அதில் ஏதேனும் பயன்படத்தக்கதாக இருக்க வேண்டும். பயன் இல்லை என்று தெரிந்தால் அந்த செலவை குறைத்து கொள்ளலாம். இதனால் நேரத்தையும் அந்த பணத்தையும் பயனுள்ள விதத்தில் செலவிடலாம்.

இது போன்ற வீண் செலவினங்கள் நிறைய அரசு அலுவலகங்களில் நடக்கத்தான் செய்கிறது. ஒரு புறம் மத்திய அரசு அலுவலகங்களில் செலவினங்களை குறைக்க வேண்டும் என கூறி அதற்கான செயல் திட்டங்களை வகுத்து கொண்டிருக்கிறது. மறு புறம் பல அரசு அலுவலகங்களில் தேவையற்ற செலவினங்கள் தான் அதிகமாக இருக்கிறது. என்ன சொல்வது. நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்வார்களே " கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த கதையாய் "..

வெள்ளி, அக்டோபர் 17, 2008

மின் வெட்டு!!

மின் வெட்டு, இப்ப தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சு தான். டீ கடைகளில் நடக்கும் அரசியல் பேச்சுகளும், வீடுகளில் நடக்கும் தொலைக்காட்சி நாடகம் பற்றிய பேச்சுகளும் இப்பொழுது குறைந்து அந்த இடத்தை மின் வெட்டு பிடித்திருக்கிறது. அந்த அளவு மின் வெட்டினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் கோலங்கள், அரசி என தொலைக்காட்சி தொடர்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்த பெண்கள் இந்த தொடர் மின் வெட்டினால் கொஞ்சம் மறந்திருக்கிறார்கள், இது ஒரு நல்ல விஷயம் தானே!

மின் வெட்டு மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் சீரியசான நிகழ்வுகளை கொஞ்சம் நக்கலோடு இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


" என்னடி எப்பவும் காலையில 7 மணிக்கு எழுந்திருக்கிற நீ இப்பல்லாம் 5 மணிக்கே எழுந்து சமையல் வேலை செய்ற, என்ன தடீர்னு அக்கறை "
" அட போங்க, எல்லாம் இந்த கரண்ட் தொல்ல தான். காலையிலே 7 மணிக்கே கரண்ட் கட்டாயிடும் அதுக்குல்ல வேலைய முடிக்கனுல்ல அதான் " ***


" என்னடி நேத்து தோசை தந்த அதுல அரிசி பாதி பாதியா இருந்திச்சு, இன்னிக்கு தோசை கொஞசம் புளிக்கிற மாதிரி இருக்கே "
" இந்த கரண்ட் எப்ப தான் போகுதுன்னு ஒரு கணக்கு இல்லீங்க அன்னிக்கு மாவு அரைக்கும் போது பாதியில போயிட்டு, நேத்து அதான் கரண்ட் போகுறதுக்குல்ல கொஞ்சம் சீக்கிரமா மாவு அரைச்சு வைச்சேன் பாருங்க புளிச்சு போச்சு. அடிக்கடி கரண்டு போகுற இந்த காலத்தில இதெல்லாம் சகஜம்ங்க " ***


" ஏம்பா கொஞ்ச நாளாவே உன்ன கவனிச்சுட்டு வாரேன் ஒழுங்கா வேலை பாக்குற நீ இப்பெல்லாம் சீட்ல இருந்தே தூங்குறியே.. "
" என்ன சார் செய்ய தினமும் ராத்திரி 10 மணிக்கு போற கரண்டு 12 மணிக்கு தான் வருது, இந்த வெயில் காலத்துல கரண்ட் இல்லாம ஒரே புழுக்கம், 12 மணிக்கு கரண்டு வந்தப்புறம் தான் தூங்க முடியுது, நான் என்ன செய்யட்டும் அதான்.. பேசாம ஆபீஸ் டயத்தை கரண்டு போற நேரத்துக்கு ஏத்த மாதிரி மாத்துன நல்லாயிருக்கும்... " ***


