வியாழன், செப்டம்பர் 17, 2009

இன்று ஒரு தகவல்!


ன்று ஒரு தகவல் என்றவுடன் நம் மனதில் சட்டென வந்து நிற்பவர் திரு.தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள். வானொலியில் எதை கேட்கிறோமோ இல்லையோ, இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பவர்கள் நிறைய பேர்கள் உண்டு. அந்த வரிசையில் நானும் ஒருவன். இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் காலங்களில் வானொலி கேட்பது தான் என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு. அதிலும் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை தவறவிடுவதில்லை. அன்று காலை ஒலிபரப்பான இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட கருத்துகளையும் நகைச்சுவை விசயங்களையும் நானும் என் நண்பன் வாஞ்சீஸ்வரனும் வகுப்பறையில் பகிர்ந்து கொள்வதுண்டு. இன்றும் கூட வாஞ்சீஸ்வரனை சந்திக்கும் போதெல்லாம் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி குறித்த நினைவுகளை சொல்லிக் கொள்வதுண்டு! அந்த அளவுக்கு திரு.தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுடைய இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி எங்கள் வாழ்வோடு ஒன்றிய நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

தினம் தினம் புது புது தகவல்கள், கருத்துக்கள் அதற்கு ஏற்ப ஒரு நகைச்சுவை கதையையும் சொல்லி நம் சிந்தனையை தூண்டிவிட்டு செல்வார். கருத்துக்களை யதார்த்தமாக சொல்லும் விதம், மண் வாசனை நிறைந்த நல்ல குரல் வளம் ஆகியவை தான் குழந்தைகள் முதல் பெரியவர்களின் செவி மடல்களை இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியின் பக்கம் திரும்ப செய்தன. முகம் அறியாத அந்த காலகட்டத்தில் கூட திரு.தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.
திரு.தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் மரணச் செய்தி (16.9.2009) உலகெங்கும் வாழும் தமிழர்களை மிகுந்த சொகத்தில் ஆழ்த்தியது. இதோ அவர் சொன்ன ஒரு தகவலை கிழே தருகிறேன், படிக்கும் போது நிச்சயம் அவர் நம் மனக் கண் முன்னே தோன்றி சொல்வது போல் இருக்கிறதல்லவா?

இன்று ஒரு தகவல்!
எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் ஒரு பொருளை தொலைச்சிட்டு கவலையா இருக்கார்.

ஆறுதல் சொல்லக்கூடாதா? சொன்னேன். காதுலே வாங்கல.

அந்தப் பொருள் கிடைக்கிறவரை சாப்பிடறதில்லேன்னு அடம்பிடிக்கிறார். தன் மனைவிமேல சந்தேகப்படறார். தான் வீட்டிலே இல்லாத சமயங்களில் அவளை கண்காணிக்க ஒரு வசதியில்லையேன்னு வருத்தப்படறார்.


இவர் ஜப்பான்ல இருந்திருக்கலாம்.
என்ன சொல்றீங்க? அங்கே உளவு பார்க்க நவீன வசதிகள், நுண்ணிய மின்னணு கருவிகள் பயன்படுதாம். எப்படி?

ஜப்பான்ல பெரிய நட்டத்தில போன ஒரு கம்பெனி நல்லா இயங்கறதா காட்டிக்கிட்டு வங்கிகள்லே மேற்கொண்டு நிறைய கடன் வாங்கிக்கிட்டே இருந்சுச்சாம். சந்தேகப்பட்ட பாங்க்காரங்க உண்மையை கண்டுபிடிக்க ஒரு உளவு நிறுவனத்தைப் பார்த்தாங்க. அந்த சமயத்துல அந்த கம்பெனி அக்கவுண்டெண்டுக்கு சொத்தைப்பல் காரணமா சிகிச்சைக்கு வந்தப்போ, ரகசிய கருவியை அவர் பல்லில் அவருக்கே தெரியாமல் பொருத்திட்டாங்க. அவ்வளவுதான் அப்புறம் கம்பெனி கூட்டங்கள்லே பேசற தகவல்கள் பாங்க்காரங்க காதில் விழுந்துக் கிட்டிருந்தது. கம்பெனிக்கு கடன் கொடுக்கறதை நிறுத்திட்டாங்க.

அது இங்கே இருந்திருந்தா பெரியவருக்கு உபயோகமா இருந்திருக்கும்.

அந்த பெரியவர் பல் இடுக்கிலே பொருத்திப்புட்டா அவர் போற இடம்.. என்ன பேசறார்ங்கிறதையும் கண்டுபிடிச்சிடலாம்.

அது சாத்தியமில்லை..ஏன்னா, அவர் தொலைச்சது அவரோட பல் செட்டைத்தான்!!

8 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

பலரையும் தான் தரும் தகவல்களால் மகிழ்வித்த அவர், மறைந்தாலும் என்றென்றும் மக்கள் மனதிலே வாழ்வார்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

இணையத்திலும் அவருடைய பேச்சு ஒலிப்பதிவு வடிவில் கிடைக்கிறது. முன்பு கேட்டிருக்கிறேன்..

எளிமையான மனிதர்.
பகிர்விற்கு நன்றி.

When it is high time சொன்னது…

I wrote an obituary for him in English - in my blog;

http://www.myownquiver.blogspot.com/

தினேஷ் சொன்னது…

பகிர்விற்கு நன்றி...

rahini சொன்னது…

பகிர்விற்கு நன்றி..

ராமலக்ஷ்மி சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இசக்கிமுத்து.

பத்மா சொன்னது…

isakki ,
blog visit kku nandri.ungalukkum puthandu matrum pongal vazhthukkal.
nanum appo appo vanthu ungal blogil addition unda endru paarpen .
ezhuthungal seekiram.
nandri
padma

பத்மா சொன்னது…

esakki meendum vanthullen ..
en mounam?