புதன், மே 24, 2023

நினைவெல்லாம் நட்பு!


சி
று புன்னகையில் தொடங்கி
சில்லென்று தென்றலாய்
சிந்தையில் வருடிச் செல்லும்!

நிலவொளி நேரத்தில் நம்
நினைவுகளில் நீண்டுச் செல்லும் !
கனவுகளில் கண்மூடி
கவலைகளை மறக்க செய்யும்!

துவண்டு நிற்கும் போதெல்லாம்
ஆறுதல் சொல்லி
அரவணைக்கும் தாய்மடி!

கள்ளமில்லா உள்ளமது
கலங்கம் சொல்லா எண்ணமது!
கனீரென சிரிப்பொலியில் 
கவலை மறந்த புன்னகை!
"ம்ம்" என்று வந்துவிட்டால்
எல்லாம் அதிலடங்கும்!!

கிடைக்கும் நேரத்தில்
நீண்டதொரு உரையாடல்,
பின்னே தொடர்ந்து வரும் குறுஞ்செய்தி!

நிறம் பார்த்து வந்ததல்ல,
மனம் பார்த்து, நல் புரிதல் கொண்டு,
நம்பிக்கை வைத்து மலர்ந்தது தான் 
நம் நட்பு!!

வசந்த காலத்தில்
வட்டமிடும் வண்ணத்துப் பூச்சியாய்,
மலர் மேல் வந்தமரும்
மார்கழி பனியாய்,
சாளரம் வழியே
சாரல் மழையை ரசித்திடும் மனதாய்,
மண் கொதிக்கும் வெயிலில்
மரத்தின் நிழலாய்,
ஆழ்மனதில் அழகிய உணர்வாய்
அமைந்ததே நம் நட்பு!!

 - மே. இசக்கிமுத்து

சனி, செப்டம்பர் 10, 2016

இனி வழியெங்கும் வலியில்லை!



சுடுஞ்சொல் வலி
சுருக்கென உள்ளிருந்து
கண்ணில் விழுந்த துாசியாய்
கையில் பட்ட காயமாய்
ஓயாமல் உறுத்தியது,
உள்ளிருந்து கலங்கிடவா
உதறிவிட்டு உறங்கிடவா?

தவறெங்கு உள்ளதென்று
தனித்திருந்து யோசித்தால்,
தவறேதும் செய்யாமல்
தலை குனிந்து நின்றபடி,
அலையடித்த மணல் போல
அங்கும்மிங்கும் உருண்டதிங்கே!
பாசமுள்ள மனசு மட்டும்
பாதி வழி வந்து வந்து
பரிதவித்து நின்றதிங்கே!


கூர்வேல் சொற்களால்
காயம் பட்ட உள்ளத்தில்
மருந்திட்டு மறந்தாலும்
வடுவாகி விட்டதானால்
பார்க்கும் போதெல்லாம்
பதறி துடித்ததிங்கே!

நேற்று ஒன்று தோன்றியது,
நெடுந்தூர பயணமிது
நெருஞ்சி முள் குத்தியதால்
நிலை குலைந்து நில்லாமல்,
போகும் வழியெங்கும் 
பூத்து நிற்கும் மலர்களோடு
பூரித்து கொண்டாடும் 
வாழ்வே போதும்!
இனி வழியெங்கும் வலியில்லை!


                         - மே.இசக்கிமுத்து

செவ்வாய், ஏப்ரல் 21, 2015

நிழலாடும் நினைவுகள்...

அடைமழை இரவின்
ஆனந்த உறக்கம்!

நிலவில்லா இரவுகளில் 
நீட்சிகொள்ளும் காரு வானம்!

காற்றடி மாதத்தில்
கரையுமந்த காக்கை கூடு!

குத்த வைத்து கதை சொல்லும்
குளக்கரை கருங்கல்!

வெயில் கால மதியத்து
வெட்ட வெளி தேரி மணல்!

முன்னொரு இரவில்
கனவாய் வந்த மொட்டை மரம்!

நினைவுகளில் நிழலாய்
நீண்டு வரும் என் பின்னால்!

திரும்பி பார்க்கும் நேரத்தில்
முன்னால் வந்து முகங்காட்டும்!

தனித்திருக்கும் வேளைகளில்
தவழ்ந்து வரும் நினைவலைகள்,
ஆழ்மனதை வருடிவிடும்
அம்மாவின் தாலாட்டாய்!

                       -மே.இசக்கிமுத்து...