" என்ன கொடுமடி இது, இவ்வளவு சங்கதி நடந்திருக்கா, மருமக ஒழுங்கா தானடி இருந்தா என்னாச்சி அவளுக்கு.. இந்த கரண்டு போற நாளுல இருந்து நாடகம் பாக்க முடியாம போச்சு.. எப்ப கரண்டு ஒழுங்கா வந்து எப்ப நானு நாடகத்தை பார்க்க.. "
" என்னடி பேசுற.. இவ்வள நேரம் நான் என் மருமகள பத்தி சொல்லிகிட்டு இருந்தா, நீ நாடகம்னு கேட்டுட்டு இருந்தியாக்கும்.." ***

" ஓயாம கரண்டு போறது ரொம்ப தொந்தரவா போச்சுங்க "
" ஏன் என்னாச்சு "
" ஓழுங்கா டீவில நாடகம் பாத்துட்டு இருந்த உங்க அம்மா, இப்ப அடிக்கடி கரண்டு போற நாளுல இருந்து, என்கிட்ட அதை இதை பேசி சண்டை செய்றாங்க..அய்யோ எப்ப கரண்டு கட் இல்லாம இருக்குமோ..." ***


" என்னடி கினத்துல தண்ணி இரைக்கிற, நேத்து தானே தண்ணி முறை அதுக்குள்ள தண்ணி காலியா? "
" நீ வேற, சும்மாவே நாலு நாளைக்கு ஒரு முறை தான் தண்ணி விடுறாங்க, இதுல வேற கரண்ட் போயிடுது, தண்ணி வர்ர நேரத்துல கரண்டு போயிட்டு தண்ணி வரல்ல. தூத்துக்குடிய மாநகராட்சியா மாத்துனாலும் மாத்துனாங்க தினம் தினம் பிரச்சணை அதிகமாயிட்டே போகுது.. என்ன செய்ய.. " ***

- மே. இசக்கிமுத்து

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2008

அரசாங்க அடாவடிகள்!


மைசூர் விரைவு ரயிலில் தூத்துக்குடியிலிருந்து பெங்களூர் வந்திறங்கிய அம்மாவையும் அத்தையையும் அழைத்து கொண்டு படிகளில் இருந்து இறங்கி வெளியே வந்த போது, டிக்கெட் பரிசோதகருடன் அமர்ந்திருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் (RPF) ஒருவர் எங்களை அழைத்து, எங்கிருந்து வருகிறீர்கள், எந்த ரயிலில் வந்தீர்கள் என்றேல்லாம் விசாரித்து விட்டு, அம்மா பையில் வைத்திருந்த முருங்கை காயை பார்த்து "இரண்டு முருங்கை காய் கொடு" என்றார் அதிகார தோரணையோடு. சரி இங்கே பெங்களூரில் இந்த மாதிரி நல்ல முருங்கை காய் கிடைக்காது, அதனால் எங்கள் பையில் இருந்த முருங்கை காயை பார்த்தவுடன் ஆசைப்பட்டு கேட்கிறார் என்று நினைத்து பையிலிருந்து இரண்டு காயை எடுத்து அவரிடம் கொடுத்தாள் அம்மா. அதிக அதிகாரமாய் "ரெண்டு எதுக்கு இன்னும் கொடு" என்றாரே பார்க்கலாம். வடிவேலு நிறைய படங்களில் சொல்லும் வசனம் "அட அவனா நீ " என்று நான் நினைத்துக் கொண்டு, ‍அவ்வளவு தான் இன்னும் கொடுக்க மாட்டேன் என்று அவரிடம் சொல்லிகொண்டு நடக்க தொடங்கினேன். அந்த காவலர் விடவில்லை, நில்லு நில்லு எங்கள் பின்னாலே வந்து, டிக்கெட் இருக்கா, உன்கிட்ட பிளாட்பாரம் டிக்கெட் இருக்கா என்று கேட்டுகொண்டே வர தொடங்கினார். எல்லாம் இருக்கு என்று சொல்லிவிட்டு நடக்க தொடங்கினோம். " பிளாட்பாரம் டிக்கெட் இல்லாம அடுத்தவாட்டி வா உன்ன பாத்துக்கிறேன் " என்று சொல்லி விட்டு சென்றாரே பார்க்கலாம். ஏதோ நான் பிளாட் பாரம் டிக்கெட் எடுக்காமல் அடிக்கடி வருவது மாதிரியும் அந்த காவலர் தான் என்னை அய்யோ பாவம் என்று விட்டுவிடுவது மாதிரியும் பேசிக் கொண்டு சென்றதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது.

இது சென்ற வாரம் நடந்த சம்பவம். எனக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் இந்த சமூகத்தை காக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்த சிலர் இந்த மாதிரி நடக்கும்போது ஆத்திரம் தான் வந்தது. தட்டிப் பறிக்கும் திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது. இந்த காவலரின் நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது, இவர் தன் அதிகாரத்தின் மூலம் அப்பாவி பயணிகளிடம் எதை எதையெல்லாம் வாங்க முடியுமோ அதையெல்லாம் வாங்கி பழக்கப்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளை பிடித்தால் அவரகளிடம் இவர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்கள் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. அரசாங்க சம்பளம், பல வகையான சலுகைகள் எல்லாம் இருந்தும் இவர்களின் பேராசை குறையவில்லை.

இம்மாதிரியான சுயநலவாதிகள் காவல்துறையில் இருக்கும் வரை அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் சமூக விரோத செயல்கள் செவ்வனே நடந்தேறத்தானே செய்யும்.

புதன், ஆகஸ்ட் 06, 2008

திண்ணை !!

சென்ற வாரம் சனிக்கிழமையன்று இரவு 8.30 மணியிருக்கும், சாப்பிட்டு விட்டு வீட்டின் வெளியே உள்ள சிறிய திண்ணை படியில் காற்றாட அமர்ந்திருந்தேன். அந்த சூழ்நிலை மிகவும் அமைதியாக இருந்தது, கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்தது. 8.30 மணிக்கே எங்கள் வரிசையில் உள்ள வீடுகளின் கதவுகள் அடைக்கப்பட்டு விடுகின்றன. சிறார்களின் சத்தம் அங்கில்லை. அனைவரும் வீட்டினுள்ளே இருந்துவிடுகிறார்கள். இரவு சாப்பிட்டு விட்டு திண்ணையில் காற்றாட அமர்ந்திருப்பதில் ஒரு சுகம் இருக்கிறதே, அப்பப்பா சொல்ல முடியாது, அனுபவித்து பார்க்க வேண்டும்.


சிறு வயது நினைவலைகள் மனதில் நிழலாட தொடங்கியது. எங்கள் தெருவில் இருந்த வீடுகளெல்லாம் ஓட்டு வீடுகள் தான். எல்லா வீட்டின் முன் வாசல் அருகே திண்ணை உண்டு. வரவேற்பறை போல திண்ணையை பயன்படுத்துவதுண்டு. யாரேனும் வீட்டுக்கு வந்தால் முதலில் திண்ணையில் தான் "அப்பாட" என்று உட்கார்வார்கள். வேலை நிமித்த பேச்சாகட்டும், அரசியல் விவாதமாகட்டும், பெண்கள் சமையல் வேலைகளை முடித்துவிட்டு ஊர் நடப்புகளை பேசுவதாகட்டும் எல்லாவற்றிற்கும் அடைக்கலம் திண்ணை தான். எல்லாவற்றிற்கும் மேல் மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்து வீட்டு பாடங்களை எழுதுவதும் பின்பு விளையாடுவதும் அந்த சுகமே தனி தான்.


சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம், எங்களின் விளையாட்டுக் களமாகவே மாறிவிடும் அந்த திண்ணை. காலை தொடங்கி இரவு வரை எங்கள் ஆட்டங்கள் அங்கே அரங்கேறும். முழு ஆண்டு தேர்வு விடுமுறை காலங்களில் இன்னும் சொல்லவே வேண்டாம். விளையாட்டுகள் பல பல, வீடு கட்டுவது, இலைகள் செடிகளை பறித்து வந்து சோறு சமைப்பது, களி மண்னால் சாமி செய்து அதற்கு கொடை விழா நடத்துவது, தாயம், பல்லாங்குழி, ஐஸ்பால், கல்லா மண்ணா என விளையாட்டுகள் வித விதமாய் அரங்கேறும். சில சமயம் பெற்றோர்களுக்கு எங்கள் திண்ணை விளையாட்டுகள் பெரும் தொல்லையாக மாறுவதும் உண்டு. சில நேரம் எங்களின் தொல்லைகள் எல்லை மீறும் போது அம்மாவிடம் திட்டுகளும் வாங்குவதுண்டு. அதற்கு மறுநாளே விளையாட்டு இடம் நண்பன் வீட்டு திண்ணைக்கு மாறியிருக்கும். குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுவது போல எங்களின் விளையாட்டு இடமும் திண்ணை திண்ணையாக மாறி கொண்டே இருக்கும். இரவு சாப்பாடு கண்டிப்பாக திண்ணையில் வைத்து தான். பக்கத்து வீட்டு நண்பர்களோடு சேர்நது கூட்டாஞ்சோறு சாப்பிடுவது. வித விதமான கதைகள் சொல்லி மகிழ்வது, திண்ணையோடு மகிழந்த நாட்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.


கால மாற்றத்தில், தற்பொழுது கட்டப்படுகின்ற அனேக வீடுகளில் திண்ணை இருப்பதில்லை. நிலத்தில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும், அதில் அடுக்கு மாடி கட்டிடம் கட்டி விடுகிறார்கள், குழந்தைகளின் விளையாட்டு இடம் பற்றி கவலை கொள்வதற்கு அவர்களுக்கு நேரமில்லை. தற்கால சிறுவர்களின் முக்கிய விளையாட்டாக கிரிக்கெட் இருப்பதை நாம் ஆங்காங்கே தெருக்களில் காணலாம். சில சிறுவர்களின் மாலை நேர விளையாட்டாக சைக்கிள் ஓட்டுல். மேலும் சிறுவர்களின் நட்பு வட்டம் பள்ளி தோழர்களை விட்டு விரிவடைய மறுக்கின்ற சூழ்நிலையில் தான் தற்பொழுது இருக்கின்றது. விசாலமாக சிந்திக்கும் மனநிலை வீட்டுக்குள்ளே மறைந்துவிடுது. இதெல்லாம் அவசரயுகத்தின் அலங்கோலங்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது !!

செவ்வாய், ஜூன் 03, 2008

நல்ல உள்ளங்கள் !!


