இலங்கை வானொலி, எனக்கு நினைவு தெரிந்த நாளில் முதன் முதலில் நான் செவிமடுத்த வானொலி. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஆரம்பப்பள்ளி பயிலும் நாட்களில் காலை எழுந்து பள்ளி செல்லும் வரையிலும், மாலை பாடம் படிக்கும் வரையிலும் எங்கள் வீட்டின் வானொலி பெட்டியில் மத்திய அலைவரிசையில் இலங்கை வானொலி ஒலித்துக்கொண்டிருக்கும். பள்ளிவிட்டு வரும் நேரத்தில், மாலை 5.00 மணிக்கு ஒலிபரப்பாகும் பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியில் "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் , பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்... " TMSன் கனீர் குரலில் ஒலிக்கும் முகப்புப்பாடல் மனதிலோர் உற்சாகத்தையும் இனம்புரியாத குதூகலத்தையும் ஏற்படுத்திவிடும். அறிப்பாளர் அந்நிகழ்ச்சியில் வாழ்த்துக்களை படிக்கும் விதமே ஓர் தனி வகை " முதலாம் பிறந்நாளை கொண்டாடும் நிஷாந்தினியை வாழ்த்துவோர் மட்டகளப்பிலிருக்கும் அத்தை மாமா, அப்பப்பா, அப்பம்மா, கனடாவிலிருக்கும் சித்தப்பா மகேஸ்வரன் சித்தி நலாயினி.." என்று வாழ்த்துக்களை வாசிக்கும்போது என்னையறியாமல் எத்தனைமுறை நானும் அவர்களோடு சேர்ந்து வாழ்த்துவது போல உணர்ந்திருக்கிறேன் தெரியமா?
"இலங்கை வானொலி " சிறுவயதில் கற்பனையாய் என்கரம்பிடித்து இலங்கை வீதிகளில் விளையாடசெய்த தோழன் என்று தான் சொல்வேன். ஏனென்றால் இலங்கையிலிருக்கும் ஊர்களை இதன் மூலம்தான் அறிந்துகொண்டேன். தமிழகத்தில் உள்ள ஊரின் பெயர்களைவிட மாத்தளை, நீர்கொழும்பு, மட்டகளப்பு, ஆணையிரவு, கண்டி, அம்பாரை, வவுனியா, யாழ்ப்பானம் என்று இலங்கை நாட்டு ஊர்களின் பெயர்கள் தான் அப்பொழுது என் நினைவிலிருந்தவை. தமிழ் உச்சரிப்பும் பல தமிழ் வார்த்தைகளையும் இலங்கை வானொலி மூலமாக தான் அறிந்துகொண்டேன்.
கொழும்பு செட்டியார் வீதி "அம்பிகா நகை மாளிகை"யின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. ஞாயிற்று கிழமை மதிய வேளையில் அனேக வீடுகளில் இந்த நிகழ்ச்சி ஒலித்துக்கொண்டிருக்கும். என்னை கவர்ந்த நிகழ்ச்சிகளில் மற்றொன்று "கதையும் கானமும்" நேயர்களின் கற்பனை கதையும் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் போன்ற அறிவிப்பாளர்களின் நேர்த்தியான உச்சரிப்பு பாவமும் அதற்கேற்ற பாடல்களிலும் நான் மெய்மறந்திருந்த சமயங்கள்...
அப்பொழுதெல்லாம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரே நேரம் தான். காலை 9.00 மணிக்கு நெல்லை வானொலியின் நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் அனேக இல்லங்களிலும் இலங்கை வானொலி ஒலிக்கத் தொடங்கிவிடும். அதில் கூறப்படும் நேர அறிவிப்பை வைத்துதான் பெண்கள் மதிய சமையல் வேலைகளை தொடங்குவார்கள்.. இப்படியாக தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர ஊர்களிலுள்ள மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த இலங்கை வானொலியின் ஒலிபரப்பு திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி சில நாட்களில் முற்றிலுமாக எங்களை விட்டு பிரிந்து சென்றது. தொழில்நுட்ப கோளாறு என்றார்கள் சிலர் வேறு பிரச்சணை என்றார்கள்...சில வருடங்கள் கழித்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் "இந்தியாவிற்கான வர்த்தக ஒலிபரப்பை" ஆரம்பித்தது, ஆனால் அதில் அதிக அளவில் இந்திய விளம்பரங்களே இடம் பிடித்து கொண்டதால் எங்களின் மனங்களை தக்க வைக்க தவறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்போதுகூட சில சமயங்களில் சிற்றலை வரிசையில் இலங்கை வானொலி கேட்க நேரும்பொழுது ஒலியோடு சேர்ந்து சிறுவயது ஞாபகம் சில்லென்று வந்து போகும்!!!
