செவ்வாய், ஜூலை 15, 2014

காக்கை


வாடாச்சி மர உச்சியில்
கூட்டிலிருந்த குஞ்சுகள்
காற்றடி காலத்து கிளையசைவில்
கலவரப்பட்டு கரைந்தபோது
சென்றிருந்த தாய் காகம் 
படபடத்து மூச்சிரைக்க
முட்டி மோதி முன்னே 
வந்து நிறகும்!

துணிவு கொண்ட பிஞ்சு ரெண்டும்
தத்தித் தாவி தனியே 
இறக்கையடித்து பறந்து பழகி
கிளையினில் மீண்டும் 
வந்துமரும்!

கருவேல முற்கள் கூடு
காற்று கொண்டு சென்றதன்று,
கூடிருந்த கொப்பை மட்டும்
வளர்ந்து விட்ட காக்கை ரெண்டும்
வந்து வந்து பார்த்துச் செல்லும்!

உயிர் காக்க இரை தேடி
ஊர் முழுக்க பறந்து சென்று
உறவுவென்ற மற்றொன்றை
மறந்து சென்றதொரு காக்கை!
தணியாத கடலலையாய்
தவிப்பாய் திரிந்தது மற்றொன்று!

இன்றும் கூட,
மொட்டை மர உச்சியில்
தன் கூடிருந்த கொப்பில் 
கொஞ்ச நேரம் வந்தமர்ந்து
கரையாத நினைவுகளில்
நிதமும் கரைந்து விட்டு போகும்
அந்த காக்கை!

                                  - மே.இசக்கிமுத்து..

2 கருத்துகள்:

UmayalGayathri சொன்னது…

காக்கையைப் பற்றி நல்லதொரு கவிதை.
நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே.

கீதமஞ்சரி சொன்னது…

அந்த ஒற்றைக் காக்கையை நினைந்து வருத்தம் மேலிடுகிறது. அருமையான கவிதை.