திங்கள், செப்டம்பர் 30, 2024

தூங்க வைத்த கதைகள் !!

நிலவில்லா நேரங்களில் 
நிசப்தமாக நகரும் அந்த கதைகள் !
மாயாஜால காட்சிகள் 
மனத்திரையில் வந்து செல்லும்,
மறு நொடியே மாயமென மறைந்து கொள்ளும் !

காற்றில் அசையும் தென்ங்கீற்றில்
கரிய உருவம் கையசைக்கும்!
பனை மரத்தின் காவோலை
படபடவென கைதட்டும்,
பயத்தோடு கதையும் பாதியில் நிற்கும் !

அப்பாவை அணைத்துக் கொண்டு 
அப்படியே தூக்கம் வரும்!
ஆனாலும்,
கதைகளின் நீட்சி 
கனவிலும் தொடர்ந்து வரும் !

இறக்கை முளைத்த ஒற்றை குதிரையில் 
இளவரசியை தேடி,
மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி,
மாவீரனின் சாகச கதைகள் !

அரசனின் சேனைகளும்,
அரண்மனை கோபுரங்களும்,
அரங்கேற்ற மண்டபமும்,
அப்பா சொல்ல சொல்ல,
அத்தனையும் வானில் 
நட்சத்திரங்களின் நடுவே,
அற்புதமாய் காட்சி தரும் !

தாத்தா அப்பாவிற்கும்,
பாட்டி அம்மாவிற்கும்,
அதன்பின் அப்பா எனக்கும்,
அக்கறையாய் அன்போடு,
வழி வழியாய் சொல்லி வந்த
வாய்மொழி கதைகள் !

அப்பா சொன்ன கதைகளை
நான் பிள்ளைகளுக்கு 
சொல்லும் போது,
கயிற்றுக் கட்டிலின் கதகதப்பும்,
முழு நிலா உலாவும் வான வீதியும்,
அப்பாவின் ஸ்பரிசமும்,
மனமெங்கும் நிறைந்து 
மெய்சிலிர்க்க வைத்துவிடும் !

இப்போது கூட,
தூக்கமில்லா இரவுகளில் - என் 
தலை கோதி தாலாட்டி,
தூங்க வைக்கும் கதைகள் அது !!

                             -  மே. இசக்கிமுத்து