வெள்ளி, மே 11, 2007
வியாழன், மே 03, 2007
நல்ல மனம் வாழ்க!!!
சென்ற மாதம் 19.04.2007 அன்று இரவு தூத்துக்குடி செல்வதற்க்காக பெங்களுர் ரயில் நிலையத்தில் 7வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தோம். மழை வேற பெய்துகொண்டிருந்தது. என்னுடைய 3 வயது பையன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான். அவனை ஒரு இடத்தில் உட்கார வைப்பதே பெரிய வேலையாக இருந்தது எனக்கு. ரயில் வந்து பிறகு அவனை தூங்க வைக்கும் வரை...அப்பப்பா.... மைசூரிலிருந்து பெங்களுக்கு 9.15க்கு வரவேண்டிய மைசூர் = தூத்துக்குடி விரைவு ரயில் 10.00க்கு வந்தது. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரயில் தாமதமாக வருவதில் அதிர்ச்சி ஒன்றுமில்லை அது வழக்கமாக நடக்கிற நிகழ்வு தான். ஆனால் 7வது பிளாட்பாரத்திற்கு வரவேண்டிய ரயில் 6வது பிளாட்பாரத்தில் வந்துகொண்டிருந்தது. ரயில் வரும் நேரத்தில் தான் இந்த மாற்றத்தை அறிவித்தார்கள். எல்லோரும் 6வது பிளாட்பாரம் நோக்கி ஓடினார்கள். எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை எனென்றால் 7வது பிளாட்பாரத்தில் இருந்து 6வது பிளாட்பாரம் செல்ல வேண்டுமென்றால் 7வது பிளாட்பாரம் முடியும் வரை வந்து ரயில்வே பாதையை கடந்து வரவேண்டும் அல்லது 7வது பிளாட்பாரத்தில் இருக்கும் படிகளில் ஏறி பின்பு 6வது பிளாட்பாரத்தில் இறங்க வேண்டும். மூன்று பைகளை தூக்கிக்கொண்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு.. என் மனைவிக்கு கண்ணீர் வராத குறைதான். எப்படியோ சமாளித்துக்கொண்டு மெதுவாக நடக்கத்தொடங்கினோம்..அப்பொழுது கடவுள் வந்த மாதிரி ஒருவர் தான் வைத்திருந்த பையை தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு என்னிடம் இருந்த ஒரு பையையும் என் மனைவியிடம் இருந்த ஒரு பையையும் வாங்கிக்கொண்டு வந்தார். ஏ.சி கோச்சில் அவருடைய மனைவியையும் மகளையும் அமர வைத்துவிட்டு எங்களிடம் "நீங்க எந்த கோச்சு" என்று கேட்டார். "பரவாயில்லை சார் ரொம்ப நன்றி எஸ்.2 பக்கத்தில் தான் இருக்கு நாங்க போயிடுறோம"் என்றேன். "பரவாயில்லை, உங்க சீட்டுல கொண்டு தர்றேன"் என்று கூறிக்கொண்டு எங்கள் இருக்கையில் பைகளை வைத்துவிட்டு. "சரி தம்பி நான் வர்றேன் "என்றார். " சார் நீங்க எங்க போறீங்க, உங்க பெயர் என்ன ?"என்றேன். அவருடைய பெயர் சுப்புராமன் என்றும் மதுரைக்கு செல்வதாகவும் கூறினார். ரொம்ப நன்றி சார் என்றேன். " நல்லது தம்பி" என்று புன்னகைத்துவிட்டு அவருடைய கோச்சுக்கு சென்றார். இன்றைய அவசர காலத்தில் மற்றவர்களை பற்றி கவலை பட நேரம் இல்லாமல் இருக்கும் மனிதர்களின் மத்தியில் சுப்புராமன் போன்ற நல்ல மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருந்தது எனக்கு. அந்த நல்ல மனம் படைத்தோர்கள் என்றும் வாழ்க!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)