வெள்ளி, பிப்ரவரி 22, 2013

என் உலகம்

ளவேனில் இரவொன்றில்
இளைப்பாற அமருகையில்
இதமான தென்றலாய்
தெம்மாங்கு பாட்டிசைத்தாய்!

முதுவேனில் முகம் கலைந்து
புழுதி பறந்த பொட்டலிலே
ஒற்றையாய் நான் நிற்கையிலே
நிழலாய் நீண்டு நின்றாய்!

கார்கால வெள்ளத்தில்
அடை மழையின் அரற்றலுக்கும்
அஞ்சாமல் குதித்தெழும் குமிழியாய்
மனதினிலே நிலைத்திருந்தாய்!

கூதிர் காலத்தின்
இலையுதிர் மரம் போல
இல்லாமல் இருந்தாலும்,

முன்பனிக் காலத்தில்
முளைத்தெழும் தளிராய்
முகமலர்ந்து சிரித்து வந்தாய்!

பின்பனிக் காலத்தில்
பனித் திரை கிழித்து
பட்டென பாயும்
பகலவன் ஒளியாய்!

தென்றலாய், நிழலாய்
குமிழியாய், தளிராய்
ஒளியாய் ஒவ்வொரு நிகழ்விலும்
பழகிய இதயம் பக்கத்தில் உணர்ந்தேன்!

ஒன்றின் பின் ஒன்றாய்
வரிசையாய் வரும் காலங்களிலெல்லாம்
நம்பிக்கை தருவது
என்னோடு வரும் நட்பே தான்!

நட்புச் சூரியனை
நாளும் சுற்றும் கோள்களால்
இயங்குவது என்னுலகம்! ‌ 

                                  - மே.இசக்கிமுத்து

வியாழன், ஜனவரி 17, 2013

ரோஜா செடியின் விண்ணப்பமொன்று....


டி காற்றென்றால்
அங்கும் இங்கும் அசைந்தாடி
நறுமணப் பாடலோடு,
தலையாட்டி தட்டாங்கல்லாடி
குதூகலித்திருந்தோமே!

மங்கையரே,
கூந்தலில் சூடிக் கொள்ள
தேடி வரும்போது,
அய்யோவென ஓடிடத்தான்
அறியவில்லை எங்களுக்கு!
முட்களிருந்தும் கூட
முட்டிவிட மனமில்லை!
அத்தனை பூக்களையும்
தட்டிப் பறித்தீர்களே
தயவேதுமில்லாமல்!
கன்னி பெண் நாங்கள்
கைம்பெண்ணாய் ஆனோமே!

மலர்ந்தவுடன் மங்கையின்
கூந்தலில் குடியேறுவதில்
வருத்தமொன்றும் இல்லை,
அலங்காரமாய் பார்ப்பதில்
எங்களுக்கும் ஆனந்தம் தான்!

ஒய்யார மங்கையரே
ஒரே ஒரு விண்ணப்பம்,
அத்தனை பூக்களையும்
அப்படியே பறிக்க வேண்டாம்,
ஒன்றிரெண்டாவது விட்டு வையுங்கள்
அலங்கரித்து கொள்வதில்
எங்களுக்கும் ஆசையுண்டு!

                       - மே.இசக்கிமுத்து

திங்கள், டிசம்பர் 31, 2012

நாட்குறிப்பு 2012 (டையரி)

ன்று நீஆனந்தமாய்
வந்தாய் என் கையில்,
ஆசையோடு எழுதி வைத்தேன் என் பெயரை
அழகிய உன் முகப்பில்!

புத்தாண்டு தீர்மானங்கள் இன்னதானென்று
புதிதாய் கிடைத்த உன்னில் எழுதிகொண்டேன்!

முதலொரு வாரம் இதன்படி செய்யென்று
முத்து முத்தாய் எழுதி வைத்தேன்.
பின்னொரு வாரம் கடமையென
முன்னும் பின்னும்,
கிறுக்கலானது கையெழுத்து...

நாளை நாளையென்று நழுவி சென்றேன்,
பின் அலமாரியில் ஓர் அங்கமானாய்.
அவ்வப்போது தூசி தட்டி
அடுக்கி வைக்கும் பொருளானாய்..

இன்று,
அடுக்கி வைத்த புத்தகங்களை
சுத்தம் செய்த போது,
ஏளனமாய் சிரித்தாய் நீ
உன் கேள்விகள் எனக்கு புரிகிறது,
விடை தெரியாமல் இன்று நீ
விடை பெறுகின்றாய்..

நாளைக்கு புதிதாய் ஒன்று
மறுபடியும் புத்தாண்டு தீர்மானங்கள்..

                                      -  மே.இசக்கிமுத்து..