திங்கள், டிசம்பர் 31, 2007

மனமெங்கும் மார்கழி!!



சுகமான குளிரில் அதிகாலை உறக்கம்
சுப்ரபாத ஒலியில் மறைந்திடும் பனியாய்!!

திருப்பாவை திருவெம்பாவை தெருவெங்கும் ஒலிக்க
தினந்தோறும் பஜனை அதிகாலை மலர்ச்சி!!

வண்ணக் கோலங்கள் வாசலெங்கும்
வரிசையாய் பூசனி பூச்சூடி வீதியெங்கும் கோலாகலம்!!

மார்கழி மாதம் மலர்களின் மகரந்த காலம்!
முகத்தினில் பனித்துளி பருக்களோடு
முந்தாநாள் பூப்பெய்த பருவப்பெண்ணாய்
அனேக பூக்களெல்லாம் நாணத்தோடு நனைந்து நிற்கும்!!


தூரத்து காட்சியெல்லாம்
பகலவனை பார்க்கும் வரை
மூடுபனியுடுத்தி முக்காடு போட்டிருக்கும்!!

தோட்டக்காடெங்கும்
தோரணங்கள் காய்கறிகள்!!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கனவுலகில் வருவதுபோல்
பச்சை உடையணிந்து பார்ப்பவரை கிரங்கடித்து
காற்றோடு கையசைக்கும் நெல்மணிகள்!!

மனதிற்கு பிடித்த மார்கழி மாதம்
மாதங்களின் சுவாசம் இது!
வசந்தத்தின் வாசல் இது!
"பா"க்களின் ராகமாய்
பூக்களின் வாசமாய்
ஊரெங்கும் உற்சாக ஊற்றாய்
மனமெங்கும் மார்கழி!!

செவ்வாய், டிசம்பர் 18, 2007

முதல் கவிதை!!


ள்ளி பருவத்தின் முதல் கவிதை
படிக்கும்பொழுதெல்லாம்
பனி விழும் மலராய் மாறுதே மனது!!



முதல் கவிதையை பிரசிவிக்க பட்ட பாடுகள்,
பல்துலக்கும் நேரம் முதல் பாய் விரிக்கும் நேரம் வரை வார்த்தை தேடல்கள் வானமென நீண்டு கொண்டது !!

சிந்தையில் சிக்குண்டு சிதறிய வார்த்தைகளை வரப்புக்குள் கொண்டுவந்து, எழுதி எழுதி அடித்து அடித்து வார்த்தை கொலைகள் வகையின்றி நடந்தேறும்!!

கனவிலும் கருவாய் வளர்ந்தது என் கவிதை!
வெயிலிலும் நிழலாய் தொடர்ந்தது என் கவிதை!
வியர்வை துளிகளெல்லாம் கவிதை துளிகளாய்!!

இருவார இறுதியில்
இனிதாய் பிறந்தது கவிதை!!
ஒருமுறை இருமுறை பலமுறை வாசித்து,
கரம் பிடித்து நடைபழகும் மழலையாய்,
மழை துளி நிலத்தில் பட்டுதெரித்ததாய்
துள்ளி குதித்தது மனம்!!

பள்ளி பருவத்தின் முதல் கவிதை
படிக்கும்பொழுதெல்லாம்
பனி விழும் மலராய் மாறுதே மனது!!

புதன், நவம்பர் 07, 2007

உறவுகள்!!

ரம்பப் பள்ளி படித்தபோது
அருகிலிருந்த சித்தப்பா வீடு தான்
விளையாட்டுக் களம் எனக்கு!
சீருடை அழுக்கேற புழுதிமண் பறக்க
சித்தப்பா பசங்களோடு
விளக்கேற்றும் நேரம் வரை விளையாட்டு விளையாட்டு!!


சனி ஞாயிறு கிழமைகளில்
சண்டையிட்டு கொடுக்காபுளி மரத்திலேறி
பழங்களை பறிப்பதும் பதுக்கி வைப்பதும்
பங்கிட்டு திண்பதும்
அத்தை பசங்களோடு அமர்க்களங்கள் ஏராளம்!!


முழு ஆண்டு விடுமுறையில்

முதல் ஆளாய் கிளம்பிடுவேன் மாமா வீட்டுக்கு!
சுட்டெரிக்கும் உச்சி வெயில்
கால் பாதங்கள் சுடசுட பட்டம் விடுவதும்
வண்ணத்துப்பூச்சியை விரட்டிப்பிடித்து வேலியில் விழுந்ததும்
கொல்லையிலே பூத்திருந்த செவ்வந்தி பூவோடு
கொடை விழாவும் நடந்திடுமே களிமண் சாமிக்கு!!


அன்றொரு நாள்,
சித்தப்பா வீட்டுக்கு செல்ல கூடாது
செல்லமாய் ஆணையிட்ட அப்பாவின் வார்த்தைகளை
அரைகுறை மனதோடு அப்படியே ஏற்றுக் கொண்டேன்!!


