முடிவெடுக்க முடியாமல்
யோசிக்கும் போதெல்லாம்
முந்திக்கொண்டு வருவது 'ம்ம்' !
ஆசையோடு வரும்
அழகான விண்ணப்பத்திற்கும் 'ம்ம்' !
ஆமோதிப்பா இல்லை இது
அலைக்கழிப்பா?
குதூகலமாய் குழப்பிவிடும் 'ம்ம்' !
அழுப்பால் அமைதியாய்
அயர்ந்திருக்கும் போது
அலைபேசியில் அழைத்திடும்
அன்பான நட்பிற்கு
ஆனந்தமாய் 'ம்ம்' !
கடற்கரை மணலில்
கைகோர்த்து நடக்கும்
காதலர்களின் காந்த வார்த்தை 'ம்ம்' !
அவ்வப்போது
அவள் சொல்லும் 'ம்ம்'மென்ற
அழகில் அகிலம் மறந்து
அதிசயித்து அவனும் சொல்வான் 'ம்ம்' !
திருமணம் முடிந்து
திங்கள் ஐந்து ஆனபின்பு
ஆசையாய் அழைத்திடும் போது
அலுப்பாய் நீண்டதொரு 'ம்ம்' !
ஏழுகடல் தாண்டி
இளவரசியை மீட்க செல்லும்
இளவலின் இரவு நேர கதைகளுக்கு
குழந்தைகளின் குதூகலமாய் 'ம்ம்' !
அவசர வேளையில்
அழையா விருந்தாளி சொல்லும்
அடுத்த வீட்டு கதைகளுக்கு
நமக்கேன் வம்பென்று
நழுவும் வார்த்தையாய் 'ம்ம்' !
ஆசைகளும் கனவுகளும்
ஆர்பரித்த உள்ளத்தில்
அடுக்கடுக்காய் சோதனைகள்
அதிரும்படி வந்த போது
எனக்கு மட்டும் ஏனென்று
ஏக்க பெருமூச்சாய் ம்ம்' !
கோப புயலில் உதிர்ந்த வார்த்தைகள்
மௌனமாய் நீர்த்து நிற்கும்,
தென்றலாய் மீண்டும் வருடுவது எந்நாளோ?
ஏக்கத்தில் மேலோங்கும் 'ம்ம்' !
அகராதியில் இல்லாதது 'ம்ம்' ,
அழகான உச்சரிப்பில் சொல்லானது!
வார்த்தைகள் ஏதும் இல்லாதபோது
வசியம் செய்திடும் 'மம்' !
'ம்ம்'மென்பது தந்திரமல்ல,
மனதார சொல்லிப் பாருங்கள்
மயக்கும் மந்திரம் அது !!
மே. இசக்கிமுத்து
2 கருத்துகள்:
ம்ம்
Arumai Sir
கருத்துரையிடுக