வெள்ளி, செப்டம்பர் 05, 2014

என் பள்ளி ஆசிரியர்கள்


         
ள்ளி பருவ நினைவலைகள் என் மனத்திரையில் எபபோதெல்லாம் சித்திரமாக வருகிறதோ அப்போதெல்லாம் என்னை மறந்து குதூகலித்து விடுகிறது உள்ளம். புத்தக படிப்போடு விளையாட்டு, வெகுளித்தனம் மற்றும் வேடிக்கைகளால் அறிவை ஆக்கப்பூர்வமாக வளர்த்துக் கொண்ட நாட்களவை. தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் இருக்கும் St.Charles English Medium Schoolலில் LKG முதல் ஐந்தாம் வகுப்பு வரையானஆரம்பப் பள்ளி நாட்கள் பெரும்பாலும் விளையாட்டோடு கலந்த நாட்களாகவே அமைந்தது. 

அதன் பின் தூத்துக்குடி மில்லர்புரத்தில் இருக்கும் St.Mary's Boys Hr.Sec.Schoolலில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான பள்ளி நாட்கள் இன்னமும் பசுமை மாறாமல் என் மனதில் நிறைந்துள்ளது. துள்ளித் திரியும் பயமறியா இளங்கன்றுகளுக்கு அறிவூட்டி அவை செல்ல வேண்டிய பாதைகளில் கரடுமுரடான கற்களை லாவகமாக கடந்து செல்வதெப்படி என்று புரிய வைப்பது போன்ற கடினமாக பணியை தான் எங்கள் பள்ளிஆசிரியர்கள் நற்கடமையென செய்து வந்திருக்கிறார்கள். அறிவுரைகளாகவும், அனுபவங்களை பகிர்ந்தும், மாணவர்களின் மனவோட்டத்தை அறிந்து கொண்டு அவர்கள் வழியிலேயே சென்று புரிந்து கொள்ள வைத்தும், நிறைய கண்டிப்புகளாளும், சில சமயம் தண்டனைகளாளும் எங்களை ஒரு வழிக்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர்கள் எங்கள் பள்ளி ஆசிரியர்கள். ஆசிரியர் தினமான இன்று St.Mary's Boys Hr.Sec.Schoolலில் எனக்கு பாடங்கள் சொல்லி தந்து அறிவூட்டிய ஆசிரியர்களை நினைத்து பார்த்து மரியாதை செய்யும் விதமாக இப்பதிவை எழுதுகிறேன்.

VI - A பிரிவு - 1987 - 88 :-
ஆங்கிலம் மற்றும் கணிதம் (வகுப்பாசிரியர்) - திரு.பிச்சையா அவர்கள்
தமிழ் - திரு.ட்ருமேன் அவர்கள்
அறிவியல் - நாங்கள் இவரை சயின்ஸ் சார் என்று அழைத்து பழக்கப் பட்டதனால் பெயர் ஞாபகம் இல்லை.
சமூக அறிவியல் - திரு. ரெக்ஸ் அமர்தராஜ் அவர்கள்


VII - A பிரிவு - 1988 - 89:-
ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் (வகுப்பாசிரியர்) - திரு. ரெக்ஸ் அமர்தராஜ் அவர்கள்
தமிழ் - திரு. ஜார்ஜ் அவர்கள்
கணிதம் - திரு.ஜெயராஜ் அவர்கள்
அறிவியல் - திரு.சேவியர் இம்மானுவேல் அவர்கள்

VIII - A பிரிவு - 1989 - 90:-
ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் (வகுப்பாசிரியர்) - திரு. ரெக்ஸ் அமர்தராஜ் அவர்கள்
தமிழ் - திரு. ஜார்ஜ் பீட்டர் அவர்கள்
கணிதம் - திரு.செபஸ்டின் அவர்கள்
அறிவியல் - திரு. அந்தோனி பிச்சை அவர்கள்

IX - A பிரிவு - 1990 - 91:-
ஆங்கிலம் (வகுப்பாசிரியர்) - திரு. அருள் பிரகாசம் அவர்கள் (தலைமை ஆசிரியர்)
தமிழ் - புலவர் ராமச்சந்திரன் அவர்கள்
கணிதம் - திரு.ஜோசப் ராஜ் அவர்கள்
அறிவியல் - திரு. சின்னதுரை அவர்கள்
சமூக அறிவியல் - ஞாபகம் இல்லை

X - A பிரிவு - 1991 - 92:-
ஆங்கிலம் மற்றும் கணிதம்(வகுப்பாசிரியர்) - திரு.ஜோசப் ராஜ் அவர்கள்
தமிழ் - திரு. அல்போன்ஸ் வணக்கம் அவர்கள்
அறிவியல் - திரு. சின்னதுரை அவர்கள்
சமூக அறிவியல் - திரு.தியாகராஜன் அவர்கள்

XI (1992 - 93) மற்றும் XII (1993 - 94) - A பிரிவு :-
இயற்பியல் (வகுப்பாசிரியர்)- திரு. பாலசுப்ரமணியன் அவர்கள்
வேதியியல் - திரு. ஸ்டிபன் அவர்கள்
கணிதம் - திரு. ஜெயபாலன் அவர்கள்
உயிரியல் - திரு.சேவியர் இக்னேசியஸ் அவர்கள்
தமிழ் - திரு. அல்போன்ஸ் வணக்கம் அவர்கள்
ஆங்கிலம் - ஞாபகம் இல்லை

சில வகுப்பு ஆசிரியர்களின் பெயர்கள் ஞாபத்தில் இல்லை, என்னோடு இந்த வகுப்புகளில் படித்த நண்பர்கள் யாருக்காவது அந்த ஆசிரியர்களின் பெயர்கள் ஞாபகத்தில் இருந்தால் தெரியப்படுத்தவும். 

6 முதல் 12ஆம் வகுப்பு வரை வெவ்வேறான ஆசிரியர்கள்களிடம் பயின்றிருந்தாலும், சில ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை மற்றும் அவர்களின் குணாதியங்கள் காரணமாக அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தின் மேல் நமக்கு அதிக ஈர்ப்பு மற்றும் ஆர்வம் ஏற்படுவதுண்டும். சில சமயங்களில் அந்த தாக்கம் நம்முள் எப்போதுமே இருப்பதுண்டு. அந்த வகையில் நான் சொல்ல வேண்டுமானால், இரண்டு ஆசிரியர்களை சொல்வேன். எனக்கும் 9 ஆம் வகுப்பில் தமிழ் வகுப்பெடுத்த புலவர் ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் 10 ஆம் வகுப்பில் கணித வகுப்பெடுத்த திரு.ஜோசப் ராஜ் அவர்கள்.

புலவர் ராமச்சந்திரன் அவர்களின் கணீரென்ற குரலும், பாடங்களுக்கு இலக்கிய தேன் கலந்து சொல்லும் விளக்க உரையும் எங்களின் கவனம் வேறெங்கும் சிதராமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும். அவர் பாடம் நடத்துகிறார் என்றால் அமைதியாக கவனிப்போம். இலக்கிய கருத்துகளை எங்களின் ரசனைக்கேற்றவாறு சொல்லும் போது மேசையை தட்டி உற்சாகப்பட்டுக் கொள்வதுண்டு. எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, ஒரு முறை சிலப்பதிகாரம் பாடம் நடத்தும் போது அவரின் கணீரென்ற குரலால் " தேரா மன்னா செப்புவ துடையேன் " என்று சொன்ன போது பக்கத்து வகுப்பு கூட அமைதியானது. அவர் வகுப்பில் படித்ததனால் தான் எனக்கு இன்றும் தமிழ் இலக்கியத்தின் மேல் ஆர்வம் குறையாமல் இருக்கிறது.