சென்ற ஞாயிற்றுகிழமை (01.06.2008) பெங்களூர் மேனிலை பள்ளியில் ESI நடத்திய மேனேஜர் பதவிகளுக்கான தேர்வு எழுத சென்றிருந்தேன். தேர்வு மேற்பார்வையாளர் அறையினுள் வந்த உடனேயே தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டார். தான் 1995 ம் ஆண்டின் UPSC தேர்வில் தேர்வானவர் என்றும், தற்பொழுது ESIயில் பணிபுரிவதாகவும் தெரிவித்தார். பின்பு எங்களிடம் ஒரு சின்ன அறிவுரை, கேள்விகளை புரிந்துகொண்டு பதிலளியுங்கள், முதலில் தெரிந்த கேள்விகளுக்கு விடையளியுங்கள், தெரியாத கேள்விகளில் நேரத்தை செலவழிக்காதீர்கள் என்று கூறிவிட்டு ‍" Best of Luck" என்று வாழ்த்தும் தெரிவித்துக்கொண்டார். ஒரு வித்தியாசமானவரை சந்தித்ததில் பூரித்துவிட்டேன். நானும் நிறைய தேர்வுகள் எழுதியிருக்கிறேன், ஆனால் தேர்வு மேற்பார்வையாளர்கள் வந்தவுடன் சத்தம் போடாதீர்கள், மொபைல் போனை ஆப் செய்துவிடுங்கள், மனி அடித்த உடன் மட்டும் தான் கேள்வி தாளை பிரிக்க வேண்டும் என்று விதிமுறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்து விடுவார்கள். இவர்களின் நடுவே ‍தேர்வு எழுதுபவர்களுக்கு பயனுள்ள வகையில் கடைசி நேர அறிவுரைகள் வழங்கிய அந்த மனிதரை சந்தித்ததில் உண்மையிலேயே பூரிப்படைந்தவனாய் அன்று தேர்வு எழுதினேன் ஆனால் அவரின் பெயரை மட்டும் என்னால் ஞாபகத்தில் கொண்டுவர முடியவில்லை...

அன்றாட வாழ்க்கையில் இது போல நாம் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க நேரிடும். சந்திப்பின்போது பல விஷயங்கள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு கூட அந்த சந்திப்பு வழி வகுத்திருக்கலாம். பலதரப்பட்ட மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள், அவர்களை எதற்குதான் சந்தித்தோம் என்று தோன்றும், அந்த சந்திப்பை, பேசிய விஷயங்களை நாம் உடனே மறந்திடுவோம். இங்கே நான் அதை பற்றி பேச வரவில்லை.

சில பேர் இருக்கிறார்கள், ரயில் அல்லது பேரூந்து பயணத்தின்‍ போது அப்பொழுதுதான் சந்தித்திருப்போம் ஆனால் வலவலவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள், அவர்களை பற்றி, பல சம்பவங்களை பற்றி நிறைய பேசுவார்கள், சில சமயம் நமக்கு எரிச்சல்கூட வந்திருக்கும். அவர்களை பற்றி தற்பெருமை பேசி கொள்கிறார்கள் என்று நாம் அவர்களின் பேச்சை காதில் வாங்காது வேறு வழியின்றி இருந்திருப்போம் அல்லது வேறு எதை பற்றியோ நாம் சிந்தித்து கொண்டிருப்போம். . அவர்கள் தம்மை பற்றி தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள் என்ற மனநிலைக்கு நாம் வந்துவிடுவதால் அவர்கள் பேசுவதை காதில் வாங்காது இருந்துவிடுகிறோம். ஆனால் இது மாதிரியான சமயங்களில் சில நல்ல விஷயங்கள், சுவாரசியமான செய்திகள் நமக்கு கிடைக்கலாம்...

செவ்வாய், அக்டோபர் 16, 2007

சொர்க்கமே என்றாலும்....

