கருப்பட்டி கடுங்காப்பி,
கையில் கொஞ்சம் பொரிகடலை,
தூறல் மழையின் மண் வாசம்,
திண்னையில் தெறித்த மழை துளிகள்,
நினைக்க மறந்த வேளையிலே
நனைத்தது கொஞ்சம்!
வழிந்தோடும் மழைவெள்ளம்,
வரிசையாய் நீர்க்குமிழிகள்,
ஒன்றோடு மற்றொன்று
உரசிச் சென்று உடையுமது,
பத்தா பதினொன்றா ?
முதலிலிருந்து தொடங்கும்
மீண்டும் அந்த எண்ணிக்கை!
மழை ஓய்ந்து கூரையில்
வழிந்து வரும் நீர் துளிகள்,
உள்ளங்கையை ஏந்தினேன்,
உற்சாகமாய் தெறித்தங்கு
ஆஹா...
என்னுள் நனைந்த மழை துளிகள்!
- மே.இசக்கிமுத்து