புதன், நவம்பர் 07, 2007

உறவுகள்!!

ரம்பப் பள்ளி படித்தபோது
அருகிலிருந்த சித்தப்பா வீடு தான்
விளையாட்டுக் களம் எனக்கு!
சீருடை அழுக்கேற புழுதிமண் பறக்க
சித்தப்பா பசங்களோடு
விளக்கேற்றும் நேரம் வரை விளையாட்டு விளையாட்டு!!


சனி ஞாயிறு கிழமைகளில்
சண்டையிட்டு கொடுக்காபுளி மரத்திலேறி
பழங்களை பறிப்பதும் பதுக்கி வைப்பதும்
பங்கிட்டு திண்பதும்
அத்தை பசங்களோடு அமர்க்களங்கள் ஏராளம்!!


முழு ஆண்டு விடுமுறையில்

முதல் ஆளாய் கிளம்பிடுவேன் மாமா வீட்டுக்கு!
சுட்டெரிக்கும் உச்சி வெயில்
கால் பாதங்கள் சுடசுட பட்டம் விடுவதும்
வண்ணத்துப்பூச்சியை விரட்டிப்பிடித்து வேலியில் விழுந்ததும்
கொல்லையிலே பூத்திருந்த செவ்வந்தி பூவோடு
கொடை விழாவும் நடந்திடுமே களிமண் சாமிக்கு!!


அன்றொரு நாள்,
சித்தப்பா வீட்டுக்கு செல்ல கூடாது
செல்லமாய் ஆணையிட்ட அப்பாவின் வார்த்தைகளை
அரைகுறை மனதோடு அப்படியே ஏற்றுக் கொண்டேன்!!


அத்தை மாமா சண்டையை விசாரிக்க சென்ற
அம்மாவிடமும் கோபமாம்,
மாமா வீட்டிற்கு மறுபடியும் போவதில்லை
கோபமாய் வார்த்தைகள்,
சோகமாய் நின்றிருந்தேன்!!


உருண்டோடியது வருடங்கள்
உறவுமுறை தோழமைகள்
உணர்த்துவதற்கு வழியில்லை!
அண்ணன் தம்பி, மச்சான் மதினி
அன்பான உறவுகள்
தயங்கி தயங்கி தாழிட்டு கொண்டன!!

பின் ஒருநாள் துஷ்டி வீட்டில்
அப்பாவும் சித்தப்பாவும் பேசிக்கொண்டனர்!
அன்போடு நலந்தனை நல்கிக்கொண்டனர்!

அண்ணன் மகள் திருமணத்திற்கு
அழைப்பிதழ் கொடுக்க ஆவலாய் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்!
சமையல் முதல் சடங்கு வரை சகலமும் கவனித்துக்கொண்டாள்!

உறவுகள் சேர்ந்ததில் உள்ளத்தில் மகிழச்சிதான்!
என் முறை உறவுகளோ??
சித்தப்பா மகளோ சென்னையில் வசிக்கின்றாளாம்!
மாமன் மகளுக்கு மதுரையில் வேலையாம்!
அத்தை மகனோ கொச்சியில் பொறியாளர்!

சந்தித்த போது சின்னதாய் புன்னகை!!
உறவுகளில் உயிர் இருந்தும் உறவில்லையே!!!!

6 கருத்துகள்:

பத்மா சொன்னது…

மிகவும் நன்றாய் உள்ளது.
என் சிறிய வயது நினைவுகள் கிளர்ந்து
எழுந்தன.
கோலி ஆட்டமும் கொடுக்காய் புளியும் மீண்டும் வாரா.
உறவுகள் சிதைவது தான் இதில் கொடுமை.
ம்ம்ம் எல்லாம் காலத்தின் கோலம்.

