செவ்வாய், மே 06, 2014

அம்மிக்கல்லும் ஆட்டு உரலும் !


ஞாயிற்று கிழமைகளில் அம்மா மசாலா அரைப்பதற்காக அஞ்சறை பெட்டியிலிருந்து சீரகம், வெந்தயம், பெருங்காயம், மஞ்சள், மிளகு எடுத்துக்கொண்டிருக்கும் போதே நான் அருகே சென்று உட்கார்ந்து விடுவேன். அம்மியில் மசாலா அரைக்கும் போது அதன் அருகிலிருக்கும் கல்லில் நான் உட்கார்ந்து கொண்டு அம்மா எப்போது தேங்காய் அரைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். "இந்த வெங்காயத்தை உரித்து கொடு" என்று சொன்னவுடன், "எனக்கு கொஞ்சம் தேங்காய் தருவியா?" என்று அம்மா சரி என்று சொல்லும் வரை காத்திருப்பேன். "சரி சீக்கிரம் வெங்காயாம் உரிச்சி கொடு" என்று சொன்ன பிறகு தான் வெங்காயம் உரிக்க ஆரம்பிப்பேன். தேங்காய் சில்லை அம்மியில் எடுத்து வைக்கும் போதே, "எனக்கு கொஞ்சம் " என்று கேட்டு வாங்கிவிடுவேன். சில சமயம் அம்மா சின்னதாக கையால் பிய்த்து தரும் போது, "இன்னும் கொஞ்சம் தாம்மா" என்பேன். "ரெண்டு சில் தேங்காய்ல உனக்கே பெரிசா தந்துட்டா கொழம்புக்கு கானாது" என்று சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவிடமிருந்து இன்னொரு சிறிய தேங்காய் துண்டு என் கைக்கு வந்து விடும். அம்மியில் மசாலா அரைத்து முடித்து, அம்மி மற்றும் குழவியிலிருக்கும் மசாலாவை வளித்து தட்டில் வைக்கும் வரை அருகிலேயே இருந்து கவனிப்பது எனது வழக்கமாகயிருந்தது. விளையாடும் போது சில சமயம் அம்மி மேல உட்கார்ந்து இருப்பதை பார்த்து விட்டால் "அம்மி மேல உட்காராதே உட்காராதேனு எத்தனை தடவை சொல்ல, நீனே ஒல்லியா இருக்க, அம்மி மேல உட்கார்ந்த உடம்பு தேஞ்சி போயிடும்" என்று பல தடவை திட்டு வாங்கியதுண்டு.

எங்கள் வீட்டின் திண்னையில் ஆட்டு உரல் ஒன்றும் உண்டு. அப்போதெல்லாம் வாரத்தில் ஒரு நாள் தான் இட்லி - தோசைக்கு மாவு ஆட்டுவார்கள். அதுவும் வெள்ளி கிழமை காலையில் இட்லி அல்லது தோசை கண்டிப்பாக உண்டு. அதற்கு சனி கிழமை சாயந்திரம் ஆட்டு உரலில் மாவு அரைத்து வைக்க வேண்டும். மாவு அரைக்கும் போதும் சில சமயங்களில் அருகே உட்கார்ந்து விடுவேன். முதலில் உழுந்து அரைத்து கொண்டிருக்கும் போதே ஆரம்பித்து விடுவேன், உள்ளங்கையை நீட்டி மாவு கேட்கும் போது, "உழுந்தெல்லாம் திங்க கூடாது, காது கேக்காம போயிரும்" என்ற அம்மாவிடம் "அப்ப அரிசி மாவு தரனும்" என்று முதலிலேயே சொல்லி வைத்து விடுவேன். அரிசி மாவு அரைய கொஞ்சம் நேரம் ஆகும் என்பதால், பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டே இடையிடையில் அரசி அரைபட்டுவிட்டதா என்று உரல் அருகே வந்து பார்த்து கொள்வேன். ஒரு வேளை அம்மா மாவு அரைத்து முடித்துவிட்டால்? மாவு அரைந்து கொண்டிருக்கும்போதே, உரலில் இருந்து எடுத்து என் உள்ளங்கையில் அம்மா தரும் அந்து மாவை ருசித்து சாப்பிடுவதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு. அரைத்து முடித்து பாத்திரத்தில் எடுத்து வைத்த மாவை கொடுத்தாலும் வாங்க மாட்டேன், எனோ அது எனக்கு பிடிக்காமல் போயிருந்தது. வெள்ளி கிழமை வந்தாலே ஒருவித ஆனந்தம் காலையிலேயே என் மனதிற்குள் வந்து விடும், இட்லி கிடைக்குமே. அம்மா தேங்காயை அம்மியில் அரைக்கும் போதே, "வயிறு பசிக்குதம்மா, இட்லி ரெடியா" என்று சொல்ல ஆரம்பித்து விடுவேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, "அம்மா, இன்னிக்கு மதியத்துக்கும் ஸ்கூலுக்கு இட்லி வைம்மா, மூனு போதும்" என்று டிப்பன் பாக்ஸில் இட்டிலியை எடுத்து கொள்வேன். மதியம் பள்ளியில் சாப்பிடும் போது "இன்னிக்கு எங்க வீட்ல இட்லிடா" என்றவாறு சாப்பிடுவேன். இட்லி மற்றும் தோசையென்றால் சாப்பிடும் போது உள்ளத்தில் ஒரு விதமான உற்சாக ஊற்று உதித்து விடும். 

ஆட்டு உரல் தேய்ந்திருந்தால் அரிசி நன்றாக அரைபடாது, அம்மி கொத்துபவரை கூப்பிட்டு கொத்த வைப்போம். அம்மியை கொத்தும் போது அதன் நடுவில் பூ அல்லது கட்டம் போன்று டிசைனாக கொத்தி விடுவார்.அவர் சிறு உளியை வைத்து கவனமாகவும் நேர்த்தியாகவும் கொத்துவதை ஆர்வத்தோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டிருப்பேன். கொத்தி முடித்த பின் "ம்ம் டிசைன் நல்லாருக்கா.." என்று கேட்கும் போது சிரித்துக் கொள்வேன். ஓரு சிறு வேலை என்றாலும் அந்த வேலையில் முழு ஈடுபாடும், திருப்தியாக செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வேலை செய்வது ஒரு பெரிய விஷயம் தான். டேபில் டாப் கிரைண்டரும், மிக்சியும் வீடுகளில் வந்தவுடன், அம்மிக்கும் ஆட்டு உரலுக்கு கிடைத்து வந்த முக்கியத்துவம் முற்றிலுமாக குறையத் தொடங்கியது. அம்மியும் ஆட்டு உரலும் பராமரிப்பு இன்றி முற்றத்தின் ஓரத்தில் போடப்பட்டது, சில வீடுகளில் பழைய சாமான்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டது. இப்போதெல்லாம் அம்மியை திருமண விழாக்களில் அம்மி மதித்தல் சடங்கின் போது வைக்கப்படும் சம்பிரதாயப் பொருளாக தான் பார்க்கப்படுகிறது. 

எங்கள் வீட்டின் ஓரத்திலே பயன்பாடின்றி கிடக்கும் அம்மியை பார்க்கும் போதெல்லாம் ஆழ்மனதில் அது ஏதோ ஒன்றைச் சொல்ல வருவதாய் உணர்கிறேன்..


                                                                                                                  -மே.இசக்கிமுத்து..