திங்கள், டிசம்பர் 23, 2024

ரகசியங்களின் ரகசியம் இவள் !


 சிறு விஷயமோ 
பெரு விஷயமோ,
கண்சிமிட்டி கை மறைத்து
இவள் காதில் வந்து சொல்லிடுவாள் !

அவள் ரகசியமாய் சொல்லும் 
ரகசியங்களை ரசித்து கேட்கும் 
ரசிகை இவள் !

அவள் சிரித்துச் சொல்லும்
சின்ன சங்கதியில்
அலாதியான அழகிருக்கும் !
அகிலமே இவளுக்குள்
 ஆசைதீர ஆர்ப்பரிக்கும் !

விளங்கினாலும் வேண்டுமென்றே - இவள்
விளக்கம் கேட்டு வினவிடுவாள் !
சட்டென சிரித்திடுவாள்,
விழியசைவில் விளக்கிடுவாள் !

அப்படியா என்று இவளும்,
ஆமாம் என்று அவளும்,
கண்ணசைத்து காதோரம் 
கதை பேசும் கிசுகிசுக்கள் !

அவர்களுக்குள் 
அப்படி என்ன ரகசியமோ?
ஆச்சரியங்கள் அதிசயிக்கும்
அவளின் எண்ணங்களில் எழுகின்ற
ரகசியங்களின் ரகசியம் இவள் !!

                               -  மே. இசக்கிமுத்து

திங்கள், டிசம்பர் 02, 2024

உன் பிரிவு என்ன செய்திடும்?



ன் பிரிவு என்ன செய்திடும்?
நீரில் விழுந்த எறும்பாய்
நிதமும் தத்தளித்தே தவித்து நிற்கும் !
நீந்தி வர நினைத்தாலும் 
மனமெங்கும் மனஸ்தாபம் மல்லுக்கட்டும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
பேசிய வார்த்தைகளை ஒவ்வொன்றாய் 
யோசிக்க தூண்டும்!
பழகிய நாட்களெல்லாம் 
சிந்தையில் பரிதவிக்கும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
 பசியுணர்வை மறக்கச் செய்யும்,
தூங்கும் நேரம் சுருங்கிச் செல்லும் !
நடுநிசியில் விழிக்கச் செய்து
விடியல் வரை விசும்பச் செய்யும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
கா
ணும் யாவையும் 
கனவெனவே கருதச் செய்யும்,
கனவென வந்ததையெல்லாம
நிஜமென  நினைக்கத் தோன்றும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
தொலைவில் கேட்கும் பாடல்களில்
தொலைத்தவை எல்லாம் காற்றாய் வந்து,
உலையில் கொதிக்கும் நீராய்,
நினைவில் உயிரை தகிக்கும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
காரணமின்றி கோபம் வரும்,
தன்னை தானே வெறுக்கத் தோன்றும் !
ஏன் இந்த பிரிவென்று
ஏக்கங்கள் சேர்ந்து கொண்டு,
எள்ளி நகையாடும் !

உன் பிரிவு என்ன செய்திடும்?
உண்மை பிரியத்தை, 
உறவின் உன்னதத்தை,
மௌனமாய் உணர்ந்திட செய்யும் !

கோபம் கொஞ்சம் தணிந்தபோது,
தனிமை எங்கும் நிறைந்திருக்கும் !
சேர்ந்திட மனமும் ஏங்கித் தவிக்கும்,
இதயமும் இதைத் தான் துடித்துச் சொல்லும் !!

                          -  மே. இசக்கிமுத்து