ஒன்பதாம் வகுப்பு வரை கணிதம் என்றால் கடினமாகத் தான் இருக்கும் என்ற எனது நிலைப்பாட்டை மாற்றியவர், பத்தாம் வகுப்பில் கணித வகுப்பெடுத்த திரு.ஜோசப் ராஜ் அவர்கள். ஒரு பாடம் நடத்தினால் அந்த பாடம் எல்லா மாணவருக்கும் புரிகிறது என்று தெரிந்த பின்னர் தான் அடுத்த பாடத்திற்கு செல்வார். ஒவ்வொருவரையும் போர்டில் வந்து கணக்கு போட வைப்பார். வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் ஒவ்வொரு செல்ல பெயர் வைத்து விடுவார். வாரந்தோறும் வகுப்பு தேர்வு நடத்துவார். தவறாக செய்துவிட்டால் செல்லப் பெயர் சொல்லி திட்டி விடுவார், பின்பு மற்றொரு முறை சொல்லிக் கொடுப்பார். நானும் அவரிடம் திட்டு வாங்கி திட்டு வாங்கியே தான் என்னுடைய கணித அறிவை வளர்த்துக் கொண்டேன். 9ம் வகுப்பு வரை கணிதத்தில் 50 மதிப்பெண்னை தாண்டாத என்னையும் அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 94 மதிப்பெண் எடுக்க வைத்த பெருமை அவரையே சேரும். மேலும், என் வகுப்பு தோழன் வாஞ்சீஸ்வரன் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து எங்கள் மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கள் வகுப்பாசிரியர் திரு.ஜோசப் ராஜ் அவர்களுக்கும் எங்கள் பள்ளிக்கும் பெருமை சேர்த்த விஷயமாக அமைந்தது.

இந்த ஆசிரியர் தினத்தில் எனக்கு அறிவமுதூட்டிய ஆசான்களை நினைத்து பார்த்து மரியாதை செய்கிறேன்.

                                                                                                 - மே.இசக்கிமுத்து..

வியாழன், ஆகஸ்ட் 21, 2014

என்னுள் நனைந்த மழை துளிகள்!


ருப்பட்டி கடுங்காப்பி,
கையில் கொஞ்சம் பொரிகடலை,
தூறல் மழையின் மண் வாசம்,
திண்னையில் தெறித்த மழை துளிகள்,
நினைக்க மறந்த வேளையிலே
நனைத்தது கொஞ்சம்!

வழிந்தோடும் மழைவெள்ளம்,
வரிசையாய் நீர்க்குமிழிகள்,
ஒன்றோடு மற்றொன்று 
உரசிச் சென்று உடையுமது,
பத்தா பதினொன்றா ?
முதலிலிருந்து தொடங்கும் 
மீண்டும் அந்த எண்ணிக்கை!

மழை ஓய்ந்து கூரையில்
வழிந்து வரும் நீர் துளிகள்,
உள்ளங்கையை ஏந்தினேன்,
உற்சாகமாய் தெறித்தங்கு
ஆஹா...
என்னுள் நனைந்த மழை துளிகள்!

                               - மே.இசக்கிமுத்து

செவ்வாய், ஜூலை 15, 2014

காக்கை


வாடாச்சி மர உச்சியில்
கூட்டிலிருந்த குஞ்சுகள்
காற்றடி காலத்து கிளையசைவில்
கலவரப்பட்டு கரைந்தபோது
சென்றிருந்த தாய் காகம் 
படபடத்து மூச்சிரைக்க
முட்டி மோதி முன்னே 
வந்து நிறகும்!

துணிவு கொண்ட பிஞ்சு ரெண்டும்
தத்தித் தாவி தனியே 
இறக்கையடித்து பறந்து பழகி
கிளையினில் மீண்டும் 
வந்துமரும்!

கருவேல முற்கள் கூடு
காற்று கொண்டு சென்றதன்று,
கூடிருந்த கொப்பை மட்டும்
வளர்ந்து விட்ட காக்கை ரெண்டும்
வந்து வந்து பார்த்துச் செல்லும்!

உயிர் காக்க இரை தேடி
ஊர் முழுக்க பறந்து சென்று
உறவுவென்ற மற்றொன்றை
மறந்து சென்றதொரு காக்கை!
தணியாத கடலலையாய்
தவிப்பாய் திரிந்தது மற்றொன்று!

இன்றும் கூட,
மொட்டை மர உச்சியில்
தன் கூடிருந்த கொப்பில் 
கொஞ்ச நேரம் வந்தமர்ந்து
கரையாத நினைவுகளில்
நிதமும் கரைந்து விட்டு போகும்
அந்த காக்கை!

                                  - மே.இசக்கிமுத்து..

புதன், ஜூலை 09, 2014

பார்த்திபன் கனவு


ரண்டு வாரத்திற்கு முன்னால் படிக்க அரம்பித்த கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு, வரலாற்று புதினத்தை நேற்று இரவு தான் படித்து முடித்தேன். 

பொதுவாகவே ஒரு புதினத்தை வாசிக்கும் போது கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கற்பனை உருவம் கொடுத்து என் மனதினில் நிறுத்தி கதை களத்தினூடே அவர்களுடன் பயணிப்பேன். வாசித்து முடித்த பின்பு அந்த கதையின் தாக்கம் கொஞ்சம் நேரம் என் மனதினில் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் பார்த்திபன் கனவு புதினத்தை வாசிக்கும் போது என்னை அறியாமலேயே கதை மாந்தர்களுடன் உணர்ச்சிமிகுந்த ஒரு உறவாடல் ஏற்பட்டிருப்பதை வாசித்து முடிக்கும் போது தான் தெரிந்தது. வாசகர்களை வசியப்படுத்தும் கல்கி அவர்களின் எழுத்தின் ஆற்றலும் சரித்திரத்தில் உள்ள பாத்திரங்களையும் சம்பவங்களையும் நேர்த்தியாக புதினத்தில் புகுத்தியிருக்கும் விதமும் தான் இதற்கு முக்கிய காரணங்கள். 

பள்ளியில் வரலாற்றுப் புத்தகத்தில் நான் படித்த சோழர்கள், நரசிம்மவர்ம பல்லவர், புலிகேசி, பரஞ்சோதியார் மற்றும் சீன யாத்திரிகர் யுவான் சுவாங் போன்றோர் கதை மாந்தர்களாகவும் அவர்களை பற்றிய வரலாற்று குறிப்புகளுடன் சம்பவங்களும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. தன் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசராகிய பார்த்திப சோழன் போரில் இறக்கும் போது அவருக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற சிவனடியாராகவும் பல்லவ நாட்டு தலைமை ஒற்றனாகவும் வேடமிட்டு சோழ இளவரசர் விக்கிரமன் சுதந்திர சோழ நாட்டு அரசனாக உருவாக உதவிகள் செய்யும் போது, பாரத தேசத்தின் பெரும் பகுதிக்கு பேரரசனாக இருந்த நரசிம்மவர்ம பல்லவனின் உயர்நத குணம் யாருக்கு தான் வரும். 

சோழ அரசின் நம்பிக்கைக்குறிய விசுவாசியாக வரும் படகோட்டி பொன்னனும் அவன் மனைவி வள்ளியும் கதை முழுக்க வருகிறார்கள். இளவரசர் விக்கிரமனை பல இடங்களில் காப்பாத்தும் போதும், சோழ மகாராணி அருள்மொழி தேவியின் பொறுப்பு பற்றி எடுத்துரைக்கும் போதும், சோழ இளவரசர் விக்கிரமனை பல்லவ இளவரசி குந்தவியிடன் சேர்க்க மேற்கொள்ளும் காரியங்களிலும் படகோட்டி பொன்னன் நெஞ்சில் நிற்கிறான். 

இரண்டு வார காலம் சோழ நாட்டு பிரஜையாக உறையூரிலும், பல்லவ சக்ரவர்த்தியின் மாமல்லபுரத்திலும் சுற்றி வந்த உணர்வு இன்னமும் என்னுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

                                                                                                            - மே.இசக்கிமுத்து..

புதன், ஜூன் 11, 2014

பூவரச வாசம்!


வீட்டிற்கு விலாசமென
பூவரச மரங்கள் ரெண்டு
பூரிப்பாய் நின்றதங்கு!

மரத்தடியில் கோயில் கட்டி
மத்தியானம் கொடை நடத்தி
பூவரசம் மாலை சாத்தி
இலையில் செய்த பீப்பீ சத்தம்
இன்னும் இங்கே கேட்கிறதே!

மொட்டில் செய்த பம்பரத்தை
முதலில் யார் விடுவதென்று
போட்டியோடு சண்டையும்
சேர்நதங்கு நடப்பதுண்டு!

பருக்களின் வடுகள் கொண்ட 
மரக்கிளை தொங்கி
குரங்குகளாய் குதித்து
கும்மாளமாம் கும்மாளம்!

பருவப் பெண்களின்
பளிச்சென முகங்களாய்
இலைகளின் நடுவே 
வண்டுகளுக்காக வட்டமிடும் 
மஞ்சள் பூசிய பூக்கள்!