அத்தை மாமா சண்டையை விசாரிக்க சென்ற
அம்மாவிடமும் கோபமாம்,
மாமா வீட்டிற்கு மறுபடியும் போவதில்லை
கோபமாய் வார்த்தைகள்,
சோகமாய் நின்றிருந்தேன்!!


உருண்டோடியது வருடங்கள்
உறவுமுறை தோழமைகள்
உணர்த்துவதற்கு வழியில்லை!
அண்ணன் தம்பி, மச்சான் மதினி
அன்பான உறவுகள்
தயங்கி தயங்கி தாழிட்டு கொண்டன!!

பின் ஒருநாள் துஷ்டி வீட்டில்
அப்பாவும் சித்தப்பாவும் பேசிக்கொண்டனர்!
அன்போடு நலந்தனை நல்கிக்கொண்டனர்!

அண்ணன் மகள் திருமணத்திற்கு
அழைப்பிதழ் கொடுக்க ஆவலாய் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்!
சமையல் முதல் சடங்கு வரை சகலமும் கவனித்துக்கொண்டாள்!

உறவுகள் சேர்ந்ததில் உள்ளத்தில் மகிழச்சிதான்!
என் முறை உறவுகளோ??
சித்தப்பா மகளோ சென்னையில் வசிக்கின்றாளாம்!
மாமன் மகளுக்கு மதுரையில் வேலையாம்!
அத்தை மகனோ கொச்சியில் பொறியாளர்!

சந்தித்த போது சின்னதாய் புன்னகை!!
உறவுகளில் உயிர் இருந்தும் உறவில்லையே!!!!

செவ்வாய், அக்டோபர் 16, 2007

சொர்க்கமே என்றாலும்....

ம்மில் அனேகமானோர் வேலை நிமித்தமாகவோ அல்லது ஏதேனும் ஒரு சூழ்நிலை காரணமாகவோ சொந்த ஊரை விட்டு வேறு ஊர்களில், வேறு மாநிலங்களில் அல்லது அயல் நாட்டில் விருப்பத்தோடு அல்லது வேறு வழியின்றி வாழ்ந்துகொண்டிருப்போம்.
என்னதான் வசதிகள் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒன்றை இழந்தவர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது சொந்த ஊரின் சுகங்கள்!! எப்பொழுது நாம் சொந்த ஊருக்கு செல்வோம், எப்பொழுது நாம் நம் சொந்த பந்தங்களை, நண்பர்கள‍ பார்ப்போம் என்று நம் மனதில் ஏற்படும் ஏக்கங்களை மறக்கத்தான் முடியுமா அல்லது மறுக்கத்தான் முடியுமா?? இது மாதிரியான ஏக்கங்கள் அடிக்கடி என் மனதில் ஏற்படுவதுண்டு. தூத்துக்குடியில் இருக்கும் பெற்றோர்கள், சகோதரர்கள், சொந்தங்கள் மற்றும் நண்பர்களை பிரிந்து பெங்களுரில் இருக்கும் எனக்கே ஏதோ ஒன்றை இழந்த மாதிரியான ஏக்கங்கள் இருக்கும்போது எண்ணற்ற இலங்கை தமிழர்கள் தங்கள் தாய்நாட்டை பிரிந்து, வீட்டை பிரிந்து வருடக்கணக்காக அயல்நாடுகளில் உழைத்துக்கொண்டு என்றேனும் ஒருநாள் தாய்நாடு திரும்பும் கனவில் இருக்கும் அவர்களை பற்றி நினைக்கையில் என்றோ படித்த இந்த கவிதை நினைவுக்கு வருகிறது.
" யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா!
சுற்றம் பிராங்போட்டில்,
ஒரு சகோதிரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட
ஒட்டகம் போல் ஓஸ்லோவில்!!! "
என்ன சொல்வது, சோகங்கள் தொற்றிக்கொள்ள வார்த்தைகள் வர மறுக்கின்றன. நெடுநாள் போராட்டம் விரைவில் முற்றுபெற்று உலகத்திலுள்ள ஒவ்வொரு மூலையில் இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பி மகிழவுடன் வாழவேண்டும் என்பது தானே அனைவரின் ஆசைகள்!!!

வெள்ளி, செப்டம்பர் 28, 2007

தங்கை ஒருத்தி இருந்திருந்தால்!!

ங்கை ஒருத்தி இருந்திருந்தால்,
முற்றத்தில் முகமலர்ந்த முல்லையும் மல்லிகையும்
தினம் தினம் அவள் கூந்தலில் கும்மாளமிட்டிருக்கும்!!

கவிதையென்று நான் எழுதும் வார்த்தைகளை
விரும்பி வாசித்து விமர்சித்திருப்பாள்!!

சின்ன சின்ன என் தேவைகளை தெரிந்துகொண்டு
சிபாரிசு செய்திருப்பாள் அப்பாவிடம்!!

அம்மாவிற்கு உதவிகளை
அக்கறையாய் செய்திருப்பாள்!!
அதவல்ல இதுவென்று அடிக்கடி தன்
அண்ணியிடம் கேலி செய்து சிரித்திருப்பாள்!!

