திங்கள், டிசம்பர் 29, 2008

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
தன்னை போல் பிறரை கருதும்
தன்னலம் மறந்த மனிதர்கள்!
அருகிலிருப்பவன் அவதிபட்டால்
அனலாய் துடிக்கும் அன்புள்ளங்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
ஏ‍ழை பணக்கார ஏற்றத் தாழ்வுகள் என்றுமில்லை!
சக மனிதர்களையும் சகோதரர்களாய்
எண்னும் இவர்கள் சிந்தனையில்
பகலவன் பார்த்த பனிதுளி போல்
சாதியும் மதமும் துளியுமில்லை!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
கருவிலிருப்பது பெண்ணென தெரிந்தும்
பெருமை பேசி பேரானந்தங்கொள்ளும்
பெற்றோர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
தொழிற்சாலைகளிலும் தெருவோரங்களிலும்
துவண்டு கிடந்த பிஞ்சு உள்ளங்கள்
சிறகு முளைத்த சிட்டுக் குருவிகளாய்
துள்ளி திரியும் இளங்கன்றுகளாய்
கல்விசாலையில்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
வேலையற்று சுற்றி திரிந்த
சோம்பேறி கூட்டமும்
எப்போதும் கத்தியும் கம்புமாய்
காட்சி தந்த அடாவடி கூட்டமும்
மண்வெட்டியும் கையுமாய்
அவரவர் வேலைக்கு அதிகாலையில்
எழுந்து செல்லும் அற்புத காட்சி!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
மேகங்களுக்கிடையே
முளைத்து நிற்கும் வெள்ளிகளாய்
பச்சையுடுத்திய நேற்வயல்களுடே
நிதர்சனமாய் இளைஞர்கள்!
விவசாய விஷயங்களை வீட்டிற்கு மட்டுமல்ல
இணையத்தின் மூலம்
இவ்வுலகத்திற்கே சொல்லி
புது புரட்சி கண்டவர்களாய்
இந்திய இளைஞர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
நாட்டில் பட்டம் வாங்கி
அரசாங்க ஆணைக்காக காத்திராமல்
ஆளுக்கொரு தொழிலை
அக்கறையாய் உருவாக்கி
ஆர்வமுடன் உழைக்கும் இளைஞர்கள்!
இங்கே இளைஞர்கள்
வேலையில்லா பிரச்சனைக்கு விலங்கிட்டவர்கள்!
தீவிரவாதத்திற்கு தீயிட்டவர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
அனுசக்தியை ஆக்க வழியில் பயன்படுத்தும்
அற்புத வழிகளை ஆராய்நது
அகிலத்திற்கு சொல்லிடும் விஞ்ஞானிகளாய்
இந்திய இளைஞர்கள்!
விண்வெளி விஞ்ஞானத்திலும்
கணினி கலையிலும் இந்திய இளைஞர்களால்
உலக விஞ்ஞானிகளின் முழு கவனமும்
இந்தியாவின் பக்கமே!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
மனமிருந்தால் போதும்
மதமும் சாதியும் தேவையில்லை!
கருத்‍தொன்றினால் போதும்
காலங்காலமாய் காதலை வாழ வைக்க
காதலுக்கு காவலாய் நாங்களுள்ளோம்
இது காதலர்களின் பெற்றோர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
வஞசமில்லா உள்ளமும்
வளமான எண்ணமும் தான் வாழ்க்கைக்கு தேவை,
வரதட்சணையல்ல!
பெண்களுக்கு வாழ்வளிக்க நாங்களுள்ளோம்
இனி வாழாவெட்டி பட்டமுமில்லை
முதிர் கன்னி முத்திரையுமில்லை
முழங்கும் இளைஞர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
மகத்தான வாழ்வை
மரண பாதைக்கு விரைந்து மாற்றிடும்
மயக்கும் போதையை மறந்தும் கூட
நினைப்பதில்லை இந்த மனிதர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
உள்ளத்தில் கள்ளமில்லை
ஒழுக்கத்தில் குறையுமில்லை
கீழ்மட்ட எண்ணமும் எங்களுக்கில்லை
எயிட்சுக்கு இனி வழியுமில்லை!
மகிழ்வுடன் மார்தட்டும் மனிதர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
அர்த்தமற்ற அறிக்கைகளும்
மக்கள் அமைதியை கெடுக்கும்
அரசியல் கலவரமும் அராஜக அலுவல்களும்
அடியோடில்லை!
இங்கே கூட்டணி பல அமைத்தாலும்
கூட்டங்கள் பல நடந்தாலும்
மக்கள் நலனே மனதில் ‍கொள்ளும்
மகத்தான அரசியல் தலைவர்கள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
ஆண்டுக்கொருமுறை வந்து போகும்
தீபாவளி பொங்கலல்ல தேர்தல்!
ஐந்தாண்டுக்கொருமுறை மலரும்
மகரந்த பூக்களாய் மக்கள் உரிமைக்கு
உயிர் கொடுக்கும் ஊக்க சக்தியாய் தேர்தல்!!

இங்கே தேர்தலுக்கு பின்
வாக்குறுதிகளையும் வட்டத்தையும் மறவாமல்
மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய
நிதமும் போட்டியிடும் அரசியல்வாதிகள்!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
இங்கே,
அன்பளிப்பென்று அர்த்தம்பாவித்து
லட்சமாய் கொடுக்கும் லஞ்சம்
அரசு அலுவலர்களின் லட்சிய கடமையில்
அரசியல் தலைவர்களின்
மக்கள் நல கொள்‍கையில்
மாயமென மறைந்து போயின!!

