வியாழன், மார்ச் 13, 2014

அறிவிலியாய் இருந்து விடு!


சரியெனப் பட்டதை
சட்டெனச் சொல்லி
புரிய வைத்த முயற்சிகளெல்லாம்
மலரினை மறைத்து
முற்களை பறித்த காயங்களாய்
ஆறிட அடம்பிடித்துக் கொண்டிருந்த போது,

பட்டுணர்ந்த ஞானமொன்று
நெஞ்சினுள்ளமர்ந்து சொன்னதின்று,
அறிவிலியாய் இருந்து கொண்டு
ஆமாம் சரியென்றும்
தவறென்று தெரிந்தாலும்
தலையாட்டி வைத்து விடு!

மகிழ்ச்சியில் முகமும்
மலர்ந்திடும் மலராய்!
உறவினர் நண்பர்கள் ஊரார்
உறவினில் விசனங்கள் தவிர்த்திட
சமயத்தில்
அறிவிலியாய் இருப்பதில்
ஆதங்கம் தேவையில்லை!

சிரித்துக் கொண்டே
புரிந்து கொண்டேன்,
அறிவிலியாய் இருப்பதற்கும்
ஞானமொன்று வேண்டுமென்று!

                                  -மே.இசக்கிமுத்து

திங்கள், டிசம்பர் 09, 2013

முற்றம் கொண்ட வீடு வேண்டும்..

முற்றத்தில் பாய் விரித்து
முதலில் வந்து படுத்திருப்பாய்,
கால் மேலே கால் போட்டு
கையிரண்டை தலையில் வைத்து
நிலவு என்னை அழைத்திடுவாய்!

அன்றாட நிகழ்வுகளை
அலுப்புடனே சொல்லிடுவாய்
சரியா தவறா என்று நான்
யோசிக்கும் முன்பே - நீ
சரியென்றும் அது தவறென்றும்
தலையாட்டி சொல்லிடுவாய்!

ஏதேதோ வார்த்தைகளை
ஏற்ற இறக்கத்தோடு
எப்படியிருக்கு இது
அருமை அருமையென
ஆனந்த சிரிப்பொலி!

கவிதையென காகிதத்தில்
கருப்பு மையால் எழுதுமுன்னே - நீ
கழித்து போட்ட வார்த்தைகளை
கவனமாய் சேகரிப்பேன்
இன்னொரு கவிதை!

நீ முணுமுணுத்த
பாடல் வரிகளையெல்லாம்
பள்ளி பிள்ளையாய்
பாடி திரிகிறேன் நான்!

இப்போதெல்லாம்,
நீ எங்கெங்கு சென்றாலும்
தொடர்கிறேன் நான்,
முன்பு போல பேச வேண்டும்,
முற்றம் கொண்ட வீடு வேண்டும்!

                                                   -மே.இசக்கிமுத்து

வெள்ளி, அக்டோபர் 25, 2013

பட்டுப் பூச்சி

மழைக் காலம் தொடங்கிவிட்டது, மழைக் காலம் என்றாலே என் மனதிற்குள் வந்து நிற்பது பட்டுப் பூச்சி தான். இதனை வெல்வெட் பூச்சி என்றும் கூறுவார்கள். இரவு நேரத்தில் மழை பெய்ததென்றால் காலையில் மணல்வெளிகளிலும் அதனை சுற்றியுள்ள புல்வெளிகளிலும் சின்ன சின்னதாய் சிவப்பு நிறத்தில் பளபளவென்று சென்று கொண்டிருக்கும் இந்த பட்டுப் பூச்சிகள். மழைக் காலங்களில் இந்த பட்டுப் பூச்சிகளை பார்க்கும் போதெல்லாம் எனது ஆரம்பப் பள்ளி பருவ நாட்கள் தான் பட்டென நினைவுக்கு வரும். 

எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு மைதானம் போன்ற இடம் உண்டு, மழைக் காலங்களில் மதிய உணவு வேளையில் சாப்பிட்ட பின்பு இந்த மைதானத்திற்கு சென்று பட்டுப் பூச்சி தேடி பிடித்து அதை பென்சில் டப்டாவில் வைத்து வீீட்டிற்கு எடுத்து செல்வதுண்டு. விடுமுறை நாட்களென்றால் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தேரியில் பட்டுப் பூச்சி தேடி பிடிப்போம். யார் அதிகமாக பிடிக்கிறார்கள் என்று நண்பர்களுக்குள் ஒரு போட்டியே உண்டு. ஒன்று அல்லது இரண்டு கிடைத்தால் காலி தீப்பெட்டியிலும், நிறைய வைத்திருப்பவர்கள் பெரிய டப்பாவில் வைத்து வளர்ப்போம். அதற்கு இரையாக அருகம் புள்ளை பொட்டு வைப்போம். தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பட்டுப் பூச்சி என்ன செய்கிறது என்றும் குட்டியிட்டிருக்கிறதா என்றும் பார்ப்பதுண்டு. அதன் செய்கைகளை நண்பர்களிடம் பெருமையாக பேசிக்கொள்வோம். சின்னது, பெரியது மற்றும் குட்டிகள் என பார்த்து ரசித்து கொண்டே இருந்த நாட்கள் நினைவலைகளாய் இன்றும் மனதை நனைத்துக் கொண்டு தான் இருக்கிறது.. 

                                                                                                                          - மே. இசக்கிமுத்து..