வெள்ளி, ஆகஸ்ட் 31, 2007

சிட்டுக்குருவி சிறுகதை!

நாம் சிறுவயதில் பறவைகள் மற்றும் விலங்குகள் கொண்ட கதைகளை படித்திருப்போம். பிறகு நாமும் நம் மனநிலையும் வளர வளர அதுபோன்ற கதைகளை படிக்கும் ஆர்வம் குறைந்து வருவதை உணர்ந்திருப்போம். நாம் வளர்ந்துவிட்ட பிறகு என்றேனும் ஒரு நாள் வேறு வழியில்லாமலோ அல்லது யதார்த்தமாகவோ அது போன்ற கதைகளை வாசிக்க நேரும்போது கற்பனை உலகில் கலந்துவிடுகிறோம். அதில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துகள் நம் மனதில் பசுமரத்தானிபோல் பதிந்துவிடுகிறது. சென்ற வாரம் ‍இணையத்தில் ஒரு செய்தியை தேடிக்கொண்டிருந்தபோது ஒரு குட்டிக் கதையை வாசிக்க நேர்ந்தது. வாழ்வியல் கருத்துகள் கொண்ட அந்த குட்டிக் கதை இதோ நீங்களும் வாசித்து பாருங்கள்!!
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல அது வினோதமான உணர்வுகளை மனித இனம் போன்ற இதர இனங்களிலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. இந்த உணர்வுகளைக் கலெக்ட் செய்வது தான் அதனுடைய ஹாபி!மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது விரும்பி கலெக்ட் செய்து கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு குஷி வந்து விடும். தன் பையில் பொறாமையை சேர்த்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான கலெக்ஷனாக அது வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.


மனிதர்களின் சண்டைகளில் தான் எத்தனை விதம்! பொறாமைகளில் எத்தனை புது மாதிரிகள்!!பேராசைகளின் அடிப்படையிலான வினோதமான உணர்வுளுக்கோ அளவே இல்லை.தனது கலெக்ஷனை எண்ணி மகிழ்ந்து போனது அது!இன்னும் சில நாட்களில் அதன் குட்டிப் பை வினோத உணர்வு கலெக்ஷனினால் நிரம்பித் தளும்பப் போகிறது!!


ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக மயிலிறகு போல ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால் இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.சோர்ந்து போன அது ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே.உடம்புக்கு என்ன?" என்றது."நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை! வேகமாகச் செயல் பட முடியவில்லை. எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன்.காரணமும் புரியவில்லை" என்றது.நண்பனான நாய், "அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது." அதுவா, என்னுடைய கலெக்ஷனான உணர்வுகளை வைத்திருக்கிறேன்",என்றது குருவி."அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள். எனக்குச் சொல்லேன்" என்றது நாய்." எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் கலெக்ட் செய்திருக்கிறேன்." என்றது குருவி. "அப்படியா!இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்" என்றது நாய்."சே! புரியாமல் பேசுகிறாயே! இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை"என்றது குருவி. நாய் நண்பன் விடவில்லை. "எனக்காக நான் சொல்வதைச் செய்து பாரேன்" என்றது அது.ஒத்துக் கொண்ட குருவி தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது. அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது. என்ன அதிசயம், இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது.ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது.


சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்த போது சொன்னது:-"நண்பனே! ஒரு அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்தி விட்டாய். இந்த எதிர்மறை உணர்வுகளை கலெக்ட் செய்யவே கூடாது. அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது. அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன!ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது. விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது.மனிதர்களும் இது போன்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால் அவர்களும் விண்ணைத் தொடலாமே!" சிட்டுக்குருவியின் உரையைக் கேட்ட நாய் மகிழ்ந்து. இருவரும் சிரித்த போது வானமே லேசாகி சிரித்தது போல இருந்தது.


இந்தக் கதைகள் கூறும் நீதி தான் வாழ்க்கையில் மேம்படுவதற்கான அஸ்திவாரமான உண்மைகள். எதிர்மறை உணர்வுகளை அவ்வப்பொழுது கழட்டி விட்டவாறே மனதை லேசாக ஆக்கிக் கொண்டு உழைத்துச் சம்பாதிப்பதன் மூலம் கிடைக்கும் உணவு கூழாக இருந்தாலும் கூடச் சுவையில் தேவாமிர்தத்தையும் தோற்கடிக்கும்; அத்தோடு பாரமில்லாத மனதோடு பறந்து பறந்து போய் விண்ணையே தொடலாம்; புதிய சிகரங்களைக் காணலாம்!

3 கருத்துகள்:

Raji சொன்னது…

Nalla kadhai nalla karuthu...

Thanks for visiting my blog....Keep visiting:)

பத்மா சொன்னது…

hello mr isakki romba nalla irukku.keep writing

தினேஷ் சொன்னது…

ஒரு நல்ல கதையை படிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றி

தினேஷ்