புதன், நவம்பர் 07, 2007

உறவுகள்!!

ரம்பப் பள்ளி படித்தபோது
அருகிலிருந்த சித்தப்பா வீடு தான்
விளையாட்டுக் களம் எனக்கு!
சீருடை அழுக்கேற புழுதிமண் பறக்க
சித்தப்பா பசங்களோடு
விளக்கேற்றும் நேரம் வரை விளையாட்டு விளையாட்டு!!


சனி ஞாயிறு கிழமைகளில்
சண்டையிட்டு கொடுக்காபுளி மரத்திலேறி
பழங்களை பறிப்பதும் பதுக்கி வைப்பதும்
பங்கிட்டு திண்பதும்
அத்தை பசங்களோடு அமர்க்களங்கள் ஏராளம்!!


முழு ஆண்டு விடுமுறையில்

முதல் ஆளாய் கிளம்பிடுவேன் மாமா வீட்டுக்கு!
சுட்டெரிக்கும் உச்சி வெயில்
கால் பாதங்கள் சுடசுட பட்டம் விடுவதும்
வண்ணத்துப்பூச்சியை விரட்டிப்பிடித்து வேலியில் விழுந்ததும்
கொல்லையிலே பூத்திருந்த செவ்வந்தி பூவோடு
கொடை விழாவும் நடந்திடுமே களிமண் சாமிக்கு!!


அன்றொரு நாள்,
சித்தப்பா வீட்டுக்கு செல்ல கூடாது
செல்லமாய் ஆணையிட்ட அப்பாவின் வார்த்தைகளை
அரைகுறை மனதோடு அப்படியே ஏற்றுக் கொண்டேன்!!


அத்தை மாமா சண்டையை விசாரிக்க சென்ற
அம்மாவிடமும் கோபமாம்,
மாமா வீட்டிற்கு மறுபடியும் போவதில்லை
கோபமாய் வார்த்தைகள்,
சோகமாய் நின்றிருந்தேன்!!


உருண்டோடியது வருடங்கள்
உறவுமுறை தோழமைகள்
உணர்த்துவதற்கு வழியில்லை!
அண்ணன் தம்பி, மச்சான் மதினி
அன்பான உறவுகள்
தயங்கி தயங்கி தாழிட்டு கொண்டன!!

பின் ஒருநாள் துஷ்டி வீட்டில்
அப்பாவும் சித்தப்பாவும் பேசிக்கொண்டனர்!
அன்போடு நலந்தனை நல்கிக்கொண்டனர்!

அண்ணன் மகள் திருமணத்திற்கு
அழைப்பிதழ் கொடுக்க ஆவலாய் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்!
சமையல் முதல் சடங்கு வரை சகலமும் கவனித்துக்கொண்டாள்!

உறவுகள் சேர்ந்ததில் உள்ளத்தில் மகிழச்சிதான்!
என் முறை உறவுகளோ??
சித்தப்பா மகளோ சென்னையில் வசிக்கின்றாளாம்!
மாமன் மகளுக்கு மதுரையில் வேலையாம்!
அத்தை மகனோ கொச்சியில் பொறியாளர்!

சந்தித்த போது சின்னதாய் புன்னகை!!
உறவுகளில் உயிர் இருந்தும் உறவில்லையே!!!!