ம்மில் அனேகமானோர் வேலை நிமித்தமாகவோ அல்லது ஏதேனும் ஒரு சூழ்நிலை காரணமாகவோ சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில், வேறு மாநிலங்களில் அல்லது அயல் நாட்டில் விருப்பத்தோடு அல்லது வேறு வழியின்றி வாழ்ந்துகொண்டிருப்போம்.
என்னதான் வசதிகள் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒன்றை இழந்தவர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது சொந்த ஊரின் சுகங்கள்!! எப்பொழுது நாம் சொந்த ஊருக்கு செல்வோம், எப்பொழுது நாம் நம் சொந்த பந்தங்களை, நண்பர்கள‍ பார்ப்போம் என்று நம் மனதில் ஏற்படும் ஏக்கங்களை மறக்கத்தான் முடியுமா அல்லது மறுக்கத்தான் முடியுமா?? இது மாதிரியான ஏக்கங்கள் அடிக்கடி என் மனதில் ஏற்படுவதுண்டு. தூத்துக்குடியில் இருக்கும் பெற்றோர்கள், சகோதரர்கள், சொந்தங்கள் மற்றும் நண்பர்களை பிரிந்து பெங்களுரில் இருக்கும் எனக்கே ஏதோ ஒன்றை இழந்த மாதிரியான ஏக்கங்கள் இருக்கும்போது எண்ணற்ற இலங்கை தமிழர்கள் தங்கள் தாய்நாட்டை பிரிந்து, வீட்டை பிரிந்து வருடக்கணக்காக அயல்நாடுகளில் உழைத்துக்கொண்டு என்றேனும் ஒருநாள் தாய்நாடு திரும்பும் கனவில் இருக்கும் அவர்களை பற்றி நினைக்கையில் என்றோ படித்த இந்த கவிதை நினைவுக்கு வருகிறது.
" யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா!
சுற்றம் பிராங்போட்டில்,
ஒரு சகோதிரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட
ஒட்டகம் போல் ஓஸ்லோவில்!!! "
என்ன சொல்வது, சோகங்கள் தொற்றிக்கொள்ள வார்த்தைகள் வர மறுக்கின்றன. நெடுநாள் போராட்டம் விரைவில் முற்றுபெற்று உலகத்திலுள்ள ஒவ்வொரு மூலையில் இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பி மகிழவுடன் வாழவேண்டும் என்பது தானே அனைவரின் ஆசைகள்!!!

வியாழன், மே 03, 2007

நல்ல மனம் வாழ்க!!!

சென்ற மாதம் 19.04.2007 அன்று இரவு தூத்துக்குடி செல்வதற்க்காக பெங்களுர் ரயில் நிலையத்தில் 7வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தோம். மழை வேற பெய்துகொண்டிருந்தது. என்னுடைய 3 வயது பையன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான். அவனை ஒரு இடத்தில் உட்கார வைப்பதே பெரிய வேலையாக இருந்தது எனக்கு. ரயில் வந்து பிறகு அவனை தூங்க வைக்கும் வரை...அப்பப்பா.... மைசூரிலிருந்து பெங்களுக்கு 9.15க்கு வரவேண்டிய மைசூர் = தூத்துக்குடி விரைவு ரயில் 10.00க்கு வந்தது. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரயில் தாமதமாக வருவதில் அதிர்ச்சி ஒன்றுமில்லை அது வழக்கமாக நடக்கிற நிகழ்வு தான். ஆனால் 7வது பிளாட்பாரத்திற்கு வரவேண்டிய ரயில் 6வது பிளாட்பாரத்தில் வந்துகொண்டிருந்தது. ரயில் வரும் நேரத்தில் தான் இந்த மாற்றத்தை அறிவித்தார்கள். எல்லோரும் 6வது பிளாட்பாரம் நோக்கி ஓடினார்கள். எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை எனென்றால் 7வது பிளாட்பாரத்தில் இருந்து 6வது பிளாட்பாரம் செல்ல வேண்டுமென்றால் 7வது பிளாட்பாரம் முடியும் வரை வந்து ரயில்வே பாதையை கடந்து வரவேண்டும் அல்லது 7வது பிளாட்பாரத்தில் இருக்கும் படிகளில் ஏறி பின்பு 6வது பிளாட்பாரத்தில் இறங்க வேண்டும். மூன்று ‍பைகளை தூக்கிக்கொண்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு.. என் மனைவிக்கு கண்ணீர் வராத குறைதான். எப்படியோ சமாளித்துக்கொண்டு மெதுவாக நடக்கத்தொடங்கினோம்..அப்பொழுது கடவுள் வந்த மாதிரி ஒருவர் தான் வைத்திருந்த பையை தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு என்னிடம் இருந்த ‍ஒரு பையையும் என் மனைவியிடம் இருந்த ஒரு பையையும் வாங்கிக்கொண்டு வந்தார். ஏ.சி கோச்சில் அவருடைய மனைவியையும் மகளையும் அமர வைத்துவிட்டு எங்களிடம் "நீங்க எந்த கோச்சு" என்று கேட்டார். "பரவாயில்லை சார் ரொம்ப நன்றி எஸ்.2 பக்கத்தில் தான் இருக்கு நாங்க போயிடுறோம"் என்றேன். "பரவாயில்லை, உங்க சீட்டுல கொண்டு தர்றேன"் என்று கூறிக்கொண்டு எங்கள் இருக்கையில் பைகளை வைத்துவிட்டு. "சரி தம்பி நான் வர்றேன் "என்றார். " சார் நீங்க எங்க போறீங்க, உங்க பெயர் என்ன ?"என்றேன். அவருடைய பெயர் சுப்புராமன் என்றும் மதுரைக்கு செல்வதாகவும் கூறினார். ரொம்ப நன்றி சார் என்றேன். " நல்லது தம்பி" என்று புன்னகைத்துவிட்டு அவருடைய கோச்சுக்கு சென்றார். இன்றைய அவசர காலத்தில் மற்றவர்களை பற்றி கவலை பட நேரம் இல்லாமல் இருக்கும் மனிதர்களின் மத்தியில் சுப்புராமன் போன்ற நல்ல மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருந்தது எனக்கு. அந்த நல்ல மனம் படைத்தோர்கள் என்றும் வாழ்க!!!