வார்த்தைகளால் அவளை வம்பு செய்யும்போதெல்லாம்
பொய் கோபம் கொண்டு பேசாதிருந்திருப்பாள்!!

தங்கை ஒருத்தி இருந்திருந்தால் - என்
சுவாச வழிகளில் மறைந்திருந்து
பாச மழையென பொலிந்திருப்பாள்!!

தங்கை ஒருத்தி இருந்திருந்தால்,
அண்ணனின் கடமைகளை அன்போடு செய்திருப்பேன்
அடுத்த பிறவியிலும் வேண்டி நின்றிருந்திருப்பேன!!

வெள்ளி, செப்டம்பர் 07, 2007

மழைக் காலம்!!

ண் வாசனை வீசி சிந்தனை மாற்றி
மிடுக்கான மின்னலுடன் இடிமுழங்க
படபடவென்று சுடசுட மேனியில் விழும்போது
இருபது வயதின் வேகம் எழுபதில் ஏறும்!
பட்டுத் தெரிக்கும் நீர்த்துளியில்
விட்டு உடையும் நீர்க்குமிழி!
கரம் பிடித்து நடைபழகும் மழலையாய்
குடை பிடித்து சாரல் மழையில் குதூகலமாய்
கும்மாளமிடும் பள்ளிப் பருவம்!
வெளுத்துக்கட்டிய அடைமழையில்
வெள்ளை ரோஜாவின் மொட்டுக்களெல்லாம்
சீக்கிரமாய் சிரித்து நிற்கும்!
மழை நின்ற நேரத்தில்
கல்கண்டு குமுதமெல்லாம்
காகித கப்பல்களாய் முற்றக் கடலில்!
மரக்கிளைகளை குலுக்கி மழையென கூறி
மகிழந்திடும் மனங்கள்!
தேங்கிய நீரில் சிறகுகளடித்து
தெருவெங்கும் அரங்கேறும் காக்க‍ை குளியல்கள்!!
மழைக்காலம் வந்துவிட்டால் மனமெங்கும் சந்தோசம் தான்!!

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2007

சிட்டுக்குருவி சிறுகதை!

நாம் சிறுவயதில் பறவைகள் மற்றும் விலங்குகள் கொண்ட கதைகளை படித்திருப்போம். பிறகு நாமும் நம் மனநிலையும் வளர வளர அதுபோன்ற கதைகளை படிக்கும் ஆர்வம் குறைந்து வருவதை உணர்ந்திருப்போம். நாம் வளர்ந்துவிட்ட பிறகு என்றேனும் ஒரு நாள் வேறு வழியில்லாமலோ அல்லது யதார்த்தமாகவோ அது போன்ற கதைகளை வாசிக்க நேரும்போது கற்பனை உலகில் கலந்துவிடுகிறோம். அதில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துகள் நம் மனதில் பசுமரத்தானிபோல் பதிந்துவிடுகிறது. சென்ற வாரம் ‍இணையத்தில் ஒரு செய்தியை தேடிக்கொண்டிருந்தபோது ஒரு குட்டிக் கதையை வாசிக்க நேர்ந்தது. வாழ்வியல் கருத்துகள் கொண்ட அந்த குட்டிக் கதை இதோ நீங்களும் வாசித்து பாருங்கள்!!
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல அது வினோதமான உணர்வுகளை மனித இனம் போன்ற இதர இனங்களிலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. இந்த உணர்வுகளைக் கலெக்ட் செய்வது தான் அதனுடைய ஹாபி!மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது விரும்பி கலெக்ட் செய்து கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு குஷி வந்து விடும். தன் பையில் பொறாமையை சேர்த்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான கலெக்ஷனாக அது வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.


மனிதர்களின் சண்டைகளில் தான் எத்தனை விதம்! பொறாமைகளில் எத்தனை புது மாதிரிகள்!!பேராசைகளின் அடிப்படையிலான வினோதமான உணர்வுளுக்கோ அளவே இல்லை.தனது கலெக்ஷனை எண்ணி மகிழ்ந்து போனது அது!இன்னும் சில நாட்களில் அதன் குட்டிப் பை வினோத உணர்வு கலெக்ஷனினால் நிரம்பித் தளும்பப் போகிறது!!


ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக மயிலிறகு போல ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால் இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.சோர்ந்து போன அது ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே.உடம்புக்கு என்ன?" என்றது."நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை! வேகமாகச் செயல் பட முடியவில்லை. எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன்.காரணமும் புரியவில்லை" என்றது.நண்பனான நாய், "அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது." அதுவா, என்னுடைய கலெக்ஷனான உணர்வுகளை வைத்திருக்கிறேன்",என்றது குருவி."அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள். எனக்குச் சொல்லேன்" என்றது நாய்." எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் கலெக்ட் செய்திருக்கிறேன்." என்றது குருவி. "அப்படியா!இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்" என்றது நாய்."சே! புரியாமல் பேசுகிறாயே! இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை"என்றது குருவி. நாய் நண்பன் விடவில்லை. "எனக்காக நான் சொல்வதைச் செய்து பாரேன்" என்றது அது.ஒத்துக் கொண்ட குருவி தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது. அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது. என்ன அதிசயம், இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது.ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது.


சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்த போது சொன்னது:-"நண்பனே! ஒரு அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்தி விட்டாய். இந்த எதிர்மறை உணர்வுகளை கலெக்ட் செய்யவே கூடாது. அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது. அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன!ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது. விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது.மனிதர்களும் இது போன்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால் அவர்களும் விண்ணைத் தொடலாமே!" சிட்டுக்குருவியின் உரையைக் கேட்ட நாய் மகிழ்ந்து. இருவரும் சிரித்த போது வானமே லேசாகி சிரித்தது போல இருந்தது.


இந்தக் கதைகள் கூறும் நீதி தான் வாழ்க்கையில் மேம்படுவதற்கான அஸ்திவாரமான உண்மைகள். எதிர்மறை உணர்வுகளை அவ்வப்பொழுது கழட்டி விட்டவாறே மனதை லேசாக ஆக்கிக் கொண்டு உழைத்துச் சம்பாதிப்பதன் மூலம் கிடைக்கும் உணவு கூழாக இருந்தாலும் கூடச் சுவையில் தேவாமிர்தத்தையும் தோற்கடிக்கும்; அத்தோடு பாரமில்லாத மனதோடு பறந்து பறந்து போய் விண்ணையே தொடலாம்; புதிய சிகரங்களைக் காணலாம்!

வெள்ளி, மே 11, 2007

இது இலங்கை வானொலி!!!

லங்கை வானொலி, எனக்கு நினைவு தெரிந்த நாளில் முதன் முதலில் நான் செவிமடுத்த வானொலி. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஆரம்பப்பள்ளி பயிலும் நாட்களில் காலை எழுந்து பள்ளி செல்லும் வரையிலும், மாலை பாடம் படிக்கும் வரையிலும் எங்கள் வீட்டின் வானொலி பெட்டியில் மத்திய அலைவரிசையில் இலங்கை வானொலி ஒலித்துக்கொண்டிருக்கும். பள்ளிவிட்டு வரும் நேரத்தில், மாலை 5.00 மணிக்கு ஒலிபரப்பாகும் பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியில் "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் , பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்... " TMSன் கனீர் குரலில் ஒலிக்கும் முகப்புப்பாடல் மனதிலோர் உற்சாகத்தையும் இனம்புரியாத குதூகலத்தையும் ஏற்படுத்திவிடும். அறிப்பாளர் அந்நிகழ்ச்சியில் வாழ்த்துக்களை படிக்கும் விதமே ஓர் தனி வகை " முதலாம் பிறந்நாளை கொண்டாடும் நிஷாந்தினியை வாழ்த்துவோர் மட்டகளப்பிலிருக்கும் அத்தை மாமா, அப்பப்பா, அப்பம்மா, கனடாவிலிருக்கும் சித்தப்பா மகேஸ்வரன் சித்தி நலாயினி.." என்று வாழ்த்துக்களை வாசிக்கும்போது என்னையறியாமல் எத்தனைமுறை நானும் அவர்களோடு சேர்ந்து வாழ்த்துவது போல உணர்ந்திருக்கிறேன் தெரியமா?


"இலங்கை வானொலி " சிறுவயதில் கற்பனையாய் என்கரம்பிடித்து இலங்கை வீதிகளில் விளையாடசெய்த தோழன் என்று தான் சொல்வேன். ஏனென்றால் இலங்கையிலிருக்கும் ஊர்களை இதன் மூலம்தான் அறிந்துகொண்டேன். தமிழகத்தில் உள்ள ஊரின் பெயர்களைவிட மாத்தளை, நீர்கொழும்பு, மட்டகளப்பு, ஆணையிரவு, கண்டி, ‍ அம்பாரை, வவுனியா, யாழ்ப்பானம் என்று இலங்கை நாட்டு ஊர்களின் பெயர்கள் தான் அப்பொழுது என் நினைவிலிருந்தவை. தமிழ் உச்சரிப்பும் பல தமிழ் வார்த்‍தைகளையும் இலங்கை வானொலி மூலமாக தான் அறிந்துகொண்டேன்.

கொழும்பு செட்டியார் வீதி "அம்பிகா நகை மாளிகை"யின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. ஞாயிற்று கிழமை மதிய வேளையில் அனேக வீடுகளில் இந்த நிகழ்ச்சி ஒலித்துக்கொண்டிருக்கும். என்னை கவர்ந்த நிகழ்ச்சிகளில் மற்றொன்று "கதையும் கானமும்" நேயர்களின் கற்பனை கதையும் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் போன்ற அறிவிப்பாளர்களின் நேர்த்தியான உச்சரிப்பு பாவமும் அதற்கேற்ற பாடல்களிலும் நான் மெய்மறந்திருந்த சமயங்கள்...

