வெள்ளி, ஆகஸ்ட் 29, 2008

பிள்ளையார்!!


ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு
கோயில் கொண்டிருக்கிறேன்!
நகரங்களில் நாற்புற மண்டபத்தின் நடுவே!
கிராமங்களில்,
சின்ன சிலைகளாய், சிறு கற்களாய்
அரசமர அரியணையில்
மழையில் நனைந்தபடி, வெயிலில் காய்ந்தபடி!
இருந்தாலும் பரவாயில்லை
ஆத்தங்கரையோரம், அரசமரத்தடியில்
ஆனந்தமாயிருக்கிறேன்!

வடநாட்டில் இரண்டு மனைவிகளுடன்
இடிபட்டுகொண்டிருப்பதைவிட
தென்நாட்டில் சுண்டெலி துணையுடன்
தெரு முனையில் பிரம்மச்சாரியாய்
பிரவேசிக்கவே விருப்பம் எனக்கு!

தைப் பொங்கல் திருநாளில்
சாணத்திலான என்னுருவம் தான்
சகல இல்லங்களிலும் அலங்கரிக்கும்!

மூத்தவனாய் பிறந்ததினால்
முதல்வனென்று ஆனேனோ?
முக்கண்ணன் கோவிலிலும்
முதல் வணக்கம் தந்திடுவர்!

சதுர்த்தி தினமன்று
சகல ஊர்களிலும்
கொலுக்கட்டையோடு பலகாரம் பல படைத்து
கொண்டாடி மகிழ்ந்திடுவர்!
சுறுசுறுப்பாய் சுற்றோ சுற்றுவென்று சுற்றிவருவர்
சுட சுட சுண்டலை கொரித்துக்கொண்டு!
அவரவர் ஆசைப்படி அவதாரம் பல கொண்டு
ஆனந்தமாய் ஆலயத்தில் ஆசிகள் அளித்திடுவேன்!

ஆறேழு நாளில்
ஆற்றிலோ கடலிலோ கறையும் போது
சில நேரம் சிலிர்த்திருக்கிறேன்!
கடலலை மிஞ்சும் மக்கள் கூட்டத்தை கண்டு !!
இதே ஒற்றுமை மனித மனங்களில் நிலைத்திருந்தால்
மானுடம் மலையென உயர்ந்திருக்கும்!
சில நேரம் கலங்கியிருக்கிறேன்
கடலில் என்னை கரைத்துவிட்டு கரையேறும்போது கலவரமாம்!!

எண்ணற்ற வேணடுதல்கள்
என் செவியிரண்டும் நிரம்பிவிடும்!
தேர்வில் வெற்றி வேண்டி, தேர்தலில் பதவி வேண்டி,
தேடிய செல்வம் நிலைக்க வேண்டி,
வேலை வேண்டி, காரியத்தில் வெற்றி வேண்டி,
கல்யாண காலம் வேண்டி,
கவலைகள் கரைந்திட, கஷ்டங்கள் போக்கிட
எண்ணற்ற வேண்டுதல்கள் வரிசையாய் வந்து நிற்கும்!
அக்கறையாய் கேட்டிடுவேன் அமைதியுற செய்திடுவேன்!
செய்யும் செயல்களில் நம்பிக்கை வைத்தால்,
எண்ணங்கள் எல்லாம் நல்லவையென்றால்
என்றென்றும் ஆசிகள் அளித்திடுவேன்!!

6 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

நல்லா இருந்தது உங்கள் கவிதை....

Unknown சொன்னது…

விநாயகரின் சுய கவிதை அருமை,
வாழ்த்துக்கள் சரவணகுமரன்.

ஹேமா சொன்னது…

பிள்ளையார் பிறந்தநாளுக்கு ஒரு கவிதை.அருமை.அவருக்கா...இசக்கி முத்து உங்களுக்கா வாழ்த்துக்கள்.பார்த்து பகிர்ந்து எடுத்துக்கோங்க.

ராமலக்ஷ்மி சொன்னது…

//செய்யும் செயல்களில் நம்பிக்கை வைத்தால்,
எண்ணங்கள் எல்லாம் நல்லவையென்றால்
என்றென்றும் ஆசிகள் அளித்திடுவேன்!! //

அருமை அருமை.
வாழ்த்துக்கள் இசக்கிமுத்து.

ராமலக்ஷ்மி சொன்னது…

//செய்யும் செயல்களில் நம்பிக்கை வைத்தால்,
எண்ணங்கள் எல்லாம் நல்லவையென்றால்
என்றென்றும் ஆசிகள் அளித்திடுவேன்!! //

அருமை அருமை.
வாழ்த்துக்கள் இசக்கிமுத்து.

காரூரன் சொன்னது…

*\\கல்யாண காலம் வேண்டி,
கவலைகள் கரைந்திட, கஷ்டங்கள் போக்கிட\\
பிரம‌ச்சாரி கடவுளுடன் நின்று விடாமல், கண்ணன் பக்கம் திருப்பினால் கோதையர் தேடி வருவார்கள். கவிதை அருமை!