Saravana சொன்னது…

நெல்லை மாவட்டம் வல்லநாடு எனது அத்தை வீடு, எனக்கு 12 வயது இருக்கும் போது மதுரையிலிருந்து எனது சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் எனது பாட்டி அங்கு என்னை கூட்டி செல்வார்கள். அந்த மாமா வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர். அந்த அத்தை குழந்தைகளுடன் மச்சான் கொழுந்தியா என பெசிக்கொண்டு வல்லநாட்டு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அடியில் குளிப்போம். அதற்க்கு பிறகு எனக்கு அங்கு செல்லும் வாய்ப்பில்லை, யாரும் அழைக்கவும் இல்லை,
காலங்கள் கடந்தது, அன்று விளையாடிய சின்ன பெண்டுகள் இன்று திருமணவயதை எட்டி விட்டனர்.
காலம் தான் எவ்வளவு வேகமாக போகிறது. எனது மாமாவின் போன் வருகிறது, சரவணா மூத்த பெண்ணிற்க்கு கல்யானம், அட்ரஸை கொடு பத்திரிக்கை அனுப்பனும், என்று நானும் ஆர்வமுடன் பேசாஅரம்பிக்கலாம் என்றால் , அவரின் பேச்சில் எதே போஸ்டாபிஸில் ஸ்டாம் வாங்கும் நபருக்கும், கவுண்டரில் உட்கார்ந்திருக்கும் நபர் போன்ற உரையாடல், இத்தனை வருடம் கழித்து பேசுகிறோம் சரவணா நலமா, எப்படி இருக்கிறாய் எதுவும் கிடையாது. தாய்மாமன் பையனல்லவா, ஊர்க்காரர்கள் சரவணனுக்கு பத்திரிக்கை அனுப்பினாயா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அனுப்பி இருந்தார்.

இந்த சிக்கலான உறவுகளை என்னிபார்க்கிறேன். அன்று நாங்கள் ஏழைகள் தான், ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. ஆனாலும் அவர்களுக்கு இன்னும் சரவணன் ஐந்து காசுக்கு லயக்கில்லாத பையன் என்ற நினைப்பு,

ஒரு வேலை இவர்களில் இந்த புறக்கனிப்பு தான் என்னை இந்த அளவிற்க்கு தூண்டிய‌தோ என்று கூட‌ சில‌ நேர‌ங்க‌ளில் யோசிப்பேன்.
சொந்த‌ங்க‌ள் என்னை புற‌க்க‌னிக்காம‌ல் இருந்திருந்தால், இன்று பாப்பையாபுர‌த்தில் மாடுமேய்த்துகொண்டு வ‌ய‌லுக்கு உர‌ம‌டித்துக்கொண்டிருப்பேன், இல்லை யென்றால் அடிமை போல் மாம‌னின் வீட்டில் பெண்ணை க‌ட்டிக்கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாய் இருந்திருப்பேன்.

இன்று நான் ஊருக்கு சென்றாலும் நெஞ்ச‌ம் நிமிர்ந்து சொல்லும் பாக்கிய‌ம் அந்த‌ உற‌வுக‌ள் தான் கொடுத்த‌து.

ரூபஸ் சொன்னது…

//சந்தித்த போது சின்னதாய் புண்ணகை!!
உறவுகளில் உயிர் இருந்தும் உறவில்லையே!!!!//

உண்மைதான் ...

ராதா செந்தில் சொன்னது…

உணர்வுகள் சிறைவைக்கப்படும்போது
உறவுகள் சிதைந்துபோகின்றன.

Divya சொன்னது…

உறவுகள் அருந்துப் போவது எத்தனை வேதனை!
பிரிவுகள், சிறு வயது நேசத்தையும், பாசத்தையும் சிதைத்து விடுகின்றது!!

சிறு வயது விளையாட்டுகளும், குறும்புகளும் அருமையாயிருக்கு கவிதையில்!

தினேஷ் சொன்னது…

உறவின் உயர்வை உணர்த்தும் நல்ல கவிதை...

வாழ்த்துக்கள்

தினேஷ்