திங்கள், டிசம்பர் 17, 2012

அழியப் போகிறதாம்...

உலகம் அழியப் போகிறதாம்,
உறக்கத்தின் உலறல்களாய்
உலகெங்கும் இவ்வாண்டே இறுதியென்று
இங்கும் எங்கும் ஒரே பேச்சு!


பிறர் மேல் பழி போட்டு
பழகிவிட்ட மனதனே, உன்னால் தான்
பூமியாகிய நான் கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து கொண்டிருப்பதை
அறியாதது ஏனோ?


மரம் நின்ற இடத்திலெல்லாம்
வானுயர்ந்த மனைகள் செய்தாய்,
வானம் பொய்த்த பின்னர்
வாடிய முகத்தோடு மழை வேண்டி
ஆடு கோழி படையலிட்டு
அக்கறையாய் பூஜை செய்தாய்!


அன்பெனும் மந்திரம் இருக்கும் போது
ஆயுதத்தால் தந்திரம் செய்தாய்!
அடக்கி ஆளும் போர் குணத்தால்
அனு ஆயுத சோதனை பல முறை..
ஐயோவென்று அழுதிருக்கிறேன்
வலியினால் அல்ல,
வளங்களெல்லாம் அழிய போகிறதே - மக்கள்
வாழ்வு மாயப்போகிறதேயென்று!


நிதம் நிதம்
நேரமில்லை நேரமில்லையென்று
துரித உணவிற்கு மாறிவிட்டாய்,
தூக்கி வீசப்பட்ட காகிதங்களை
ஜீரணிக்க இயலாமல்
மக்காத குப்பைகளாலும்
இரசாயன கழிவுகளாலும்
ரணமாகி விட்டதடா என்னுடல்!


உச்சி முதல் பாதம் வரை
உஷ்ணத்தால் தவிக்கிறேனே,
சில நேரம்
தாங்க முடியாமல் தள்ளாடியிருக்கிறேன்.
கொஞ்சம் கொஞசமாய் காயப்படுத்துகின்றாய்,
தஞ்சமென வந்த உயிர்களை மறந்து
கோபத்தால் குலுங்கியிருக்கிறேன்,
கண்ணில் நீர்குளம் வழிந்தோட!


பூமித் தாய் என்கிறாய்,
பொறுமைக்கு இலக்கணமென்கிறாய்,
மாய வார்த்தைகளால்
என் காயங்கள் ஆறவில்லை!


பருவம் வந்த குமரிப் பெண்ணாய்
கும்மாலமிட்ட நதிகளெல்லாம் - உன்
சுயநல சிந்தனையால்
கூனி குறுகி மழை தேங்கும்
குட்டைகளானதடா!


செவ்வாயில் வாழ்ந்திட
ஆராய்ந்து பார்க்கிறாய்,
நிலவிலும் உன் ஆதிக்கம் வேண்டுமென்கிறாய்,
நீ வாழும் பூமியை மட்டும்
ஏன் மறந்து போகிறாய்??


உலகம் அழியப் போகிறதாம்,
உறக்கத்தின் உலறல்களாய்
உலகெங்கும் இவ்வாண்டே இறுதியென்று
இங்கும் எங்கும் ஒரே பேச்சு!

                                - மே. இசக்கிமுத்து..

கருத்துகள் இல்லை: