ஒவ்வொரு துளியாய்
பூமியை தழுவிடும் மழைத் துளி!
புது மழையின் மண் வாசம்
புத்துணர்வாய் ஒரு பரவசம்!
குடை பிடித்து நடக்கும் போதும்
கொஞ்சம் நனைந்திடவே மனந்துடிக்கும்!
குளமென தேங்கும் நீரில்
கும்மாளமிட ஓடிடும் கால்கள்!
அங்குமிங்கும் பார்த்துவிட்டு
ஆசையாய் கால் நனைத்திட
ஆவலும் வந்திடுமே!
வருடம் முழுவதும்
வறண்டிருந்த வரப்போரம்
முதல் மழையின் மோகத்தில்
முகங்காட்டும் புது புற்களாய்,
மழைக்கால நினைவுகளெல்லாம்
மனதை கொஞ்சம் வருடிச் செல்லும்!
துவளச் செய்திடும் துயரங்களை,
கலங்கச் செய்திடும் கவலைகளை,
மழையென மாயம்
மறக்கச் செய்திடும்!
மழலையாய் மகிழ்ச்சியில்
மனம் துள்ளிக் குதித்திடும்!!
- மே. இசக்கிமுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக