சில்லென்று தென்றலாய்
சிந்தையில் வருடிச் செல்லும்!
நிலவொளி நேரத்தில் நம்
நினைவுகளில் நீண்டுச் செல்லும் !
கனவுகளில் கண்மூடி
கவலைகளை மறக்க செய்யும்!
துவண்டு நிற்கும் போதெல்லாம்
ஆறுதல் சொல்லி
அரவணைக்கும் தாய்மடி!
கள்ளமில்லா உள்ளமது
கலங்கம் சொல்லா எண்ணமது!
கனீரென சிரிப்பொலியில்
கவலை மறந்த புன்னகை!
"ம்ம்" என்று வந்துவிட்டால்
எல்லாம் அதிலடங்கும்!!
கிடைக்கும் நேரத்தில்
நீண்டதொரு உரையாடல்,
பின்னே தொடர்ந்து வரும் குறுஞ்செய்தி!
நிறம் பார்த்து வந்ததல்ல,
மனம் பார்த்து, நல் புரிதல் கொண்டு,
நம்பிக்கை வைத்து மலர்ந்தது தான்
நம் நட்பு!!
வசந்த காலத்தில்
வட்டமிடும் வண்ணத்துப் பூச்சியாய்,
மலர் மேல் வந்தமரும்
மார்கழி பனியாய்,
சாளரம் வழியே
சாரல் மழையை ரசித்திடும் மனதாய்,
மண் கொதிக்கும் வெயிலில்
மரத்தின் நிழலாய்,
ஆழ்மனதில் அழகிய உணர்வாய்
அமைந்ததே நம் நட்பு!!
- மே. இசக்கிமுத்து