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!
காஷ்மீர் மலைப்பகுதி
காதலர்களுக்கு கூடி மகிழும்
கவின்மிகு சோலை!
புதுமண தம்பதிகளுக்கு
தேனிலவு சொர்க்கம்!
இங்கே,
அந்நிய ஊடுறுவலும்
ஆயுத முழக்கங்களும் அறவேயில்லை!!

அந்நிய தேசங்கள்
அதிசயத்து நோக்கும்
இந்திய திருநாட்டை
நினைத்து பார்க்கையில்
நெஞ்சில் குற்றால அருவியாய்
சந்தோஷ சாரல்கள்!!

தாய் மண்ணே வணக்கம்!
தவறி விழுந்தேன் தரையினில்!
அடடா அதிகாலை கனவு!
அதிகாலை கனவு அப்படியே பலிக்குமாம்
அம்மா சொல்லக் கேள்வி!!

தரையில் விழுந்த என்னை
வரவேற்றுக் கொண்டது நண்பனின் வாழ்த்து மடல்!

" எண்ணங்கள் ஈடேற
கனவுகள் உயிர்பெற
கனிவான வாழ்த்துகள் "

என் கனவுகள் உயிர்பெறுமா?
சமத்துவம் காக்க
சரித்திரம் படைக்க
இருக்கிறோம் நாங்களென்று
இளைஞர்கள் இருக்கையில்
வேறென்ன வேண்டுமிங்கு!
நிச்சயம் ஒரு நாள்
என் கனவுகள் உயிர் பெறத்தான் போகிறது
என் உள் மனமும் சொன்னது!!
இது இருபத்தொன்றாம் நூற்றாண்டு!!

- மே. இசக்கிமுத்து


குறிப்பு:- நான் எழுதிய இந்த கவிதை, M/S.FLY JAC LOGISTICS ன் பத்திரிகையான " JAGRATHA"வில் ஜனவரி 2000 இதழில் வெளியானது (நான் அப்பபொழுது அந்நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றிகொண்டிருந்தேன்).

பிறகு 14.08.2001 அன்று பகல் 12.00 மணி அளவில் திருநெல்வேலி வானொலி நிலைய ஒலிப்பதிவு கூடத்தில் எனது குரலிலேயே ஒலிப்பதிவு செய்யப்பட்டு, 29.08.2001 அன்று காலை 9.45 மணிக்கு ஒலிப்பரப்பான " இளைய பாரதம் " நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. திருநெல்வேலி வானொலியில் ஒலிபரப்பான எனது இரண்டாவது கவிதை இது!!

8 கருத்துகள்:

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நல்ல கனவு.. விரைவில் பலிக்கட்டுமே..வாழ்த்துக்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//நிச்சயம் ஒரு நாள்
என் கனவுகள் உயிர் பெறத்தான் போகிறது//


கிறது

ராமலக்ஷ்மி சொன்னது…

அத்தனை வரிகளும் வாசிக்க வாசிக்க இத்தனையும் நடந்து விடாதா என இதயத்தில் உண்டு பண்ணுகிற ஏக்கமும் உணர்வுமே ஒரு பிரார்த்தனையாகி இக்கனவு நிறைவேற வழி செய்யும். செய்ய வேண்டும்.

//வானொலியில் ஒலிபரப்பான எனது இரண்டாவது கவிதை இது!!//
நன்று. உங்கள் குரலில் ஒலித்த அந்த முதல் கவிதை என்ன என்பதையும் அறிய ஆவலாய் உள்ளேன். ஏற்கனவே பதிவிட்டிருக்கிறீர்களா? நம் கவிதையை நாமே வாசிப்பது ஒரு அருமையான அனுபவம். என் கவிதைகள் பலவற்றை கல்லூரி கவியரங்க மேடைகளில் வாசித்திருக்கிறேன்:)!

பெயரில்லா சொன்னது…

21st centure kavithai - oru nalla manam konda manithanin kanavukal.
kavithai suupperrr... realy highly appreciable one. i also wish your dream comes true..

சக மனிதர்களையும் சகோதரர்களாய்
எண்னும் இவர்கள் சிந்தனையில்
பகலவன் பார்த்த பனிதுளி போல்
சாதியும் மதமும் துளியுமில்லை!!

Oru Thuthukudi youth ikku ippadi oru kanava.. malarattum ungal kanavu
வளமான எண்ணமும் தான் வாழ்க்கைக்கு தேவை,
வரதட்சணையல்ல!
Pengal thattupadaga pokirathu nanbare...piraku enga varathatchanai

aanalum ungal kavithai..v.v.good..nalla dreams

rahini சொன்னது…

nala aakam oworu sinthanaikalum arumai

rahini

rahini சொன்னது…

nala aakam oworu sinthanaikalum arumai

rahini

தமிழ் சொன்னது…

அருமையான வரிகள்
வாழ்த்துகள்

ஹேமா, சொன்னது…

இசக்கிமுத்து,நீங்கள் புதுப்பதிவு போட்டதை நான் கவனிக்கவே இல்லையே.சரி இப்போ பாத்திட்டேனே!

அருமையான கவிதை ஒன்று.நிறைந்த எதிர்பார்ப்போடு புத்தாண்டை வரவேற்றிருக்கிறீர்கள்.
எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.எதிர்பார்ப்போம் நம்பிக்கையோடு.