செவ்வாய், அக்டோபர் 16, 2007

சொர்க்கமே என்றாலும்....

ம்மில் அனேகமானோர் வேலை நிமித்தமாகவோ அல்லது ஏதேனும் ஒரு சூழ்நிலை காரணமாகவோ சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில், வேறு மாநிலங்களில் அல்லது அயல் நாட்டில் விருப்பத்தோடு அல்லது வேறு வழியின்றி வாழ்ந்துகொண்டிருப்போம்.
என்னதான் வசதிகள் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒன்றை இழந்தவர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது சொந்த ஊரின் சுகங்கள்!! எப்பொழுது நாம் சொந்த ஊருக்கு செல்வோம், எப்பொழுது நாம் நம் சொந்த பந்தங்களை, நண்பர்கள‍ பார்ப்போம் என்று நம் மனதில் ஏற்படும் ஏக்கங்களை மறக்கத்தான் முடியுமா அல்லது மறுக்கத்தான் முடியுமா?? இது மாதிரியான ஏக்கங்கள் அடிக்கடி என் மனதில் ஏற்படுவதுண்டு. தூத்துக்குடியில் இருக்கும் பெற்றோர்கள், சகோதரர்கள், சொந்தங்கள் மற்றும் நண்பர்களை பிரிந்து பெங்களுரில் இருக்கும் எனக்கே ஏதோ ஒன்றை இழந்த மாதிரியான ஏக்கங்கள் இருக்கும்போது எண்ணற்ற இலங்கை தமிழர்கள் தங்கள் தாய்நாட்டை பிரிந்து, வீட்டை பிரிந்து வருடக்கணக்காக அயல்நாடுகளில் உழைத்துக்கொண்டு என்றேனும் ஒருநாள் தாய்நாடு திரும்பும் கனவில் இருக்கும் அவர்களை பற்றி நினைக்கையில் என்றோ படித்த இந்த கவிதை நினைவுக்கு வருகிறது.
" யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா!
சுற்றம் பிராங்போட்டில்,
ஒரு சகோதிரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட
ஒட்டகம் போல் ஓஸ்லோவில்!!! "
என்ன சொல்வது, சோகங்கள் தொற்றிக்கொள்ள வார்த்தைகள் வர மறுக்கின்றன. நெடுநாள் போராட்டம் விரைவில் முற்றுபெற்று உலகத்திலுள்ள ஒவ்வொரு மூலையில் இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பி மகிழவுடன் வாழவேண்டும் என்பது தானே அனைவரின் ஆசைகள்!!!

3 கருத்துகள்:

காரூரன் சொன்னது…

இசக்கிமுத்து,
நம்மில் அனேகமான புலம் பெயர்ந்த உறவுகளின் நிலை நீங்கள் சொல்வதை போல் தான். விடிவுக்கான வழி மேல் விழித்து கொண்டு இருக்கின்றோம்.

இளங்குமரன் சொன்னது…

இதுமட்டுமல்ல நண்பரே இன்னும் எத்தனையோ சொல்லமுடியா சோகங்களும் உள்ளன நண்பரே.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் நன்பரே நலமா,
உங்களின் ஒவ்வொரு கருத்தூட்டம் அமைந்த செய்திகளும் மனித வாழ்வின் பிரிவு துயரங்கள் (புலம் பெயர்ந்த தமிழர்கள்), நம்மை கடந்த இனி திரும்ப வராத அருமையான நினைவுகள்( இலங்கை வானொலி நிலையம்)போன்றவை இRaiவனை வேண்டுவதை தவிர வேறுவழி இல்லை என்று மழுப்புவதை விட்டுவிட்டு ஒரு ஆக்க பூர்வமான நடவடிக்கைக்கு ஆரம்பம் என்ன என்று சிந்திக்கிறேன்.
நான் மிகப்பெருமையுடன் நினைக்கும் தமிழர் சிலர் அதில் நீங்களும் ஒருவர்

நன்றியுடன்
உங்கள் சரவணா மும்பையிலிருந்து