புதன், ஜூன் 11, 2014

பூவரச வாசம்!


வீட்டிற்கு விலாசமென
பூவரச மரங்கள் ரெண்டு
பூரிப்பாய் நின்றதங்கு!

மரத்தடியில் கோயில் கட்டி
மத்தியானம் கொடை நடத்தி
பூவரசம் மாலை சாத்தி
இலையில் செய்த பீப்பீ சத்தம்
இன்னும் இங்கே கேட்கிறதே!

மொட்டில் செய்த பம்பரத்தை
முதலில் யார் விடுவதென்று
போட்டியோடு சண்டையும்
சேர்நதங்கு நடப்பதுண்டு!

பருக்களின் வடுகள் கொண்ட 
மரக்கிளை தொங்கி
குரங்குகளாய் குதித்து
கும்மாளமாம் கும்மாளம்!

பருவப் பெண்களின்
பளிச்சென முகங்களாய்
இலைகளின் நடுவே 
வண்டுகளுக்காக வட்டமிடும் 
மஞ்சள் பூசிய பூக்கள்!

பொசுக்கி விடும் வெயிலில்
நின்று செல்ல நிழல் கொடுத்து
வீதியில் செல்வோரிடமும்
விவரங்கள் கேட்டுக் கொள்ளும்!

அன்றொரு நாள்,
தென்னங் கிடுகு வேலி
செங்கல் சுவர் ஆனபோது
வேலியோரம் நின்றிருந்த 
பூவசர மரங்கள் ரெண்டும்
வேரறுக்கப் பட்டு
வெறுந்தரையில் கிடந்ததங்கு!

கருக்கல் ஆனதும் வந்தமரும்
காக்கைகள் தேடி அலையுமே!
அங்குமிங்கும் துள்ளியோடும்
அணில் குஞ்சிகள்
இனியெங்கு போகும்!
கோடாரியால் வெட்டும் போது
ஓங்கி நின்ற இரு மரங்கள்
ஓவென்று அழுதிருக்கும்!

விளையாடி சிரித்திருந்த பூவரசு
விறகாய் கிடந்ததங்கு!
பூக்களின் வாசம் மட்டும் - என்
நினைவுகளில் நின்று கொண்டு
காற்றடி காலங்களில் - என்
கைபிடித்து நடக்கிறது !

                   - மே.இசக்கிமுத்து

1 கருத்து:

கீதமஞ்சரி சொன்னது…

மரங்கள் விறகாவதும் விளைநிலங்கள் வீடாவதும் நம்மை நாமே அழித்துக்கொண்டிருப்பதன் ஆரம்ப அறிகுறிகள். மரத்தோடு விளையாடியவர்களுக்குதான் அதன் மனம் புரியும். நெஞ்சம் கனக்கச்செய்கின்றன வரிகள்.