செவ்வாய், ஆகஸ்ட் 13, 2024

தாளமிடும் தவிப்புகள் !

 

நெடுநாட்களாக,
நெஞ்சினில் இருந்த காதல்,
மழலையின் மொழியாய்,
சொல்லி விடு சொல்லி விடுவென்று
செல்லமாய் அடம் பிடித்த போது,
சரி சரியென்று 
சமாதானம் செய்த மனதிற்கு,
உள்ளுக்குள் ஓர் படபடப்பு,
உறங்கினாலும் உலுக்கி விடும் !

தயக்கமின்றி சொல்லி விட,
தனக்குத் தானே பேசி பேசி
தலையசைத்து தைரியத்தோடு,
ஒத்திகைகள் நிதமும்
ஒன்றா இரண்டா !

ஒரு வழியாக மனமும் 
உறுதியோடு காதலை சொல்லி,
உச்சந்தலை சுளீரென உணர,
உடம்பெல்லாம் விறுவிறுக்க,
ஓடி வந்த மனதிற்குள் 
ஓராயிரம் மின்னல்கள் 
ஒரே நேரத்தில் ஜாலமிட,
பதிலுக்காக காத்திருக்கும் !

தேர்வெழுதி வந்தபின்பு,
தேரிவிடும் என தெரிந்தாலும்,
முடிவிற்காக காத்திருக்கும் 
மாணவரின் மனநிலையில் 
மனதிற்குள் தவிப்புகள் தாளமிடும் !

இயல்பாக இருந்தாலும்,
இதயத்துடிப்பு இரட்டிப்பாகும் !
காகம் கரைந்தாலும் 
காதல் மொழியாய் காதில் விழும் !
சிட்டுக்குருவி சிணுங்கினாலும்,
சிலிர்த்திடும் மனமெங்கும் !

நடுநிசி கடந்த போதும்,
நீண்டுச் செல்லும் இரவுகள்!
உருண்டு புரண்டு படுத்தாலும்,
உறக்கம் வர அடம்பிடிக்கும்!
அலாரம் அடிக்கும் முன்பே,
அதிகாலையில் விழிப்பு வரும் !

யாரோ யாரையோ கூப்பிட்டாலும்,
நம்மை தானோ வென்று மனம் 
திரும்பி திரும்பி பார்க்க தோன்றும் !
வாசலோரம் தலையசைத்து 
வரவேற்கும் செவ்வந்தியின் காதுகளில்,
புதுக்கவிதை சொல்ல தோன்றும் !

வானொலியில் பாடல் வரும்,
வரிகளோடு உதடுகள் தாளமிடும் !
சண்டைக்காரி தங்கை முறைத்துக் கொண்டு 
வக்கணை செய்தால்,
வெட்கத்துடன் வெடுக்கென்று  கோவம் வரும் !
தட்டில் சோறிருக்கும்,
தனை மறந்து சிரிப்பு வரும் !

கைபேசி மணியோசையும் 
காதல் ராகம் இசைத்திடும் !
குறுஞ்செய்தி ஒலி கேட்டு 
குதூகலிக்கும் மனது !
நிசப்த வேளைகளில்,
நிமிடத்திற்கு ஒருமுறை 
கைபேசியை உற்று உற்று பார்த்திடும், 
ஏதுமில்லை என்றாலும் 
ஏக்கத்துடன் எடுக்க தோன்றும் !

காத்திருக்கும் நாட்களில்,
கானும் இடங்களிலெல்லாம்
காதல் மட்டும் நிறைந்திருக்கும் !!

                         - மே. இசக்கிமுத்து



கருத்துகள் இல்லை: