வெள்ளி, பிப்ரவரி 25, 2011

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி !


ண்மையில் நான் தூத்துக்குடிக்கு சென்றிருந்த போது, அங்கு ஒரு விஷயத்தை என்னால் கவனிக்க முடிந்தது. அது அனேக வீடுகளில் தமிழக அரசு வழங்கிய 14" இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அலங்கரித்துக் கொண்டிருந்தது. அத்தோடு மற்றொன்றையும் சொல்ல வேண்டும். அதன் பக்கத்திலேயே அவர்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் 21' அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது. சில வீடுகளில் LCD திரை கொண்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் பார்க்க நேர்ந்தது. பலர் ஒரு அறையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் மற்றொரு அறையில் பெரிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும். இன்னும் சொல்லப் போனால் அனேக வீடுகளில் இப்பொழுதெல்லாம் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள். நன்றி தமிழக அரசுக்கு!! சிலர் தங்களுக்கு கிடைத்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் அட்டை பெட்டியை திறக்காமலேயே அதை தேவையற்ற ஒரு பொருள் போல மூலையில் போட்டிருக்கிறார்கள். பொதுவாகவே மக்களுக்கு ஒரு மனோபாவம் இருக்கிறது, அது இலவசமாக எது கிடைத்தாலும் வாங்கி விடுவது, அது தேவையா இல்லையா, உபயோகப்படுமா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், இலவசம் என்றால் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் பழக்கம். நம் ஊரில் சொல்வார்களே, " கப்பல்ல பொண்ணு வருதுன்னா, அவனுக்கு ஒன்று, அவன் அப்பாவிற்கு ஒன்று, அவன் தாத்தாக்கு ஒன்று கேட்பானாம் " அது போல தான்.

3492 கோடியே 72 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் 1 கோடியே 62 ட்சத்து 80 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க திட்டமிட்டு, இது வரை 1 கோடியே 58 லட்சத்து 228 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப் பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தமிழக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 05.02. 2011 அன்று தமிழக அரசு தாக்கல் செய்த 2011-12 ஆண்டிற்கான இடைக் கால வரவு செலவு அறிக்கையில் மேலும் ரூ.249 கோடியில் 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிக்ள கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.06.2006 தேதியிட்ட அரசாணை எண் 3 ல், " மகளிருக்கு பொழுது போக்கிற்காகவும், அவர்கள் பொது அறிவு பெறவும் வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, அவை இல்லாத குடும்பங்களுக்கு வழங்க இந்த அரசு கருதியுள்ளது ". இந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பயன், அதன் உண்மையான பயனாளிகளுக்கு போய் சேர்கிறதா என்றால் உறுதியாக ஆம் என்று சொல்ல முடியாது.

இத்திட்டம் செயல்படுத்துவதில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. முதலில் அந்தந்த பகுதிகளில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகளை அதிகாரிகள் மூலம் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். பின்பு அதற்கேற்ப திட்டமிட்டு செலவினங்களை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். கணக்கெடுப்பில் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள், அந்த வார்டு உறுப்பினர் போன்றவர்களை ஈடுபடுத்தியிருக்கக் கூடாது. இவ்வாறு செய்திருந்தால் இந்த திட்டத்தின் பயன் அதன் உண்மையான பயனாளிக்கு சென்றிருக்கும். மேலும் அதிகப்படியான மற்றும் தேவையில்லாத செலவினங்களை தவிர்த்திருக்கலாம். அதை கொண்டு நல்ல பல பயனுள்ள திட்டங்களை செயல் படுத்தியிருக்கலாம். இன்னமும் தமிழ் நாட்டில் எத்தனையோ கிராமங்களில் நல்ல சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. கிராமத்தில் மற்றும் நகரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் பயனுக்காக பல வசதிகளை செய்திருக்கலாம். அந்த நிதியை கொண்டு இன்னும் எவ்வளவோ மக்களுக்கு மிகவும் தேவையான திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம்.

பல திட்டங்களை செயல்படுத்துவதில் அரசியலும் அரசியல்வாதிகளும் இடையில் வரும் வரை அத்திட்டத்தின் நோக்கம் முழுமையடையாமல் போய்விடும்..

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

கப்பல்ல பொண்ணு வருதுன்னா, அவனுக்கு ஒன்று, அவன் அப்பாவிற்கு ஒன்று, அவன் தாத்தாக்கு ஒன்று கேட்பானாம் ///

சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைத்த பதிவு..:0

ரிஷபன் சொன்னது…

கணக்கெடுப்பில் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள், அந்த வார்டு உறுப்பினர் போன்றவர்களை ஈடுபடுத்தியிருக்கக் கூடாது. இவ்வாறு செய்திருந்தால் இந்த திட்டத்தின் பயன் அதன் உண்மையான பயனாளிக்கு சென்றிருக்கும்.

உண்மையான வார்த்தை. ஆனால் வோட் கிடைக்காதே..

ஹேமா சொன்னது…

சிரிக்கவும் சிந்திக்கவுமான பதிவு.அரசியல்வாதிகள் திருந்தச் சந்தர்ப்பமே இல்லை !