திங்கள், டிசம்பர் 31, 2007

மனமெங்கும் மார்கழி!!



சுகமான குளிரில் அதிகாலை உறக்கம்
சுப்ரபாத ஒலியில் மறைந்திடும் பனியாய்!!

திருப்பாவை திருவெம்பாவை தெருவெங்கும் ஒலிக்க
தினந்தோறும் பஜனை அதிகாலை மலர்ச்சி!!

வண்ணக் கோலங்கள் வாசலெங்கும்
வரிசையாய் பூசனி பூச்சூடி வீதியெங்கும் கோலாகலம்!!

மார்கழி மாதம் மலர்களின் மகரந்த காலம்!
முகத்தினில் பனித்துளி பருக்களோடு
முந்தாநாள் பூப்பெய்த பருவப்பெண்ணாய்
அனேக பூக்களெல்லாம் நாணத்தோடு நனைந்து நிற்கும்!!


தூரத்து காட்சியெல்லாம்
பகலவனை பார்க்கும் வரை
மூடுபனியுடுத்தி முக்காடு போட்டிருக்கும்!!

தோட்டக்காடெங்கும்
தோரணங்கள் காய்கறிகள்!!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கனவுலகில் வருவதுபோல்
பச்சை உடையணிந்து பார்ப்பவரை கிரங்கடித்து
காற்றோடு கையசைக்கும் நெல்மணிகள்!!

மனதிற்கு பிடித்த மார்கழி மாதம்
மாதங்களின் சுவாசம் இது!
வசந்தத்தின் வாசல் இது!
"பா"க்களின் ராகமாய்
பூக்களின் வாசமாய்
ஊரெங்கும் உற்சாக ஊற்றாய்
மனமெங்கும் மார்கழி!!

செவ்வாய், டிசம்பர் 18, 2007

முதல் கவிதை!!


ள்ளி பருவத்தின் முதல் கவிதை
படிக்கும்பொழுதெல்லாம்
பனி விழும் மலராய் மாறுதே மனது!!



முதல் கவிதையை பிரசிவிக்க பட்ட பாடுகள்,
பல்துலக்கும் நேரம் முதல் பாய் விரிக்கும் நேரம் வரை வார்த்தை தேடல்கள் வானமென நீண்டு கொண்டது !!

சிந்தையில் சிக்குண்டு சிதறிய வார்த்தைகளை வரப்புக்குள் கொண்டுவந்து, எழுதி எழுதி அடித்து அடித்து வார்த்தை கொலைகள் வகையின்றி நடந்தேறும்!!

கனவிலும் கருவாய் வளர்ந்தது என் கவிதை!
வெயிலிலும் நிழலாய் தொடர்ந்தது என் கவிதை!
வியர்வை துளிகளெல்லாம் கவிதை துளிகளாய்!!

இருவார இறுதியில்
இனிதாய் பிறந்தது கவிதை!!
ஒருமுறை இருமுறை பலமுறை வாசித்து,
கரம் பிடித்து நடைபழகும் மழலையாய்,
மழை துளி நிலத்தில் பட்டுதெரித்ததாய்
துள்ளி குதித்தது மனம்!!

பள்ளி பருவத்தின் முதல் கவிதை
படிக்கும்பொழுதெல்லாம்
பனி விழும் மலராய் மாறுதே மனது!!