திங்கள், மார்ச் 26, 2007

மனிதாபிமானம்!!!

சென்ற வாரம் நான் பெங்களுர் இந்திராநகர் காவல் நிலையம் அருகில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது பின்னால் வந்த ஸ்கூட்டர் லேசாக இடித்துவிட்டது. இரண்டு வாகனங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதன் பின் நடந்த நிகழ்ச்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கா‍ரை ஓட்டி வந்த நன்றாக உடையணிந்த நடுத்தர வயது மனிதர் உடனே இறங்கி வந்து ஸ்கூட்டரில் இருந்த இளைஞரை "பளார் " என்று கன்னத்தில் அடித்துவிட்டு வாயில்வந்தவாறு திட்டுகிறார். அந்த இளைஞருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எல்லோரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இளைஞரது முகத்தை பார்க்கவே பரிதாபமாகயிருந்தது. எதுவும் பேசாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்.

காரில் வந்தவருக்கு கோபம் வருவது தப்பில்லை ஏனென்றால் தன்னுடைய புதிய காரை இடித்துவிட்டான். தவறு யார்மேல் இருந்தாலும் அதனால் ஏற்படும் கோபத்தை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தியிருக்கலாம். அந்த
இளைஞன் திருப்பி அடித்திருந்தால் அந்த நிகழ்ச்சி கொஞ்சம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் அவன் என்ன நினைத்திருந்தானோ ‍தெரியவில்லை அமைதியாக சென்றுவிட்டான்.

பெங்களுர் போன்ற தகவல்தொழிலநுட்ப நவீன நகரத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி எங்கோ செல்கிறது. எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும் மக்களின் மனங்கள் மட்டும் தன்னலத்தைவிட்டுவிட மறுக்கின்றன. பெங்களுர் நகர வீதிகளில் வளர்ந்துவரும்
தகவல்தொழிலநுட்பத்தோடு வசதி வாய்ப்பிற்கு ஏற்றாற்போல் மக்களும் தங்களின் நடை உடை தோற்றங்களை மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். ஆகட்டும் அதை நான் இப்பொழுது குற்றம் கூறுவதற்கில்லை, ஆனால் அவர்களின் வெளிதோற்றத்திற்கு ஏற்றாற்போல் உள்மனங்களை ஏன் மாற்ற மறந்துவிடுகிறார்கள். இன்றைய மக்களின் மனங்களில் மனிதாபிமானம் என்ற உணர்வு மங்கிபோய்விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.