அப்பொழுதெல்லாம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரே நேரம் தான். காலை 9.00 மணிக்கு நெல்லை வானொலியின் நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் அனேக இல்லங்களிலும் இலங்கை வானொலி ஒலிக்கத் தொடங்கிவிடும். அதில் கூறப்படும் நேர அறிவிப்பை வைத்துதான் பெண்கள் மதிய சமையல் வேலைகளை தொடங்குவார்கள்.. இப்படியாக தமிழகத்தின் ‍தென் மாவட்ட கடலோர ஊர்களிலுள்ள மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த இலங்கை வானொலியின் ஒலிபரப்பு திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி சில நாட்களில் முற்றிலுமாக எங்களை விட்டு பிரிந்து சென்றது. தொழில்நுட்ப கோளாறு என்றார்கள் சிலர் வேறு பிரச்சணை என்றார்கள்...சில வருடங்கள் கழித்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் "இந்தியாவிற்கான வர்த்தக ஒலிபரப்பை" ஆரம்பித்தது, ஆனால் அதில் அதிக அளவில் இந்திய விளம்பரங்களே இடம் பிடித்து கொண்டதால் எங்களின் மனங்களை தக்க வைக்க தவறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போதுகூட சில சமயங்களில் சிற்றலை வரிசையில் இலங்கை வானொலி கேட்க நேரும்பொழுது ஒலியோடு சேர்ந்து சிறுவயது ஞாபகம் சில்லென்று வந்து போகும்!!!

வியாழன், மே 03, 2007

நல்ல மனம் வாழ்க!!!

சென்ற மாதம் 19.04.2007 அன்று இரவு தூத்துக்குடி செல்வதற்க்காக பெங்களுர் ரயில் நிலையத்தில் 7வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தோம். மழை வேற பெய்துகொண்டிருந்தது. என்னுடைய 3 வயது பையன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான். அவனை ஒரு இடத்தில் உட்கார வைப்பதே பெரிய வேலையாக இருந்தது எனக்கு. ரயில் வந்து பிறகு அவனை தூங்க வைக்கும் வரை...அப்பப்பா.... மைசூரிலிருந்து பெங்களுக்கு 9.15க்கு வரவேண்டிய மைசூர் = தூத்துக்குடி விரைவு ரயில் 10.00க்கு வந்தது. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரயில் தாமதமாக வருவதில் அதிர்ச்சி ஒன்றுமில்லை அது வழக்கமாக நடக்கிற நிகழ்வு தான். ஆனால் 7வது பிளாட்பாரத்திற்கு வரவேண்டிய ரயில் 6வது பிளாட்பாரத்தில் வந்துகொண்டிருந்தது. ரயில் வரும் நேரத்தில் தான் இந்த மாற்றத்தை அறிவித்தார்கள். எல்லோரும் 6வது பிளாட்பாரம் நோக்கி ஓடினார்கள். எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை எனென்றால் 7வது பிளாட்பாரத்தில் இருந்து 6வது பிளாட்பாரம் செல்ல வேண்டுமென்றால் 7வது பிளாட்பாரம் முடியும் வரை வந்து ரயில்வே பாதையை கடந்து வரவேண்டும் அல்லது 7வது பிளாட்பாரத்தில் இருக்கும் படிகளில் ஏறி பின்பு 6வது பிளாட்பாரத்தில் இறங்க வேண்டும். மூன்று ‍பைகளை தூக்கிக்கொண்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு.. என் மனைவிக்கு கண்ணீர் வராத குறைதான். எப்படியோ சமாளித்துக்கொண்டு மெதுவாக நடக்கத்தொடங்கினோம்..அப்பொழுது கடவுள் வந்த மாதிரி ஒருவர் தான் வைத்திருந்த பையை தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு என்னிடம் இருந்த ‍ஒரு பையையும் என் மனைவியிடம் இருந்த ஒரு பையையும் வாங்கிக்கொண்டு வந்தார். ஏ.சி கோச்சில் அவருடைய மனைவியையும் மகளையும் அமர வைத்துவிட்டு எங்களிடம் "நீங்க எந்த கோச்சு" என்று கேட்டார். "பரவாயில்லை சார் ரொம்ப நன்றி எஸ்.2 பக்கத்தில் தான் இருக்கு நாங்க போயிடுறோம"் என்றேன். "பரவாயில்லை, உங்க சீட்டுல கொண்டு தர்றேன"் என்று கூறிக்கொண்டு எங்கள் இருக்கையில் பைகளை வைத்துவிட்டு. "சரி தம்பி நான் வர்றேன் "என்றார். " சார் நீங்க எங்க போறீங்க, உங்க பெயர் என்ன ?"என்றேன். அவருடைய பெயர் சுப்புராமன் என்றும் மதுரைக்கு செல்வதாகவும் கூறினார். ரொம்ப நன்றி சார் என்றேன். " நல்லது தம்பி" என்று புன்னகைத்துவிட்டு அவருடைய கோச்சுக்கு சென்றார். இன்றைய அவசர காலத்தில் மற்றவர்களை பற்றி கவலை பட நேரம் இல்லாமல் இருக்கும் மனிதர்களின் மத்தியில் சுப்புராமன் போன்ற நல்ல மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருந்தது எனக்கு. அந்த நல்ல மனம் படைத்தோர்கள் என்றும் வாழ்க!!!

