வெள்ளி, நவம்பர் 21, 2025

மௌனம் !




 எரிச்சலூட்டும் கேள்விகள்,
எக்கா
மான பதில்கள்,
உணர்ச்சிகளை உரசிப் பார்த்து,
ஆத்திரத்தை எதிர்பார்
ப்பவர்களுக்கு
அமைதியே பதிலாகத் தருவதில் 
தயக்கமேதும் எனக்கிருந்ததில்லை !

எடுத்துரைத்த என் 
எண்ணங்கள் யாவும் 
உதாசீனப்பட்டு உடையும் போது,
கருத்துகள் ஒவ்வொன்றும் 
கண்டுகொள்ளாமல் விடப்படும் போது,
வார்த்தைகளுக்கு வரப்பமைத்து
மௌனமாய் இருப்பதில் 
மனதில் ஓர் அமைதி !

புயலென வார்த்தைகள் 
புறமுதுகில் விழுந்தாலும்,
தலையசைத்து மௌனித்து நிற்கும் 
சிறு புற்களை பெரும் புயலென்ன 
செய்து விடப்போகிறது !

ஒரு வேளை 
என் மௌனம் உங்கள் மனதை
ஏகாந்த நேரத்திலும் 
எரிச்சலடைய செய்யலாம்,
அதற்கெல்லாம் நான் பொறுப்பென்று
நீங்கள் நினைத்துக் கொண்டால்
அது உங்கள் கவலை !

பிடிவாதக்காரனென்றோ,
கோழை இவனென்றோ,
அகம்பாவம் அதிகமென்றோ,
ஆளுக்கொரு பக்கம் 
அங்கலாய்த்துக் கொண்டாலும்,
மௌனமாய் தான் கடந்து செல்வேன்!
பதற்றப்பட வேண்டாம்,
என்னை வெற்றி கொண்டதாய்
எண்ணிக் கொள்ளுங்கள் !!

                  -  மே. இசக்கிமுத்து

சனி, மே 24, 2025

தாயுமானவன்!

ச்சி வெயில் அனலென தகிக்க,
உள்ளங்கால் ஊன்றிட
உயிர் போகும் சுடு மணலில் 
ஓடித் திரிந்த இளங்கன்று,
இளைப்பாற இடம் தேடி 
புளிய மரத்தடியில் வந்து நின்று 
' மா ' வென்று இருமுறை 
வயிறுவொட்ட கத்தியது !

மேற்பக்க வரப்பை தாண்டி 
மேச்சலில் நின்றிருந்த தாய் பசுவும்
குரல் வந்த திசை நோக்கி 
' ம்மா ' வென்று அழுத்தமாக
தலையசைத்து கத்தியது !

டேய் சுடலை எங்கடா இருக்க?
களையெடுத்துக் கொண்டிருந்த
கந்தனின் குரல் கேட்டு 
குதூகல பாய்ச்சலில் 
ஓடி வந்து நின்றதங்கே
இளங்கன்று சுடலையாண்டி!

மறுகனமே மடி சுரக்க
ம்மா ' வென்று தாய் பசுவும் அழைத்திட,
மான் போல துள்ளிக் கொண்டு
மடி முட்டிக் குடிக்கும் பொழுது,
மனமெங்கும் உணர்ச்சி பெருக,
கந்தனின் கண்களில் நீர் துளிகள்!
தாயுள்ளம் ததும்பி நிற்க,
தடவிக் கொடுத்து நின்றிருந்தான் - அந்த 
தாயுமானவன் !!

                             -  மே. இசக்கிமுத்து