வியாழன், பிப்ரவரி 10, 2011

கருவறை கதறல்கள்!

நீ சிந்தித்த போதெல்லாம்
உன் சிந்தையில் ஓர் மூலையிலே
கருவென நுழைந்தோமே,
ஒரு வரியில் இரு வரியில் பல வரியில்
முகவரிகள் தருவாயென
முடங்கிக் கிடந்தோமே!
உன்னுள் ஓர் உயிராய் உரைக்கிறோமே,
உறங்கும் நேரத்து உலறல்களென உதறிவிடுகிறாயே!

நீ ஆனந்தமாய் சிரிக்கும் போது
அங்கும் இங்கும் குதிக்கிறோம்!
கோபப்படும் போது
அடுப்பில் அனலாய் சிவக்கிறோம்!
வருத்தப்படும் போது மட்டும்
வழியறியாது விழிக்கிறோம்!
ஏனென்றால்,
உன்னில் எமை காண்கிறோம்,
எம்மை கவிதையாய் பிரசவித்திடு
எம்மில் உனை காணலாம்!!

மானிடராய் ஜனித்திருந்தால்
மாதம் பத்தில் பாரினை பார்த்திருப்போம்!
தாமதமானால் தலைதிரும்பவில்லை என்ற
தலைவலி எங்களுக்கில்லை!
பிரசிவிப்பதை தள்ளி போட்டால்
பிரச்சனையென சொல்லி,
பிள்ளையும் பெண்ணும் பத்திரமாய்
பல வழிகள் இருக்க பயப்படத் தேவையில்லை!

விதைகளாய் மண்ணில் விழுந்திருந்தால்
மழையில் நனைந்து மலர்ந்திருப்போமே!
கதைகளாய் நாங்கள் இருந்திருந்தால் - உன்
மழலையின் மடல்களில் மகிழ்ந்திருப்போமே!
புதிதாய் மறுமுறை பிறந்திருப்போமே!!

உன் மனதில் அல்லவா விழுந்துவிட்டோம்,
உயிர்பெற உருபெற உருக்கமாய் வேண்டுகிறோம்!
கவிதையாய் வெளிவர விரும்புகிறோம்
கனவென கலைய அல்ல
கருத்தென நிலைக்க!
செந்தனலென தெறிக்க!
சிந்தனையில் சுலீரென உரைக்க
பலர் வாசிப்பில் வாழ வேண்டும்!!

அதுவென்று இதுவென்று நீ
அடுக்கடுக்காய் காரணங்கள் ஆயிரம் சொல்லலாம்,
அத்தனையும் சோம்பேறித்தனம்
அடித்து சொல்லிடுவோம்!
பகல் தூக்கத்தை பாதியாய் குறைத்துக் கொள்ளேன்,
ஞாயிறு விழிக்கும் முன்பு
ஞாபகமாய் எழுந்து கொள்ளேன்!

ஐந்து நாட்கள் பணி மிகுதி தான்,
வாரயிறுதி முழுவதும் வேண்டாம்,
முக்கால் மணி நேரம் போதும்,
உன் மனகருவறையிலிருந்து
கவி பிரசவம் சுகமாய் நடந்தேற
முக்கால் மணி நேரம் போதும்!!

உன் சிந்தனை சிதறல்கள்,
கவி சிற்பமாய் காகிதத்தில் விழும் நாள்,
எங்கள் விடியலின் முதல் நாள்!
அது வரை கண்ணீர் கதறல்கள்!!

2 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

கவிதை வெளிப்படும்வரை அதன் அவஸ்தை..
அருமையாய் வெளிப்பட்ட கவிதை.

ஹேமா சொன்னது…

ஒரு கவிப்பிரசவம் !