புதன், ஏப்ரல் 11, 2007

அழகின் புலம்பல்!!

‍அன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள்
எத்தனை நாழிகைதான் வீட்டுக்குள்ளே விழுந்துகிடப்பது
எதைஎதையயோ நினைத்துக்கொண்டு!
கடற்கரையயோரம் காலார நடந்தால்
கவலைகள் காணாமல் ‍ போய்விடுமாம்,
கவலைகளை மறக்க, கற்பனையில் மிதக்க
கடற்கரையை நோக்கி நானும்‍ சென்றேன்!!

மாலை இதவேளை கடற்கரை மனலில்
மனம் பதித்து, புல்வெளியில் தலைசாய்த்து
இதமான ‍தென்றலுடன் இன்புற்றிருந்த என்னை
அழைத்ததொரு குரல்!
யாரடா அதுவென்று யோசிக்கும் வேளையில்
"நான் தான் மெரீனா" என்றாள் மெதுவாக என் காதினில்!
ஆச்சரியமாய் அதிசயித்துப் போனேன்!!

"கனிவான உன் முகம் கலையிழந்து காண்கிறதே
கவலைகொண்ட கன்னிபோல"
"ஆமென்றாள்" அக்கறையுடன்!!

"வேளைக்கு வேளை அழகுற மின்னும்
பருவப்‍பெண்ணாய் ‍ ெஜாலிக்கின்றேன் நானும்,
இருப்பினும் நெருஞ்சிமுள்ளாய் நெஞ்சிலோர் நெருடல்,
சொல்வதற்குத் துடிக்கின்றேன், கேட்பதற்கு யாருமில்லை,
நெடுநாளாய் தேடுகிறேன் நீயாவது கேட்பாயா?"
நேசத்துடன் நெருங்கினாள்!!

"பருவப்பெண்ணின் பைந்தமிழ் மொழியை
கேட்பதற்கு மறுப்புக்கூறும் மானிடருண்டோ?
மனிடருக்கு மட்டும்தான் மனக்கவலை உண்டென்று
மனதில் நினைத்திருந்தேன், மனந்திறந்து சொல் பெண்ணே
உன் மனக்கவலை தீரமட்டும் "
சற்றே எழுந்து நானும் அமர்ந்துகொண்டேன்!!
நேர்எதிரே அமர்ந்துகொண்டாள்
காற்றில் கலைந்த கருங்கூந்தலை சரிசெய்தபடி!!

என்னை நம்பித்தான் எத்தனையோேபரின் வாழ்க்கை
ஏததோ செல்கிறது ஏரியில் ஏறிய ஓடம் போல!
சுண்டல் விற்கும் சுட்டிப்பையன்,
பெட்டியிலிருக்கும் சுண்டல் தீர்ந்தால்தான்
ஒட்டியிருக்கும் வயிற்றுக்கு ஒருவேளை உணவுண்டு!
வெயிலென்றும் சுடுமணலென்றும் பாராமல்
வெறுந்தலையில் அவன் சுமப்பது சுண்டல் மட்டுமல்ல,
விடைதெரியா வாழ்க்கையையும் சேர்த்துதான்!!

மூன்றை வீட்டில் விட்டுவிட்டு
நான்காவதை இடுப்பில் இடுக்கிக்கொண்டு
இங்குமங்கும் கூடையுடன் கூடும் கூட்டத்தினுடே
பூ விற்கும் ராமக்கா!!

சைக்கிளிலிருக்கும் "டீ"யை தீருமட்டும் விற்காமல்
வீடுபோய் சேர்வதில்லை வீராப்பாய் சுற்றிவரும் வெள்ளையன்!
இவர்கள் மட்டுமல்ல,
கூட்டத்ததோடு கூட்டமாய் மறந்திருக்கும்போது
மறக்காமல் பணம் பறிக்கும் பாதகர்களுக்கும் நானே அடைக்கலம்!!

உணவிற்கே வழியில்லை உடைகளை பற்றிய கவலை எதற்கென்று
கையேந்திய களைப்பில் பிச்சைக்காரர்கள்
நேற்றுண்ட ரொட்டியின் நினைப்பில் நித்திரையில்!!

கவலைக்கு மருந்தென்றும்
ஆறுநாள் உழைப்பின் அலுப்பிற்கு ஆறுதலென்றும்,
சொர்க்கத்திற்கு வாயிலென்றும்
மதுவுண்டு தன்நிலை மறந்து மயங்கிக் கிடக்கும் மனிதர்கள்!!

ஆயிரம் பிரச்சனைகளால் அல்லாடித்திரிந்து
மன அமைதியை தேடி, மனக்கவலை மறந்து மனலில் அமர்ந்து
ஏக்கத்துடன் எதைஎதையோ நினைத்து
பெருமூச்சிவிடுவர் சிலர்!!

