வெள்ளி, ஜூன் 20, 2008

தேள் கடி !!


து 2001ன் மே மாதத்தில் நடந்த சம்பவம். அன்று இரவு சுமார் 2 மணி இருக்கும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எனக்கு வலது காலின் பாதத்திற்கு சற்று மேலே ஏதோ ஒன்று கடித்தது போல இருந்தது. என்னவென்று எழுந்து பார்ப்பதற்குள் வலி விறுவிறுவென்று அதிகரிக்க தொடங்கியது. லைட்டை போட்டுவிட்டு அம்மாவிடம் "அம்மா என்னமோ காலுல கடிச்சுட்டுது, வலி தாங்க முடியல" ஏதேனும் கட்டறும்பு கடித்திருக்கும் என்று தான் முதலில் நினைத்தேன், ஆனால் நிமிடங்கள் நகர நகர வலி மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. இது நாள் வரை இந்த மாதிரியான வலியை நான் அனுபவித்ததில்லை. நிச்சயமாக கட்டறும்பு கடிக்கவில்லை, வேறு ஏதோ ஒன்று...என்ன அது, அம்மாவும் தம்பியும் சுவரின் ஓரமாக ஏதேனும் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். வலி ஒரு பக்கம், இன்னொரு பக்கம் என்ன கடித்ததென்று தெரியவில்லை, அந்த பயம் வேறு தொற்றிக் கொள்ள என்னால் இருக்க முடியவில்லை, வலிக்கின்ற இடத்திற்கு சற்று மேலே ஒரு துணியை வைத்து கட்டிக்கொண்டேன்.


கடைசியாக நான் படுத்திருந்த பாயை எடுத்து உதறிய போது, ஒரு தேள் ஓடிச் சென்று சுவரின் மூலையில் ஓரமாக ஒதுங்கி நின்றது. விரைவாக வாசலருகே இருந்த செருப்பை எடுத்து வந்து அதை அடி அடியென்று அடித்து கொன்று போட்டேன். எங்கள் வீட்டில் இந்த சத்தம் கேட்டு காம்பவுண்டில் இருந்தவர்கள் " என்ன அது, என்ன " என்று எங்கள் வீட்டில் கூடிவிட்டனர். அதற்குள் அம்மா, எதிர் வீட்டில் இருக்கும் ரெங்கம்மாள் அத்தையை கூட்டி வந்துவிட்டாள். ரெங்கம்மாள் அத்தை பூச்சி கடிக்கு பார்வை பார்ப்பார்கள். மரத்தில் இருந்து வேப்பிலையை கொஞ்சம் பறித்து வந்து திருநீர் பூசி தேள் கடித்த இடத்தில் ஏதோ முனுமுனுத்துக்கொண்டே வேப்பிலை வைத்து தடவிவிட்டார்கள். பிறகு விஷம் ஏதும் ஏறியிருந்தால் அதை கட்டுப்படுத்த வெற்றிலையும் மிளகும் சேர்த்து வாயில் போட்டு சவைத்து விழுங்கிவிட சொன்னார்கள். அப்படியே செய்தேன். "வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதே " என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது வலி. குறைந்த மாதிரி தெரியவில்லை. " அம்மா வலி தாங்க முடியல" என்று முனங்கிக் கொண்டிருக்கையில்..

அம்மாவோ " எங்கள் ஊரில் தேள் கடித்துவிட்டால் அந்த தேளை ஒரு நூலில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டால் விஷம் படிப்படியாக இறங்கிவிடும் என்று சொல்வாங்க" என்றாள்.

பக்கத்து வீட்டு அக்காவோ " வலி தாங்க முடியவில்லலையென்றால் கடித்த தேளை தீயில் சுட்டு அந்த சாம்பலை கடித்த இடத்தில் தேய்த்தால் வலி குறையும் " என்று சொன்னாள்.

"தேள் கடி வலியை தாங்க முடியாது, வலி தெரியாமல் இருக்க கொஞ்சம் சாராயம் கொடுப்பாங்க" இது மற்றொருவர்.

" நல்ல வேளை இது வெள்ளை தேள், இதுக்கு விஷம் கொஞ்சம் தான், ஆனா கருந்தேள் கடித்தால் பயங்கர விஷம் ஆளையே கொன்னுடும் " இது இன்னொருவர். இங்கே ஒருவன் வலியால் கஷ்டப்பட்டு கொண்டிருக்க, ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்லிவிட்டு அவரவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். சரி இந்த ராத்திரியில ஆஸ்பத்திரிக்கும் போக முடியாது, காலையில ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, தேள் கடித்த இடத்தில் பொடி வெங்கயத்தை நறுக்கி தேய்த்துகொண்டேன். ‍நேரம் ஆக ஆக வலி குறைந்த மாதிரி தெரிய எப்போது தூங்கினேன் என்று எனக்கே ‍தெரியவில்லை. காலையில் எழுந்த போது வலி பாதியாக குறைந்திருந்தது. இரவில் வலியால் துடித்துகொண்டிருந்த போது பக்கத்து வீட்டார்கள் சொன்ன யோசனைகளை நினைத்து சிரிப்பு தான் வந்தது, கூடவே BSc முதலாம் ஆண்டில் படித்த NISSIM EZAKIEL லின் " NIGHT OF THE SCORPION " என்ற பிரபலமான ஆங்கில கவிதை நினைவுக்கு வந்தது.

இச்சம்பவத்தை இன்று நினைத்தால் கூட சிரிப்பு வந்துவிடுகிறது!!!

5 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

//இச்சம்பவத்தை இன்று நினைத்தால் கூட சிரிப்பு வந்துவிடுகிறது!!!//

தேள் கடிக்குக் இலவசமாக எடுத்து விடப் பட்ட வைத்தியங்களும் சிரிப்பை வரவழைத்தன:))!

தினேஷ் சொன்னது…

நினைவை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

தினேஷ்

Divya சொன்னது…

தேள் கடி நினைவை கூட இவ்வளவு அழகா பதிவிட முடியுமா??

வியப்புடனும்....திகிலுடனும் படித்தேன்!!

M.Rishan Shareef சொன்னது…

அழகான பதிவு.. :)

மங்களூர் சிவா சொன்னது…

/
Divya said...

தேள் கடி நினைவை கூட இவ்வளவு அழகா பதிவிட முடியுமா??
/

அதானே!

:)))