அப்பாவின் அம்மா அவள்
ஆத்தா என்றே அழைத்திடுவோம் !
வெள்ளந்தி மனசுக்கும்
உள்ளார்ந்த அன்புக்கும்
உதாரணம் அவள் !!
அவளின் சின்ன சின்ன தேவைகளை,
அன்றாடம் குறைத்து கொண்டு,
சேலையின் முனையில்
சில்லரை காசுகளை முடிச்சி போட்டு
சேர்த்து வைப்பாள் !!
சேர்த்து வைத்த காசுகளை
செல்ல பேரன்கள் எங்களுக்கு
சுருக்கம் கொண்ட கன்னங்கள் குழிவிழ
சிரித்துக்கொண்டே கொடுக்கும் போது,
குழந்தை உள்ளம் குதூகளிக்கும் !!
பஞ்சு மிட்டாய்காரனை பார்த்துவிட்டால்
பத்து பைசாவும் இருபது பைசாவும்
இருப்பு கொள்ளாது !!
சவ்வு மிட்டாய்க்காரனிடம் பேரம் பேசி
சற்று கூடுதலாய் வாங்கி தந்து,
நாங்கள் ருசித்து சாப்பிடும் அழகை
அருகிலிருந்தே ரசித்திடுவாள் !!
குருணை அரிசி சோற்றை
கோபுரமாய் குழைத்து வைத்து,
குவியலின் நடுவே குழம்பை ஊற்றி ,
எல்லாத்தையும் சாப்பிடு
எட்டணா தருவேன் என்பாள் !!
நாலணா எட்டணா வாங்கிக்கொண்டு,
நாளெல்லாம் சட்டைப்பையை
நிமிடத்திற்கொருமுறை தொட்டுப் பார்த்து
மணிக் கணக்கில் மகிழ்ந்திருப்போம் !!
அப்பாவிடம் அடம்பிடித்து கிடைக்காததெல்லாம்
ஆத்தாவிடம் சொன்னால் போதும்
அடுத்த நாளே கிடைத்துவிடும் !!
அவளின் சேலை முனையின் முடுச்சி
சில்லரைகளை அள்ளி தரும் அட்சய பாத்திரம் !!
என்றும் இல்லையென்று சொன்னதில்லை,
இன்று அவள் இல்லையென்றாலும்,
என் கையிலிருக்கும் காசுகளில்
கலகலவென தினமும்
சிரித்துக்கொண்டு தான் இருக்கிறாள் !!
- மே. இசக்கிமுத்து