நேரம் கிடைக்கவில்லை என
நிதமும் புலம்பும் மனிதர்களிடையே
அலுவல்கள் பல இருந்தும் நேரம் போகவில்லை என்று
சோம்பலுக்கு புதிய அர்த்தம் கூறும் சிலர்!!

வளமான வாழ்வுக்கு வாயில்
சென்னையில் உள்ளதென எண்ணி
அஞ்சரை பெட்டியில் அப்பாவுக்கு தெரியாமல்
ஐந்தைந்தாய் சேர்த்து வைத்த அம்மாவின் பணத்தை
அப்படியே எடுத்துக்கொண்டு
ஆயிரம் கனவுகளோடு ஓடி வந்தவர்கள்
வேலை தேடி தேடி வியர்வைதான் மிச்சமென உணர்ந்தவர்கள்
சொந்த ஊர்போய் சேரலாமா, போராடி வாழலாமா?
முடிவெடுக்கும் முயற்சியில் முழுவதுமாய் மறந்தவர்கள்!!

வீட்டில் நிறுத்திய சண்டைகளை தொடர
தோதான இடமாக நான் சிலருக்கு!
குழந்தைகளை ஏமாற்றிவிட்டு
குதுகலமாய் சுதந்திரகாற்று வாங்க,
குழந்தைகளை கூட்டிவந்து விளையாட விட்டுவிட்டு
வீட்டுப்பிரச்சணையை விவாதிக்க
தம்பதிகள் இங்கு வருவதுண்டு!! ‍

காதலென்று கூறிக்கொண்டு கைகோர்த்து
எதைஎதையோ பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும்,
சின்னதாய் சினுங்கிக்கொண்டும்,
இவர்கள் பள்ளியில் பயில்பவர்களா இல்லை கல்லூரி செல்பவர்களா?
குழம்பியிருக்கிறேன் அடிக்கடி!!
இளசுகளின் இளமைதுள்ளும் இந்த காட்சிக்காக
கூடுமொரு கூட்டம் அந்திப்பொழுதினில்
சிறியதாய் உள்ள சுவர்களின்மேல் கையில் சுண்டலலோடு!!

உண்டுவிட்டு உதறிய உறைகளையும்
கண்ணாடி காகிதங்களையும் ஜீரணிக்க முடியாமல் எத்தனைமுறை
கண்கலங்கியிருக்கிறேன் தெரியுமா?
பாசங்கொண்ட கடலன்னை
அலைக்கரத்தால் நொடிக்கொருமுறை என்னை
சுத்தப்படுத்திய போதிலும்
சுயநல மனிதர்களால் அசிங்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறேன்!!

அரசியல் அறிக்கைகளும்
ஆன்மீக வேதங்களும் அத்துப்பிடி எனக்கு, ஆம்
அரசியல் கூட்டமா? ஆன்மீக ஆராதனையா?
அத்தனைக்கும் அடைக்கலம் நானே!!

கூட்டணி உதயமென்று கட்டியணைத்து கையசைத்து
கற்கண்டு சொற்களால் ஒருவரையொருவர் புகழ்ந்துகொள்வர்,
அடுத்த நாளே, கூடிக்களித்த நண்பர்கள்
குற்றங்கள் குறைவின்றி அள்ளி வீசுவர் குப்பை வார்த்தைகளால்
கூட்டணி முறிந்ததாம்!!
தேர்தல் திருவிழா என்றால் தொலைந்தது என் நிம்மதி!!

கடவுள் கடவுளென்று கண்விழித்து
கைதட்டி நடக்குமாரு கூட்டம்,
எங்கடா கடவுளென்றும், எல்லாம் கற்பனையென்றும்
எக்காளமாய் கூடும் மற்றொரு கூட்டம்
இரண்டிற்கும் கைதட்டி ஆர்பரிக்கும் மக்களுண்டு!
சிந்திக்க மறந்த மனிதர்களின் மீது
மலையென கவலை என் மனதிலுண்டு!!

மலையென்றாலும் வெயிலென்றாலும்
மலைக்காமல் சிலைகளாய்
வரிசையாய் அணிவகுக்கும் தலைவர்கள்!
சுதந்திர தினத்தன்றும் பிறந்தநாளன்றும் தான்
சுயநலவாதிகளால் சுத்தப்படுத்தப்படுகிறார்கள்!!

சுனாமி வந்துபோன சுவடுகளை
அழிக்க முடியாமல் அழுது புலம்புகின்றேன் பலநாள்!
அந்த கருப்பு ஞாயிறின் கண்ணீர் கதறல்களை
மறக்கத்தான் முடியுமா?

"இன்னும் சொல்வதென்றால்
இருக்கிறது ஆயிரம் கவலைகள்
இருட்டாகிவிட்டதால் போதும் இன்றைக்கு"
கண்களை துடைத்துக்கொண்டாள் கலக்கத்‍தோடு!
"வருகிறேன்" என்றேன் பிரியா மனதுடன்!
"கடைசியாக ஒரு கேள்வி,
என் கவலைகள் தீர வழி ஒன்று சொல்" என்றாள்
"பேரூந்து வந்துவிட்டது நாளை சொல்கிறேன், வருகிறேன் இப்பொழுது"
நைசாக நழுவிக்கொண்டேன், நடைமுறை இதுதானே!!