பொசுக்கி விடும் வெயிலில்
நின்று செல்ல நிழல் கொடுத்து
வீதியில் செல்வோரிடமும்
விவரங்கள் கேட்டுக் கொள்ளும்!

அன்றொரு நாள்,
தென்னங் கிடுகு வேலி
செங்கல் சுவர் ஆனபோது
வேலியோரம் நின்றிருந்த 
பூவசர மரங்கள் ரெண்டும்
வேரறுக்கப் பட்டு
வெறுந்தரையில் கிடந்ததங்கு!

கருக்கல் ஆனதும் வந்தமரும்
காக்கைகள் தேடி அலையுமே!
அங்குமிங்கும் துள்ளியோடும்
அணில் குஞ்சிகள்
இனியெங்கு போகும்!
கோடாரியால் வெட்டும் போது
ஓங்கி நின்ற இரு மரங்கள்
ஓவென்று அழுதிருக்கும்!

விளையாடி சிரித்திருந்த பூவரசு
விறகாய் கிடந்ததங்கு!
பூக்களின் வாசம் மட்டும் - என்
நினைவுகளில் நின்று கொண்டு
காற்றடி காலங்களில் - என்
கைபிடித்து நடக்கிறது !

                   - மே.இசக்கிமுத்து

செவ்வாய், மே 06, 2014

அம்மிக்கல்லும் ஆட்டு உரலும் !


ஞாயிற்று கிழமைகளில் அம்மா மசாலா அரைப்பதற்காக அஞ்சறை பெட்டியிலிருந்து சீரகம், வெந்தயம், பெருங்காயம், மஞ்சள், மிளகு எடுத்துக்கொண்டிருக்கும் போதே நான் அருகே சென்று உட்கார்ந்து விடுவேன். அம்மியில் மசாலா அரைக்கும் போது அதன் அருகிலிருக்கும் கல்லில் நான் உட்கார்ந்து கொண்டு அம்மா எப்போது தேங்காய் அரைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். "இந்த வெங்காயத்தை உரித்து கொடு" என்று சொன்னவுடன், "எனக்கு கொஞ்சம் தேங்காய் தருவியா?" என்று அம்மா சரி என்று சொல்லும் வரை காத்திருப்பேன். "சரி சீக்கிரம் வெங்காயாம் உரிச்சி கொடு" என்று சொன்ன பிறகு தான் வெங்காயம் உரிக்க ஆரம்பிப்பேன். தேங்காய் சில்லை அம்மியில் எடுத்து வைக்கும் போதே, "எனக்கு கொஞ்சம் " என்று கேட்டு வாங்கிவிடுவேன். சில சமயம் அம்மா சின்னதாக கையால் பிய்த்து தரும் போது, "இன்னும் கொஞ்சம் தாம்மா" என்பேன். "ரெண்டு சில் தேங்காய்ல உனக்கே பெரிசா தந்துட்டா கொழம்புக்கு கானாது" என்று சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவிடமிருந்து இன்னொரு சிறிய தேங்காய் துண்டு என் கைக்கு வந்து விடும். அம்மியில் மசாலா அரைத்து முடித்து, அம்மி மற்றும் குழவியிலிருக்கும் மசாலாவை வளித்து தட்டில் வைக்கும் வரை அருகிலேயே இருந்து கவனிப்பது எனது வழக்கமாகயிருந்தது. விளையாடும் போது சில சமயம் அம்மி மேல உட்கார்ந்து இருப்பதை பார்த்து விட்டால் "அம்மி மேல உட்காராதே உட்காராதேனு எத்தனை தடவை சொல்ல, நீனே ஒல்லியா இருக்க, அம்மி மேல உட்கார்ந்த உடம்பு தேஞ்சி போயிடும்" என்று பல தடவை திட்டு வாங்கியதுண்டு.

எங்கள் வீட்டின் திண்னையில் ஆட்டு உரல் ஒன்றும் உண்டு. அப்போதெல்லாம் வாரத்தில் ஒரு நாள் தான் இட்லி - தோசைக்கு மாவு ஆட்டுவார்கள். அதுவும் வெள்ளி கிழமை காலையில் இட்லி அல்லது தோசை கண்டிப்பாக உண்டு. அதற்கு சனி கிழமை சாயந்திரம் ஆட்டு உரலில் மாவு அரைத்து வைக்க வேண்டும். மாவு அரைக்கும் போதும் சில சமயங்களில் அருகே உட்கார்ந்து விடுவேன். முதலில் உழுந்து அரைத்து கொண்டிருக்கும் போதே ஆரம்பித்து விடுவேன், உள்ளங்கையை நீட்டி மாவு கேட்கும் போது, "உழுந்தெல்லாம் திங்க கூடாது, காது கேக்காம போயிரும்" என்ற அம்மாவிடம் "அப்ப அரிசி மாவு தரனும்" என்று முதலிலேயே சொல்லி வைத்து விடுவேன். அரிசி மாவு அரைய கொஞ்சம் நேரம் ஆகும் என்பதால், பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டே இடையிடையில் அரசி அரைபட்டுவிட்டதா என்று உரல் அருகே வந்து பார்த்து கொள்வேன். ஒரு வேளை அம்மா மாவு அரைத்து முடித்துவிட்டால்? மாவு அரைந்து கொண்டிருக்கும்போதே, உரலில் இருந்து எடுத்து என் உள்ளங்கையில் அம்மா தரும் அந்து மாவை ருசித்து சாப்பிடுவதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு. அரைத்து முடித்து பாத்திரத்தில் எடுத்து வைத்த மாவை கொடுத்தாலும் வாங்க மாட்டேன், எனோ அது எனக்கு பிடிக்காமல் போயிருந்தது. வெள்ளி கிழமை வந்தாலே ஒருவித ஆனந்தம் காலையிலேயே என் மனதிற்குள் வந்து விடும், இட்லி கிடைக்குமே. அம்மா தேங்காயை அம்மியில் அரைக்கும் போதே, "வயிறு பசிக்குதம்மா, இட்லி ரெடியா" என்று சொல்ல ஆரம்பித்து விடுவேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, "அம்மா, இன்னிக்கு மதியத்துக்கும் ஸ்கூலுக்கு இட்லி வைம்மா, மூனு போதும்" என்று டிப்பன் பாக்ஸில் இட்டிலியை எடுத்து கொள்வேன். மதியம் பள்ளியில் சாப்பிடும் போது "இன்னிக்கு எங்க வீட்ல இட்லிடா" என்றவாறு சாப்பிடுவேன். இட்லி மற்றும் தோசையென்றால் சாப்பிடும் போது உள்ளத்தில் ஒரு விதமான உற்சாக ஊற்று உதித்து விடும். 

ஆட்டு உரல் தேய்ந்திருந்தால் அரிசி நன்றாக அரைபடாது, அம்மி கொத்துபவரை கூப்பிட்டு கொத்த வைப்போம். அம்மியை கொத்தும் போது அதன் நடுவில் பூ அல்லது கட்டம் போன்று டிசைனாக கொத்தி விடுவார்.அவர் சிறு உளியை வைத்து கவனமாகவும் நேர்த்தியாகவும் கொத்துவதை ஆர்வத்தோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டிருப்பேன். கொத்தி முடித்த பின் "ம்ம் டிசைன் நல்லாருக்கா.." என்று கேட்கும் போது சிரித்துக் கொள்வேன். ஓரு சிறு வேலை என்றாலும் அந்த வேலையில் முழு ஈடுபாடும், திருப்தியாக செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வேலை செய்வது ஒரு பெரிய விஷயம் தான். டேபில் டாப் கிரைண்டரும், மிக்சியும் வீடுகளில் வந்தவுடன், அம்மிக்கும் ஆட்டு உரலுக்கு கிடைத்து வந்த முக்கியத்துவம் முற்றிலுமாக குறையத் தொடங்கியது. அம்மியும் ஆட்டு உரலும் பராமரிப்பு இன்றி முற்றத்தின் ஓரத்தில் போடப்பட்டது, சில வீடுகளில் பழைய சாமான்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டது. இப்போதெல்லாம் அம்மியை திருமண விழாக்களில் அம்மி மதித்தல் சடங்கின் போது வைக்கப்படும் சம்பிரதாயப் பொருளாக தான் பார்க்கப்படுகிறது. 

எங்கள் வீட்டின் ஓரத்திலே பயன்பாடின்றி கிடக்கும் அம்மியை பார்க்கும் போதெல்லாம் ஆழ்மனதில் அது ஏதோ ஒன்றைச் சொல்ல வருவதாய் உணர்கிறேன்..


                                                                                                                  -மே.இசக்கிமுத்து..

புதன், ஏப்ரல் 30, 2014

ஒரு "Smiley" யாவது அனுப்புவாயா?



டபட வார்த்தைகளும்,
பதறாக பேச்சுகளும்,
சிலிர்க்க வைத்த கேள்விகளும்,
சின்னதாய் சிரிப்புகளும்,
முடிவில்லா விவாதங்களில்
முந்த துடித்த பொழுதுகளும்,
சின்னதான சீண்டல்களில்
பேச மறத்த உதடுகளும்,
பேச துடித்த பார்வைகளும்,

இணையம் இல்லா காலங்களில்
இணைந்திருந்த எண்ணங்களும்,
கேலியோடும் கிண்டலோடும்
உலா வந்த உறவுகளும்,
நட்பெனும் வட்டத்தில் 
வலம் வந்த நாட்களும்,

நினைவில் வந்து நிற்கிறதே
ஆன் லைனில்
ஒரு "Smiley" யாவது அனுப்புவாயென
காத்திருக்கும் வேளையிலே!

                                              - மே.இசக்கிமுத்து

வெள்ளி, மார்ச் 21, 2014

காமிக்ஸ் உலகம் !


ர்ம வேட்டை, அழகியை தேடி, ஜனாதிபதி கொலை, வல்லவனுக்கு வல்லவன், ரத்த காட்டேரி... இந்த பெயர்களையெல்லாம் வாசிக்கும் போது ஏதோ தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஆங்கில திரைப்படங்களின் பெயர்கள் போல இருக்கிறதல்லவா? இருக்கலாம், ஆனால் 1985-90களில் இந்த பெயர்கள் எல்லாம் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவையெல்லாம் 1985-90களில் வெளிவந்த காமிக்ஸ் கதைகளின் தலைப்புகள். 

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான் காமிக்ஸ் புத்தகங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. வகுப்பு தோழன் வாஞ்சீஸ்வரனிடம் நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன. அதை வைத்து அவன் ஒரு மினி நூலகமே எங்கள் வகுப்பில் நடத்தி வந்தான். ஆசிரியர் வராத வகுப்புகளில் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த மாணவர்கள் மத்தியில் நாங்கள், அதாவது நான், வாஞ்சீஸ்வரன், ப்ராங்கோ, ராம்குமார், கண்ணன் மற்றும் சிலர் பாட புத்தகங்களுக்கு நடுவில் காமிக்ஸ் புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருப்போம். இப்போதிருக்கின்ற தனியார் தெலைக்காட்சி சேனல்கள், கேபிள் டிவி வசதிகள் வராமல் இருந்த நேரத்தில் முதன் முதலாக காமிக்ஸ் படக்கதை புத்தகங்களை வாசித்த போது தன்னை மறந்து அந்த காமிக்ஸ் கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடுகிற ஒரு உணர்வு இருக்கிறதே, படித்து முடிக்கும் வரை வேறு உலகத்திற்கே சென்று வந்த மகிழ்ச்சியை, அந்த அனுபவத்தை என்னவென்று சொல்வது. 

முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மற்றும் ராணி காமிக்ஸ் மிகவும் பிரபலம். ஒவ்வொன்றும் தனக்கென ஒரு முத்திரை பதித்து போட்டி போட்டுக் கொண்டு மாதந்தோறும் புது புது கதைகளை வெளியிடும். 25 பைசா, 50 பைசா என அப்பா தரும் சில்லரைகளை சேர்த்து வைத்து மாதந்தோறும் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிவிடுவேன். எங்கள் வீட்டிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளி சிவந்தா குளம் ரோட்டில் உள்ள சந்தியில் ஒரு கடையில் தான் புத்தகங்கள் வாங்குவேன். பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதெல்லாம் வழியில் புத்தக கடையில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகங்களிடையே ஏதேனும் புதிய காமிக்ஸ் புத்தகம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வருவதுண்டு. 

முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் கிடைப்பதே ரொம்ப கடினம். எப்போதாவது தான் வரும் ஆனால் வந்த உடனேயே விற்று தீர்ந்து விடும், அந்த அளவிற்கு லயனுக்கும் முத்துவிற்கும் நிறைய வாசகர்கள். அதனால் டிமாண்ட் அதிகம். அதன் விலை ரூ 1.50, ரூ 2.00 மற்றும் ரூ 3.00 என கதையின் நீளம் மற்றும் பக்கத்திற்கு ஏற்றவாறு விலை இருக்கும். மே மாத்தில் கோடை மலரும் தீபாவளி நேரத்தில் தீபாவளி மலரும் வெளியிடுவார்கள். அதன் விலையோ ரூ 5.00 முதல் ரூ 7.00 வரை இருக்கும். அது பற்றிய விளம்பரங்கள் இரண்டு மாதங்களுக்கு முந்தைய இதழ்களிலிருந்தே வர தொடங்கிவிடும், வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆசையும் கூடவே வந்துவிடும். இரும்புக் கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரக் மற்றும் கவ்பாய் போன்ற கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை.

ராணி காமிக்ஸ், பிரபலமான தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவந்த இதழ். மாதமிருமுறையாக 1ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் டானென்று கடைகளில் வந்து விடும். பள பளப்பான வளு வளு அட்டைப் படம் இதன் தனிச் சிறப்பு. ரூ 1.50க்கு ராணி காமிக்ஸ் தரமான தாளில் தந்தனர். பின் இதன் விலை ரூ 2.00 ஆனது. முகமூடி வீரர் மாயாவி, ராயன், ஜேம்ஸ் பாண்ட் 007, ஆசாத், மாடஸ்தி பிளைசி, மற்றும் தில்லான் போன்றோர் ராணி காமிக்ஸின் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு இதழிழும் ஏதேனும் ஒரு போட்டி அறிவிப்பு நிச்சயம் இருக்கும். இதன் கடைசி பக்கத்தில் அடுத்த இதழுக்கான கதையின் தலைப்பு படத்தோடு போட்டிருப்பார்கள். ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் ஆகியவற்றில் வரும் கதைகளெல்லாம் வெளிநாட்டுஆங்கில காமிக்ஸ்களின் தமிழ் பதிப்பாக இருந்தாலும் விறுவிறுப்பு மற்றும் சுவாரசியத்திற்கு பஞ்சமிருக்காது. 

நிறைய புத்தகங்களை படிக்க தூண்டியதே இந்த காமிக்ஸ் கதை புத்தகங்ளின் மூலம் கிடைத்த வாசிப்பு அனுபவமும் ஆர்வமும் தான் என்பதில் மாற்று கருத்தே கிடையாது. புத்தகங்களின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியதர்கான முதல் காரணியாக இருந்ததே இந்த காமிக்ஸ் புத்தகங்கள் தான். இன்றும் பழைய புத்தக கடையில் மற்றும் வேறு எங்கேயாவது தமிழ் காமிக்ஸ் புத்தகத்தை பார்க்க நேர்ந்தால் இந்த பசுமையான நினைவுகளில் மூழ்கிவிடுகிறது மனசு. அது ஒரு காமிக்ஸ் உலகம்.

மே.இசக்கிமுத்து..

வியாழன், மார்ச் 13, 2014

அறிவிலியாய் இருந்து விடு!


ரியெனப் பட்டதை
சட்டெனச் சொல்லி
புரிய வைத்த முயற்சிகளெல்லாம்
மலரினை மறைத்து
முற்களை பறித்த காயங்களாய்
ஆறிட அடம்பிடித்துக் கொண்டிருந்த போது,

பட்டுணர்ந்த ஞானமொன்று
நெஞ்சினுள்ளமர்ந்து சொன்னதின்று,
அறிவிலியாய் இருந்து கொண்டு
ஆமாம் சரியென்றும்
தவறென்று தெரிந்தாலும்
தலையாட்டி வைத்து விடு!

மகிழ்ச்சியில் முகமும்
மலர்ந்திடும் மலராய்!
உறவினர் நண்பர்கள் ஊரார்
உறவினில் விசனங்கள் தவிர்த்திட
சமயத்தில்
அறிவிலியாய் இருப்பதில்
ஆதங்கம் தேவையில்லை!

சிரித்துக் கொண்டே
புரிந்து கொண்டேன்,
அறிவிலியாய் இருப்பதற்கும்
ஞானமொன்று வேண்டுமென்று!

                                  -மே.இசக்கிமுத்து