இன்றும்கூட சென்னை சென்றால்
மெரீனா என்றால் கொஞ்சம் பயம் தான்!!

திங்கள், மார்ச் 26, 2007

மனிதாபிமானம்!!!

சென்ற வாரம் நான் பெங்களுர் இந்திராநகர் காவல் நிலையம் அருகில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் மீது பின்னால் வந்த ஸ்கூட்டர் லேசாக இடித்துவிட்டது. இரண்டு வாகனங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதன் பின் நடந்த நிகழ்ச்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கா‍ரை ஓட்டி வந்த நன்றாக உடையணிந்த நடுத்தர வயது மனிதர் உடனே இறங்கி வந்து ஸ்கூட்டரில் இருந்த இளைஞரை "பளார் " என்று கன்னத்தில் அடித்துவிட்டு வாயில்வந்தவாறு திட்டுகிறார். அந்த இளைஞருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எல்லோரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இளைஞரது முகத்தை பார்க்கவே பரிதாபமாகயிருந்தது. எதுவும் பேசாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்.

காரில் வந்தவருக்கு கோபம் வருவது தப்பில்லை ஏனென்றால் தன்னுடைய புதிய காரை இடித்துவிட்டான். தவறு யார்மேல் இருந்தாலும் அதனால் ஏற்படும் கோபத்தை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தியிருக்கலாம். அந்த
இளைஞன் திருப்பி அடித்திருந்தால் அந்த நிகழ்ச்சி கொஞ்சம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் அவன் என்ன நினைத்திருந்தானோ ‍தெரியவில்லை அமைதியாக சென்றுவிட்டான்.

பெங்களுர் போன்ற தகவல்தொழிலநுட்ப நவீன நகரத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி எங்கோ செல்கிறது. எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும் மக்களின் மனங்கள் மட்டும் தன்னலத்தைவிட்டுவிட மறுக்கின்றன. பெங்களுர் நகர வீதிகளில் வளர்ந்துவரும்
தகவல்தொழிலநுட்பத்தோடு வசதி வாய்ப்பிற்கு ஏற்றாற்போல் மக்களும் தங்களின் நடை உடை தோற்றங்களை மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். ஆகட்டும் அதை நான் இப்பொழுது குற்றம் கூறுவதற்கில்லை, ஆனால் அவர்களின் வெளிதோற்றத்திற்கு ஏற்றாற்போல் உள்மனங்களை ஏன் மாற்ற மறந்துவிடுகிறார்கள். இன்றைய மக்களின் மனங்களில் மனிதாபிமானம் என்ற உணர்வு மங்கிபோய்விட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.

செவ்வாய், மார்ச் 20, 2007

நிலாச்சோறு!!!


நிலாச்சோறு என்றவுடன் நம் எல்லோருக்கும் சிறுவயது ஞாபகம் வருவது இயற்க்கை. நாம் சோறு சாப்பிட மறுக்கும் ‍ஒவ்வொரு முறையும் அம்மா நமக்கு நிலவை காட்டி அதில் ஓளவை பாட்டி கம்பு வைத்துக்கொண்டு ‍வெற்றிலை சாப்பிட்டு கொண்டு இருப்பதாக கதை சொல்லி நமக்கு சோறு ஊட்டுவாள். பிறகு அமாவாசை நாட்களில் கூட நிலவை காட்டினால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து அழுத நாட்கள்...

கொஞ்சம் வளர்ந்த பின்பு நாம் நம் நண்பர்களோடு சேர்ந்து வீட்டு முற்றத்தில் கூட்டாஞ்சோறு சாப்பிட்ட பிறகு ஆளுக்கொரு கதை சொல்லி விளையாண்ட நாட்கள், மறுநாள் புதிதாக கதை சொல்வதற்காக அப்பாவிடம் கதை சொல்ல சொல்லி அடம்பிடித்த நாட்கள், நிலவொளியில் பக்கத்து வீட்டு பசங்களோடு சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடி பள்ளிக்கூட வீட்டுப்பாடத்தை செய்ய மறந்து கணக்கு வாத்தியாரிடம் பிரம்படிபட்ட பசுமையான நாட்கள், பிறகு வீட்டின முற்றத்தில் கட்டிலில் தம்பிகளோடு சேர்ந்து நிலவை ரசித்தபடி ஏதேதோ பேசி மகிழ்ந்து அப்படியே தூங்கிபோன நாட்கள்.. முழுநிலா காலங்களில் நிலவொளியில் படுத்தபடி நெல்லை வானொலியின் நிலா பாடல்களில் நி‍ைனவை மறந்த நாட்கள்...

‍அப்பப்பா..நிலவோடு இணைந்த நினைவுகள் இன்னும் ஏராளம்.. நிலவே சிறுவயது நினைவுகளை என் சிந்தைக்கு கொண்டு வந்து செல்லும் ‍உன்னோடு பயணிக்கையில் இந்த உலகத்தையே மறக்கின்றேன்!!!